அனுமனுக்கு வெண்ணெய்; அனுமனுக்கு வடைமாலை!
அனுமன் ஜயந்தி நன்னாளில், அனுமனை ஆராதிப்போம். அனுமன் சாலீசா பாராயணம் செய்து வழிபடுவோம். அனுமனுக்கு வடைமாலை சார்த்தியோ வெண்ணெய் சார்த்தியோ அனுமனை மனதாரப் பிரார்த்தித்துக் கொள்வோம். நாளை 12.1.2021 செவ்வாய்க்கிழமை அனுமன் ஜயந்தித் திருநாள்.
தைரியத்துடனும் நிதானத்துடனும் பயமில்லாமலும் குழப்பமில்லாமலும் வாழ வேண்டும் என்றுதான் எல்லோருமே ஆசைப்படுகிறோம். இவை அனைத்தையும் தந்தருளுபவர் ஸ்ரீஅனுமன். இழந்த பதவியையும் இழந்த சகலத்தையும் தந்தருளுபவர் அனுமன்.
அனுமன் வழிபாடு எளிய வழிபாடுதான். ஆனால் சக்தி மிக்க பலன்களையெல்லாம் தந்தருளக்கூடியது. நாமெல்லாம் அனுமனை கைகூப்பி வணங்கிக்கொண்டிருக்கிறோம். அனுமனோ, தன் நாயகன் ஸ்ரீராமரை எப்போதும் கைக்கூப்பி வணங்கியபடியே காட்சி தருகிறார். அதனால்தான் அரை பக்த அனுமன் என்று போற்றுகிறோம். ஸ்ரீராம பக்த அனுமன் என்று கொண்டாடுகிறோம்.
வாயு பகவானுக்கும் அஞ்சனா தேவிக்கும் மகனாக அவதரித்த ஆஞ்சநேயர், குழந்தையாக இருந்த போது வானில் தோற்றமளித்த சூரியனை பழம் என்று நினைத்து பறிக்க நினைத்தார். வாயுவின் புத்திரன் அல்லவா?. அவர் எட்டிப்பிடிக்க எகிறி குதித்த வேகத்தில் வானில் பறக்கத் தொடங்கினார்.
சூரியனையே விழுங்குவதற்காக வாயு புத்திரன் பறந்து செல்வதைக் கண்டு தேவர்கள் அனைவரும் திகைத்துப் போனார்கள். அப்போது இந்திரன் தன் வஜ்ஜிராயுதத்தை வீசி ஆஞ்சநேயரை தாக்கினான். அதில் அவரது தாடை ஒடுங்கியது. இதன் காரணமாக சுந்தரன் என்ற இயற்பெயர் கொண்ட ஆஞ்சநேயர், அனுமன் என்று அழைக்கப்பட்டார்.
பால அனுமன் சூரியனை பிடிப்பதற்காக வானில் பறந்து கொண்டிருந்த அந்த நேரத்தில் ராகு கிரகம், சூரியனைப் பிடித்து கிரகணம் உண்டு பண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் ராகுவால், ஆஞ்சநேயரின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இதனால் சூரியனைப் பிடிக்க ராகுவால் அப்போது இயலாமல் போய்விட்டது. பால அனுமனின் வீரதீரத்தைக் கண்ட ராகு பகவான் மகிழ்ந்து அனுமனுக்கு வரம் தந்து அருளினார் என்கிறது புராணம்.
அதாவது தனக்கு உகந்த தானியமான உளுந்தால் வடை செய்து, அதனை தன் உடல் போல (பாம்பு உடல் கொண்டவர் ராகு) வளைந்து இருக்கும்படி செய்து (மாலையாக) எவர் ஒருவர் அனுமனுக்கு சாத்தி வழிபடுகிறார்களோ, அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிக்க மாட்டேன் என்றும் தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் விரைவில் நிவர்த்தியாகி விடும் என்றும் அனுமனுக்கு உறுதியளித்தார் ராகு பகவான்.
அதனால்தான், உளுந்தால் வடை செய்து அவற்றை 54 அல்லது 108 அல்லது 1008 என்ற எண்ணிக்கையில் வடைமாலையாகக் கோர்த்து, ஆஞ்சநேயருக்கு செலுத்துகிறார்கள்.
நாளை 12.1.2021 அனுமன் ஜயந்தித் திருநாள். இந்தநாளில், அனுமனைப் போற்றுவோம். அனுமன் சாலீசா பாராயணம் செய்து வழிபடுவோம். அனுமனுக்கு வெண்ணெய்க் காப்போ வடைமாலையோ சார்த்தி வணங்கிப் பிரார்த்திப்போம்.
காரியம் அனைத்திலும் வெற்றியைத் தந்தருள்வார். வேதனைகளையெல்லாம் போக்கி அருளுவார். இழந்ததையெல்லாம் மீட்டுத் தருவான் ராம பக்த அனுமன்!
ஜெய் அனுமன்!
