எதிர்ப்புகளை அழித்துக் காப்பாள் ஸ்ரீபாலா! 

எதிர்ப்புகளை அழித்துக் காப்பாள் ஸ்ரீபாலா! 
Updated on
1 min read

ஸ்ரீபாலாவை முறையே நியமங்களுடன் வழிபட்டால், சகல செளபாக்கியங்களையும் தந்தருள்வாள். பண்டாசுரக் கூட்டத்தை அழித்தது போல், நமக்கு உண்டான எதிர்ப்புகளையும் இன்னல்களையும் துவம்சம் செய்து காத்தருள்வாள் ஸ்ரீபாலா என்கிற பாலா திரிபுரசுந்தரி.

பாலா அவதரித்தது குறித்து லலிதா சகஸ்ரநாமத்தில் சொல்லப்பட்டுள்ளது.

ஸ்ரீபாலா வேறு ஸ்ரீராஜேஸ்வரி வேறு அல்ல என்பார்கள். அதேபோல, ஸ்ரீபாலா வேறு ஸ்ரீலலிதாம்பிகை வேறு அல்ல என்பார்கள்.

மன்மதனை சிவபெருமான் எரித்துச் சாம்பலாக்கினார். அந்தச் சாம்பலில் இருந்து பண்டன் எனும் அசுரன் தோன்றினான். ‘ஒரு பெண்ணைத் தவிர எனக்கு வேறு எவராலும் மரணம் நிகழக்கூடாது’ என்றொரு வரத்தைப் பெற்றிருந்தான் மண்டாசுரன்.

அப்படியொரு வரம் கிடைத்த குதூகலத்தில் வெறியாட்டம் போட்டான். தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தினான்.

தேவர்கள் முதலானோர் கதிகலங்கிப் போனார்கள். ஸ்ரீலலிதையிடம் தங்கள் துக்கங்களையும் பயத்தையும் சொல்லி முறையிட்டனர்.

இதைக் கேட்டதும் தேவி தன் சேனைகளுடன் பண்டாசுரனுடன் போரிட்டாள். ஆவேசத்துடன் அசுரனைப் பந்தாடினாள். தேவியை வெல்லமுடியாமல் தவித்துக் கதறிய அசுரன், வலிமையும் பராக்கிரமும் கொண்ட முப்பது மைந்தர்களையும் அனுப்பினான்.

யுத்தம் இன்னும் உக்கிரமானது. அவர்கள் அனைவரையும் அழிக்க, ஸ்ரீலலிதா தேவியின் தேகத்தில் இருந்து ஆவிர்பவித்தாள் ஒன்பது வயது சிறுமி. அம்பிகையின் ஆற்றலை விட பன்மடங்கு ஆற்றல் மிக்கவளாகவும் வலிமை கொண்டவளாகவும் திகழ்ந்தாள் அந்தச் சிறுமி. அவள்தான்... ஸ்ரீபாலா.

தேவியின் கவசங்களையும் ஆயுதங்களையும் தரித்துக் கொண்டாள்; பெற்றுக் கொண்டாள். அன்னப்பறவைகள் பூட்டிய ரதத்தில் ஏறிக்கொண்டாள். பண்டாசுரனின் மைந்தர்களை பந்தாடி அழித்தொழித்தாள். முப்பது மைந்தர்களையும் அழித்தாள் சிறுமி பாலா.

‘பண்டபுத்ர வதோத்யுக்த பாலா விக்ரம நந்திதா - ஸ்ரீபாலா லீலாவிநோதி நீ’ என ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தில் ஸ்ரீபாலாவைச் சொல்லிச் சிலாகிக்கிறது.
ஸ்ரீபாலா என்றும் ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி என்றும் கொண்டாடுகிறார்கள் சாக்த வழிபாட்டாளர்கள்.

ஸ்ரீபாலாவை முறையே நியமங்களுடன் வழிபட்டால், சகல செளபாக்கியங்களையும் தந்தருள்வாள். பண்டாசுரக் கூட்டத்தை அழித்தது போல், நமக்கு உண்டான எதிர்ப்புகளையும் இன்னல்களையும் துவம்சம் செய்து காத்தருள்வாள் ஸ்ரீபாலா என்கிற பாலா திரிபுரசுந்தரி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in