

அது இரவு நேரம். புத்தர் துறவிகளுடன் ஒரு கிராமத்திற்கு வெளியே உள்ள மரத்தடியில் அமர்ந்திருந்தார். அவருக்குப் பின்னால் இருந்து ஒரு தீப விளக்கு சிறிது வெளிச்சத்தைத் தந்துகொண்டிருந்தது. அந்தச் சுடரை நோக்கி பூச்சிகள் பறந்து கருகி விழுவதை புத்தர் பார்த்துக்கொண்டிருந்தார்.
“அந்தப் பூச்சிகள் சுடரைப் பார்த்து ஏமாற்றமடைந்துவிடுகின்றன. அந்தச் சுடர் அவற்றுக்கு வாழ்வையும் சந்தோஷத்தையும் தரும் என்று கற்பனை செய்துகொள்கின்றன. ஆனால் உண்மையில் அந்தச் சுடர் அவற்றுக்குத் துன்பத்தையும் மரணத்தையுமே பரிசாக அளிக்கிறது. அதேபோன்றுதான் மனிதர்களும் செல்வத்தை ஒளியாகப் பார்க்கின்றனர். அதிகாரத்தைப் பார்க்கின்றனர்.
கௌரவமும் புகழும் தீராத சந்தோஷத்தைக் கொண்டுவரும் என்று கருதுகின்றனர். ஆனால் அவை அனைத்தும் துக்கத்தையும் இறப்பையுமே பரிசாக வழங்குகின்றன. அதனால் வெளியே பார்ப்பதிலிருந்தும் கேட்பதிலிருந்தும் மனம் திரும்பி, உங்களது உள்மனமும் ஆன்மாவும் என்ன சொல்கின்றன என்பதைக் கேளுங்கள்” என்றார் புத்தர்.