

உடையவர் ராமானுஜர் சந்நிதி நல்ல அதிர்வுகள் கொண்டது. இந்த இடத்தில் அப்படியொரு அமைதி நிலவுகிறது. அங்கே ஐந்து நிமிடம் அமர்ந்து ராமானுஜருக்கு முன்னே, கண்கள் மூடி தியானித்துச் செல்கிறார்கள் பக்தர்கள்.
காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவே அமைந்துள்ள அற்புதமான புண்ணிய க்ஷேத்திரம் ஸ்ரீரங்கம் திருத்தலம். மிகப்பிரமாண்டமான ஆலயம். படைப்புக் கடவுளான பிரம்மா, பல்லாயிரம் ஆண்டுகள், திருமாலை நோக்கி கடும் தவம் மேற்கொண்டு, பாற்கடலில் இருந்து பெறப்பட்ட ஸ்ரீரங்க விமானம். நான்கு வேதங்களையும் இந்தவிமானத்துக்கு முன்னே ஓதியருளினார் மகாவிஷ்ணு.
ஸ்ரீரங்க விமானத்தில், அர்ச்சாரூபமாக அவதரித்த ரங்கநாதரை, இக்ஷ்வாகு மன்னர் தம்முடைய குலதெய்வமாகவே பாவித்தார். அயோத்தியில் வைத்து பூஜித்து வந்தார். இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்த ஸ்ரீராமர், சீதாபிராட்டியை மீட்க உதவியதற்காக, விபீஷணனுக்கு ரங்கநாத விக்கிரகத்தை பரிசளித்தார்.
ஆசை ஆசையாக விபீஷணன், இலங்கைக்கு எடுத்துச் செல்லும் வழியில், காவிரி நதிக்கரையில், தர்மவர்ம மன்னன் விக்கிரகத்தை தந்து உதவ வேண்டினான். சோழ மன்னனின் விருப்பத்திற்காக வழங்கினார் விபீஷணன். இலங்கையை நோக்கி, காவிரிக்கரையில் பிரதிஷ்டை செய்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.
ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் 21 கோபுரங்கள் அமைந்துள்ளன. நூற்றுக்கணக்கான சந்நிதிகள் இருக்கின்றன. சந்நிதிகளின் மேல் விமானம் அமைப்பது வழக்கமானதுதான். ஆனால், வைத்தியராகத் திகழும் தன்வந்திரி பகவான் இங்கே காட்சி தருகிறார். நோயாளிகளும் வயோதிகர்களும் இவரிடம் ஆரோக்கியம் கேட்டு விண்ணப்பிக்க வருவார் என்பதால், ஆகம விதிகளுக்கு உட்பட்டு தன்வந்திரி பகவானுக்கு விமானம் எழுப்பப்படவில்லை.
இங்கே உள்ள கருட பகவான், பிரமாண்டமானவர். மிகப்பெரிய உருவத்துடன் மேற்கூரையை ஒட்டியபடி காட்சி தருகிறார். சாந்நித்தியம் நிறைந்த கருடாழ்வாரை வணங்குவதற்காகவும் பக்தர்கள் வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் தலத்தின் பெருமைகளில் ஒன்று... கம்ப ராமாயணம் அரங்கேற்றிய திருத்தலம். கம்ப ராமாயணம் அரங்கேறிய போது, அதனை அங்கீகரித்து ஏற்கும் வகையில், தனது தலையை அசைத்து கம்ப ராமாயணப் பெருமையை உலகுக்கு உணர்த்தினார் மேட்டு அழகிய சிங்கர் என்கிறது ஸ்தல புராணம்.
ஸ்ரீரங்கம் திருத்தலத்தின் பெருமைகளும் ஆலய பூஜா விதிகளும் செவ்வனே நடைபெறுவதற்கு ஸ்ரீராமானுஜரே காரணம். ஸ்ரீரங்கம் திருக்கோயிலின் நிர்வாகம், கோயிலொழுகு எனப்படும் ஸ்ரீரங்க சரிதம் முதலானவற்றை சீர்படுத்தித் தந்தருளியவர் ஸ்ரீராமானுஜர். வைஷ்ணவத்தின் மிக முக்கியமான ஆச்சார்யரான ராமானுஜர் 120 ஆண்டுகள் வரை வாழ்ந்தார். கி.பி.1137ம் ஆண்டு, திருவரங்கத்தில் பரமபதம் அடைந்தார்.
இங்கே உடையவர் எனப்படும் ஸ்ரீராமானுஜருக்கு சந்நிதி அமைந்திருக்கிறது. தன்னுடலுடன் சந்நிதி கொண்டிருக்கிறார் என்கிறது ஸ்தல புராணம். பத்மாசனக் கோலத்தில் உள்ள ஸ்ரீராமானுஜரின் சிகையையும் விரல் நகங்களையும் இன்றைக்கும் தரிசிக்கலாம்; சிலிர்க்கலாம் என்கிறார்கள் பக்தர்கள்.
உடையவர் ராமானுஜர் சந்நிதி நல்ல அதிர்வுகள் கொண்டது. இந்த இடத்தில் அப்படியொரு அமைதி நிலவுகிறது. அங்கே ஐந்து நிமிடம் அமர்ந்து ராமானுஜருக்கு முன்னே, கண்கள் மூடி தியானித்துச் செல்கிறார்கள் பக்தர்கள்.
பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ முதலானவற்றை அரைத்து, ராமானுஜருக்கு பற்று போல் உடலில் பூசுவது வருடத்துக்கு இரண்டு முறை நிகழ்த்தப்படுகிறது.
அரங்கனின் பெருமையையும் அரங்கத்துப் பெருமையையும் அளவிடவே முடியாது என்று சிலிர்ப்புடன் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள்.