

பரிக்கல் லக்ஷ்மி நரசிம்மரை, ஆஞ்சநேயர்களை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். தடைப்பட்ட காரியங்களை ஈடேற்றிக்கொடுக்கும் தலத்துக்கு வாருங்கள்.
தமிழகத்தில், நரசிம்ம க்ஷேத்திரங்களில் மிக முக்கியமான க்ஷேத்திரம் விழுப்புரத்திலும் விழுப்புரத்தைச் சுற்றிலுமாக நரசிம்ம க்ஷேத்திரங்கள் உள்ளன. இவற்றில், பரிக்கல் நரசிம்ம திருத்தலம் முக்கியமானதொரு திருத்தலம்.
லக்ஷ்மி நரசிம்மராக, சாந்த மூர்த்தியாக அருள்பாலிக்கும் இந்தத் தலம், புராண - புராதனப் பெருமைகள் கொண்ட தலமாகப் போற்றப்படுகிறது.
பண்டைய காலத்தில் பூஜைகளும் வழிபாடுகளும் சிறப்புற நடைபெற்று வந்தாலும் நடுவே சிலகாலம் ஆலயம் பூஜைகள் இல்லாமல், பராமரிப்பு இல்லாமல் போய்விட்டதாம். புற்று வளர்ந்து முழுவதும் வழிபாடே இல்லாத நிலை ஏற்பட்டதாம்.
அந்த சமயத்தில் இந்த ஊருக்கு அருகில் உள்ள கிராமத்தில் வாய் பேச முடியாதவரின் கனவில் தோன்றினார் பெருமாள். ‘நரசிம்மர் விக்கிரகம் புற்றில் மறைந்திருக்கிறது. அதை எடுத்து பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள்’ என அசரீரியாகச் சொல்லி அருளினார் பெருமாள். விடிந்ததும்... அந்த வாய் பேச முடியாதவர், பெருமாள் சொன்னதை எல்லோருக்கும் சொல்ல, அதிர்ந்து அதிசயித்துப் போனார்கள்.
இதையடுத்து, லட்சுமி நரசிம்மர் ஆலயத்தைப் புனரமைத்து வழிபடத் தொடங்கினார்கள் பக்தர்கள்.
மூலஸ்தானத்தில் லட்சுமி நரசிம்மரும், தனி சந்நிதியில் ஸ்ரீகனகவல்லித் தாயாரும் அருள்பாலிக்கின்றனர். தன் மடியில் லக்ஷ்மித் தாயாரை அமர்த்திக் கொண்டு, அற்புதத் தரிசனம் தரும் லக்ஷ்மி நரசிம்மரை மனதார வழிபட்டால், மங்கல காரியங்களை நடத்தித் தந்தருளுவார் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
பிரகாரத்தின் வாயு மூலையில் வாயுமைந்தனான அனுமன், வீர ஆஞ்சநேயராகவும், பக்த ஆஞ்சநேயராகவும் அருள்பாலிக்கிறார். பக்தர்கள் இவருக்கு முன்னால் நவதானியம் மற்றும் நெல்லை கொட்டி அதில் தங்கள் கோரிக்கைகளை எழுதி வழிபாடு செய்கின்றனர். இதனால் தங்கள் கோரிக்கைகள் விரைவில் தீரும் என்பது நம்பிக்கை.
பரிக்கல் லக்ஷ்மி நரசிம்மரை, ஆஞ்சநேயர்களை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். தடைப்பட்ட காரியங்களை ஈடேற்றிக்கொடுக்கும் தலத்துக்கு வாருங்கள்.
அனுமன் ஜயந்தித் திருநாள் 12.1.2021 செவ்வாய்க்கிழமை.