

நாளை ஹனுமன் ஜயந்தி (12.1.2021). இந்த நாளில், ஹனுமன் குடிகொண்டிருக்கும் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் நடைபெறும். இந்த நன்னாளில், அனுமனை தரிசிப்போம். பிரார்த்திப்போம். நம் வாழ்வின் சிக்கல்களையெல்லாம் தீர்த்தருளுவார் ஜெய் அனுமன்!
விழுப்புரம் என்றதும் நமக்கு நினைவுக்கு வரும் மிக முக்கியமான திருத்தலம் பரிக்கல். தமிழகத்தின் மிக முக்கியமான க்ஷேத்திரங்களில் பரிக்கல் திருத்தலமும் ஒன்று.
பரிக்கல் நரசிம்மர் விசேஷமானவர். வரப்பிரசாதியாகத் திகழ்பவர் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். அருளும் பொருளும் அள்ளித் தரும் நரசிம்ம க்ஷேத்திரத்துக்கு எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்கின்றனர்.
விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் இருக்கும் பக்தர்களில் பெரும்பான்மையோர், வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நரசிம்மரை தரிசித்து பிரார்த்திப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
அப்படி வரும் பக்தர்கள், நரசிம்மர் சந்நிதியில் மனமுருகி வேண்டுவது போலவே இங்கே உள்ள ஆஞ்சநேயர் சந்நிதியிலும் ஆத்மார்த்தமாக வழிபட்டு பிரார்த்தனைகளை மேற்கொள்கின்றனர்.
பரிக்கல் நரசிம்மர் திருக்கோயிலில், நரசிம்மர் சந்நிதியின் உட்பிராகாரத்தில், இரண்டு ஆஞ்சநேயர் சந்நிதிகள் அமைந்திருக்கின்றன. வடக்குப் பிராகாரத்தில் அமைந்துள்ளது அனுமன் சந்நிதி. இரண்டு ஆஞ்சநேயர்கள். ஒருவர் பக்த ஆஞ்சநேயராகக் காட்சி தருகிறார். இன்னொரு அனுமன், வீர அனுமனாகக் காட்சி தருகிறார். ஆக, பரிக்கல் தலத்தில் பக்த அனுமன், வீர அனுமன் என்று இரண்டு ஆஞ்சநேயர்களும் அற்புதமாகக் காட்சி தருகின்றனர்.
பரிக்கல் திருத்தலத்தின் மூலவரான நரசிம்ம மூர்த்தியை முதலில் பிரார்த்தித்து விட்டு, பின்னர் ஆஞ்சநேயரை தரிசிக்க வேண்டும். அனுமன் வழிபாடு எப்போதுமே, மிகுந்த வலிமையைத் தந்தருளக்கூடியது. மனோபலத்தை தந்தருளுவார். மனக்கிலேசத்தை நீக்கியருளுவார் அனுமன்.
இங்கே உள்ள அனுமனும் வரப்பிரசாதியானவர். பரிக்கல் அனுமன் வழிபாட்டில் கூடுதல் விஷயம்... இங்கே நெல்லில் பிரார்த்தனையை எழுதி அனுமனிடம் வேண்டுகோளாக வைக்கின்றனர்.
இரண்டு அனுமனையும் தரிசித்து, மனதார வேண்டிக்கொண்டாலே நமக்கு என்ன தேவையோ அவற்றை வழங்கி அருளுவார் அனுமன். அதேசமயம், நெல்லில் பிரார்த்தனையை எழுதி அனுமனுக்கு சமர்ப்பித்து வேண்டிக்கொள்ளும் வழக்கம் உள்ளது.
ஒரு தட்டில் நெல் பரப்பி, அந்த நெல்லில் தங்களின் பிரார்த்தனையை எழுதுகின்றனர். நெல் என்றில்லாமல் நவ தானியங்களைப் பரப்பி வேண்டுதலை எழுதி அனுமனிடம் சமர்ப்பிப்பதும் நடைபெறுகிறது.
வழக்கில் நீதி கிடைக்க வேண்டும், பொன்னையும் பொருளையும் இழந்துவிட்டோம், இழந்ததை மீட்க வேண்டும், தம்பதி இடையே ஒற்றுமை இல்லை மீண்டும் கருத்தொருமித்து வாழவேண்டும், தொழிலில் தடைகளை தகர்த்து அருள வேண்டும் என்பன உள்ளிட்ட எந்த வேண்டுகோளாக இருந்தாலும் பிரார்த்தனையாக இருந்தாலும் பக்த அனுமனும் வீர அனுமனும் முறையே நிறைவேற்றி அருளுகின்றனர் என்கிறார்கள் பக்தர்கள்.
நாளை ஹனுமன் ஜயந்தி (12.1.2021). இந்த நாளில், ஹனுமன் குடிகொண்டிருக்கும் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் நடைபெறும். இந்த நன்னாளில், அனுமனை தரிசிப்போம். பிரார்த்திப்போம். நம் வாழ்வின் சிக்கல்களையெல்லாம் தீர்த்தருளுவார் ஜெய் அனுமன்!