Last Updated : 11 Jan, 2021 08:31 PM

 

Published : 11 Jan 2021 08:31 PM
Last Updated : 11 Jan 2021 08:31 PM

ஜெய் அனுமன் ; ராகு தோஷம், சனி தோஷம் போக்குவார் அனுமன்! 

அனுமனைத் தொடர்ந்து வழிபட்டு வந்தால், ராகு தோஷமெல்லாம் நீங்கிவிடும். சனி பகவானின் கோபப் பார்வையில் இருந்து தப்பிவிடலாம். அதுதான் அனுமனின் பலம் என்று போற்றுகின்றனர் பக்தர்கள். நாளை செவ்வாய்க்கிழமை 12.1.2021 அனுமன் ஜயந்தித் திருநாள்.

குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் செய்தால், ‘அதோ பார் நிலா’ என்று சந்திரனை அந்தக் குழந்தைக்கு வேடிக்கை காட்டி உணவை சாப்பிட வைப்பார்கள் பெண்கள். அழகான நிலாவையும் வெளிக்காற்றையும் சுவாசிக்க நேரும் குழந்தைகள் அடம் பண்ணாமல் சமர்த்தாக உணவை சாப்பிட்டு விடும் . சம்பந்தப்பட்ட அம்மாக்களுக்கும் இது சந்தோஷத்தைத் தரும்.

சாதாரண குழந்தைகளுக்கு நிலா விளையாட்டுப் பொருள் என்றால், ராமதூதனான அனுமனுக்கு சூரியன் விளையாட்டுப் பொருள் ஆனது. அதுவும் எப்படி? பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழம் போல் காட்சி தந்த சூரியனை அடுத்த கணமே தன் கையில் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை அனுமனுக்கு.

அனுமன் கைக்குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தபோது வானத்தில் செக்கச்செவேல் என்று ஒரு பழம் போல் ‘ஜிவுஜிவு’ என்று தோற்றமளித்த சூரியன், அவரை மிகவும் கவர்ந்து விட்டது. மனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரியனை, சாப்பிடுவதற்கு உகந்த ஒரு பழம் என்று நினைத்து விட்டார் அனுமன். வாயுபுத்திரன் அல்லவா ? அடுத்த கணமே அது தன் கையில் வந்து விட வேண்டும் என்று விரும்பினார். வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார்.

பிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தை, சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர். வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை.

அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டுபண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால், அனுமன் சென்ற வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை. சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த ரேசில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப் போனார். இந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான். அதாவது, தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ , அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார்.

இந்த உணவுப் பண்டம் எப்படி இருக்க வேண்டும் என்றும் ராகு பகவான் அனுமனிடம் சொன்னார். அதாவது தன் உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார். அதைதான் உளுந்தினால் ஆன மாலைகளாகத் தயாரித்து அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம்.

ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர் உளுந்து தானியத்தால் ஆன வடை மாலைகளை அனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகி விடும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

அனுமன் ஜயந்தித் திருநாளில், அனுமனை ஆத்மார்த்தமாக வழிபடுவோம். துளசி மாலை சார்த்தி, வெற்றிலை மாலை சார்த்தி வேண்டுவோம். சகல ஐஸ்வர்யங்களையும் தருவார் அனுமன். இழந்ததையெல்லாம் மீட்டருளுவார் ஆஞ்சநேயர். ராகு முதலான தோஷங்களைப் போக்கி அருளுவார். சனி தோஷ பாதிப்பில் இருந்து நம்மைக் காத்தருளுவார்.

நாளை 12.1.2021 செவ்வாய்க்கிழமை அனுமன் ஜயந்தித் திருநாள்.

ஜெய் அனுமன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x