

ஆண்டாள் அருளிய ‘நாச்சியார் திருமொழி’ தேன் தமிழுக்கு சான்று. ‘வாரணமாயிரம்’ என்று தொடங்குகிற 11 பாடல்களை, பெண்கள் தினமும் பாடி வந்து பெருமாளையும் ஆண்டாளையும் வணங்கி வந்தால், சீக்கிரமே திருமண பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்!
வைணவ திவ்விய தேசங்கள் 108. இந்த நூற்றியெட்டில் முதலாவது திருத்தலம் எனப் போற்றப்படுகிறது ஸ்ரீரங்கம். கடைசித்தலமாக போற்றப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூர். ஸ்ரீரங்கம், ஆண்டாளின் புகுந்த வீடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அவதரித்த பிறந்தவீடு.
விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகரில் இருந்து 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீவில்லிபுத்தூர். பன்னிரு ஆழ்வார்களில், பெரியாழ்வார் அவதரித்த திருத்தலம் இது. ஆனி மாதத்தின் வளர்பிறை ஏகாதசியில், ஞாயிற்றுக்கிழமை சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார் பெரியாழ்வார். ஆடி மாத வளர்பிறை சதுர்த்தியில் செவ்வாய்க்கிழமை பூர நட்சத்திரத்தில் அவதரித்தாள் ஆண்டாள்.
1300 வருடப் பழைமை வாய்ந்த திருத்தலம் இது. அதற்கும் முந்தைய ஆலயம் என்பார்கள். ரங்கமன்னாருக்காக, நந்தவனத்தில் பூக்களைப் பறித்து வந்து தொடுத்துச் சார்த்துவார் பெரியாழ்வார். அப்படி ஒருநாள், நந்தவனத்துக்கு அவர் வந்த வேளையில், துளசி மாடத்துக்கு அருகில், சர்வ தேஜஸ் பொருந்திய குழந்தையைக் கண்டார். ஆதுரத்துடன் குழந்தையைத் தூக்கி வளர்த்தார். குழந்தைக்கு பெரியாழ்வார் இட்ட பெயர் கோதை என விவரிக்கிறது புராணம்.
கோதை வளர்ந்தாள். அப்படி வளர வளர, பெருமாள் மீதிருந்த பக்தி, கொஞ்சம் கொஞ்சமாக காதலாயிற்று. பெருமாளுக்காக பெரியாழ்வார் தொடுத்து வைத்திருக்கும் மாலையை தான் அணிந்துகொண்டு கழற்றிவைத்துவிடுவார். பெரியாழ்வார் இதை ஒருநாள் பார்த்துவிட்டார். கடிந்துகொண்டார். அன்றைய நாளில், கோதை சூடாத மாலையை அணிவித்தார். அன்றிரவு, பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய பெருமாள், ‘எனக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையே விருப்பம்’ எனத் தெரிவித்தார். அதனால்தான் ‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ எனும் பெருமை கோதைக்கு அமைந்தது.
திருமண வயது வந்த நிலையில், மகளுக்கு திருமணம் செய்து வைக்க நினைத்தார் பெரியாழ்வார். ‘அரங்கனைத் தவிர எவருக்கும் மாலையிட மாட்டேன். அரங்கனே என் மணாளன்’ என்று கோதை சொல்ல, ஆடிப்போனார் பெரியாழ்வார். குழம்பினார். தவித்தார். மீண்டும் பெரியாழ்வாரின் கனவில் வந்த பெருமாள், ‘உன் மகள் ஆண்டாள்... தெய்வப்பிறவி. அவளை ஏற்கும் காலம் வந்துவிட்டது. ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வா’ என அருளினார்.
நெகிழ்ந்து நெக்குருகிப் போன பெரியாழ்வார், கோதையை ஸ்ரீரங்கம் திருத்தலத்துக்கு அழைத்து வந்தார். காவிரிக்கரையை நெருங்கியதும் சட்டென மறைந்தாள் கோதை. அங்கே, தன் திருவடியில் சேவை சாதித்துக் கொண்டிருக்கும் ஆண்டாளைக் காட்டியருளினார் அரங்கன். அப்போது, ‘ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வாருங்கள் அரங்கநாதரே. அங்கே கோதையை மணம் முடித்துக் கொள்ளுங்கள்’ என வேண்டினார்.
அதன்படி, பங்குனி உத்திர நன்னாளில், ஸ்ரீவில்லிபுத்தூரில் அரங்கனுக்கும் கோதைக்கும் விமரிசையாக நடந்தேறியது திருமண வைபவம். அன்று முதல் கோதை, ஆண்டாளானாள் என்கிறது ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்தல புராணம்.
ஆண்டாள் அருளிய ‘நாச்சியார் திருமொழி’ தேன் தமிழுக்கு சான்று. ‘வாரணமாயிரம்’ என்று தொடங்குகிற 11 பாடல்களை, பெண்கள் தினமும் பாடி வந்து பெருமாளையும் ஆண்டாளையும் வணங்கி வந்தால், சீக்கிரமே திருமண பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்!
மிகப்பிரமாண்டமான ஆலயமாகத் திகழ்கிறது ஸ்ரீவில்லிபுத்தூர் திருத்தலம். இரட்டைக்கோயில் என்பார்கள். அதாவது ஆலயத்தின் வடகிழக்கில் வடபத்ரசாயி கோயிலாகவும் மேற்கில் ஆண்டாள் கோயிலாகவும் அமைந்திருக்கிறது. இரண்டுக்கும் நடுவே பெரியாழ்வார் அமைத்த நந்தவனம் உள்ளது. இங்கே ஆண்டாள் தனிச்சந்நிதியில் எழுந்தருள்கிறாள். துளசிமாடமும் இருக்கிறது. இங்கிருந்து, மண்ணெடுத்துச் சென்று, வீட்டுப் பூஜையறையில் வைத்துக்கொண்டால், திருமணத்தடை அகலும். நல்ல வாழ்க்கைத் துணை அமையும். சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறலாம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் எனும் பிரமாண்ட திருத்தலத்தை தரிசியுங்கள். ரங்கமன்னாரையும் ஆண்டாளையும் தரிசியுங்கள் . ‘வாரணமாயிரம்’ பாடலை பாராயணம் செய்து மனதார பிரார்த்தனை செய்யுங்கள். திருமண பாக்கியம் கைகூடும்!