

புதன்கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் ஹனுமன் ஜயந்தித் திருநாளிலும் அனுமனை மனதார வழிபடுங்கள். சுந்தர காண்டம் பாராயணம் செய்து வழிபடுங்கள். மங்கல காரியங்களையெல்லாம் நடத்திக் கொடுப்பார் அனுமன். பிரிந்த தம்பதியையும் ஒன்று சேர்த்து அருளுவார் ராமபக்த ஆஞ்சநேயர்.
உலகை இயக்கும் பஞ்ச பூதங்களையும் வெற்றி கண்டவர் என்ற பெருமைக்கு உரியவர் அனுமன். . பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவின் புதல்வன், பஞ்சபூதங்களில் ஒன்றான சமுத்திரத்தைத் தாண்டியவர், பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாய மார்க்கமாக இலங்கையைச் சென்றடைந்தவர், பஞ்ச பூதங்களில் ஒன்றான பூமாதேவியின் மகளான சீதையைக் கண்டவர், ‘கண்டேன் சீதையை’ என்று உரைத்தவர். நெருப்பால் இலங்கை தேசத்தை நடுநடுங்க வைத்தவர் என்று பஞ்ச பூதங்களை வென்றவர் ஆஞ்சநேயப் பெருமான்!
அனுமனுக்கு சுந்தரன் என்றொரு திருநாமமும் உண்டு. சுந்தரன் எனப்படும் அனுமனை, புதன் கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் வணங்கி வழிபட்டு வந்தால், வாழ்வில் சகல துன்பங்களில் இருந்தும் விடுபடலாம். சங்கடங்கள் அனைத்தும் மாறி சந்தோஷம் பெருகும். துக்கங்கள் அனைத்தும் பறந்தோடும் என்பது ஐதீகம்.
‘அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆருயிர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவனெம்மை அளித்துக் காப்பான்’
பஞ்சபூதங்களையும் வென்றவர் என்பது ராமாயணத்தில் அனுமனுக்கு கிடைத்த பெருமை! சுந்தரன் என்ற இயற்பெயரைக் கொண்ட அனுமனைப் பற்றியும், அவரது பராக்கிரமங்களைப் பற்றியும் கூறுவது என்பதால், அந்த பகுதிக்கு ‘சுந்தர காண்டம்’ என்று பெயர் அமைந்தது. ராமாயணத்தில் சுந்தர காண்டம் மிக மிக முக்கியமானது. வாழ்வில் ஏதேனும் துக்கமெனில், மனதில் ஏதேனும் கலக்கமெனில், நினைத்த காரியம் தடையாகிக் கொண்டே இருக்கும் சூழலில், சுந்தரகாண்டம் பாராயணம் செய்து அனும பகவானை வேண்டிக்கொண்டால் போதும்...
கலியுகத்தில் சகல தோஷங்களையும் களைந்தெறியும் வல்லமை, சுந்தர காண்ட பாராயணத்திற்கு உண்டு என்கிறார் வெங்கடேச பட்டாச்சார்யர்.
புதன்கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் ஹனுமன் ஜயந்தித் திருநாளிலும் அனுமனை மனதார வழிபடுங்கள். சுந்தர காண்டம் பாராயணம் செய்து வழிபடுங்கள். மங்கல காரியங்களையெல்லாம் நடத்திக் கொடுப்பார் அனுமன். பிரிந்த தம்பதியையும் ஒன்று சேர்த்து அருளுவார் ராமபக்த ஆஞ்சநேயர்.
12.1.2021 செவ்வாய்க்கிழமை அனுமன் ஜயந்தித் திருநாள்