Last Updated : 11 Jan, 2021 03:15 PM

 

Published : 11 Jan 2021 03:15 PM
Last Updated : 11 Jan 2021 03:15 PM

மார்கழி அமாவாசையில் முன்னோர் வழிபாடு; சந்ததி சிறக்கச் செய்யும் முன்னோர் ஆராதனை! 

மார்கழி மாத அமாவாசையில், முன்னோர் வழிபாடுகளைச் செய்வோம். நம் சந்ததியை, தலைமுறையை சிறக்கச் செய்வார்கள் முன்னோர்கள். நாளை 12.1.2021 செவ்வாய்க்கிழமை, அமாவாசை.

ஆலய வழிபாடு செய்வது மிகவும் முக்கியம் என்கிறது நம்முடைய சாஸ்திரம். இஷ்ட தெய்வ வழிபாடு என்பதை மிகவும் சிரமேற்கொண்டு செய்கிற பக்தர்கள் இருக்கிறார்கள். வாழ்வில் ஏதேனும் சோகமோ வருத்தமோ ஏற்பட்டால், கஷ்டமோ கவலையோ ஏற்பட்டால், உடனே இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்வார்கள். அந்த ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவார்கள்.

அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது போல், இஷ்ட தெய்வ ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது போல், முக்கியமானதொரு வழிபாடாக குலதெய்வ வழிபாட்டைச் சொல்லுவார்கள்.

வீட்டில் ஏதேனும் முக்கிய நிகழ்வுகள் நடக்கும் வேளையில், குலதெய்வ வழிபாட்டை அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். வருடத்துக்கு இரண்டு முறையேனும் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று, குடும்ப சகிதமாக வழிபாடுகள் மேற்கொள்ளவேண்டும். குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்து செய்து வரவேண்டும் என அறிவுறுத்துகிறார்கள் ஆச்சார்யர்கள்.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, முன்னோர் வழிபாட்டை ஒருபோதும் செய்யாமல் இருக்கக் கூடாது என வலியுறுத்துகிறது சாஸ்திரம். முன்னோர் வழிபாட்டைச் செய்யாவிட்டால், பித்ருக்களின் சாபத்துக்கும் கோபத்துக்கும் ஆளாக நேரிடும் என்றும் விவரிக்கிறது சாஸ்திரம்.

வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் உள்ளன. அதாவது 96 முறை முன்னோர் வழிபாடு செய்யவேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம். மாதந்தோறும் வருகிற அமாவாசை, ஒவ்வொரு மாதமும் வருகிற தமிழ் மாதப் பிறப்பு, கிரகண காலங்கள், புரட்டாசி மகாளய பட்சம் எனப்படும் பதினைந்து நாட்கள் என மொத்தம் 96 தர்ப்பணங்கள் உள்ளன. 96 முறை பித்ருக்களை நினைக்க வேண்டும், வணங்க வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

முன்னோர் வழிபாட்டில் குறையேதும் இல்லாமல் இருந்தால், நாமும் நம் சந்ததியும் சீருடனும் சிறப்புடனும் செழிப்புடனும் வாழலாம்.

அமாவாசை நாள் என்பது முன்னோர்களுக்கான நாள். முன்னோர் வழிபாட்டுக்கு உரிய நாள். இந்தநாளில், முன்னோர்களுக்கு அவர்களின் பெயர் சொல்லி, எள்ளும் தண்ணீரும் விடவேண்டும். அவை முன்னோர்களுக்கு உணவாகவும் தாகத்த்தை தணிப்பதாகவும் பயன்படும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

நாளைய தினம் 12ம் தேதி செவ்வாய்க்கிழமை அமாவாசை. மார்கழி மாதத்தின் அமாவாசை. இந்த நாளில், மறக்காமல் முன்னோர் வழிபாட்டைச் செய்யுங்கள். முன்னோர்களின் படங்களுக்கு தீப தூப ஆராதனை செலுத்துங்கள். முன்னோர்களின் நினைவாக நான்கு பேருக்கேனும் உணவுப்பொட்டலம் வழங்குங்கள்.

நம்மையும் நம் சந்ததியையும் சிறக்கச் செய்யும் முன்னோர் வழிபாட்டை அவசியம் மறக்காமல் மேற்கொள்வோம். முன்னோரின் பரிபூரண ஆசியைப் பெறுவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x