

நமக்கு என்ன குறைகள் இருந்தாலும் வருத்தங்கள் இருந்தாலும் கவலையோ கஷ்டமோ இருந்தாலும் சமயபுரத்தாளிடம் சொல்லி அவளின் சந்நிதியில் நின்று ஒரு துளி கண்ணீரைக் கூட பொறுத்திருக்கமாட்டாள்... நம் கண்ணீரையும் கவலைகளையும் துடைத்துக் காப்பாள் சமயபுரத்தாள்!
நாம் கேட்கும் சமயங்களிலெல்லாம் வரம் தந்தருள்வாள் தேவி. அதனால்தான் அவளுக்கு சமயபுரத்தாள் எனும் திருநாமமே அமைந்தது என்கிறார்கள் பக்தர்கள்.
திருச்சியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது சமயபுரம் திருத்தலம். கண்ணனூர், விக்கிரமபுரம், மாகாளிபுரம், மகாகாளிபுரம், கண்ணபுரம் என்றூ சமயபுரத்துக்கு பல பெயர்கள் உள்ளன. ஆனாலும் சமயபுரம் என்பதே பிரபலமான பெயராகிவிட்டது.
தமிழகத்தின் சக்தி திருத்தலங்களில், மிக மிக முக்கியமான திருத்தலம் எனும் பெருமை சமயபுரத்துக்கு உண்டு.
சோழ மன்னன், தன் சகோதரியை கங்க தேசத்து மன்னனுக்கு மணம் முடித்துவைத்தான். அவர்களுக்குச் சீதனமாக கோட்டையையும் நகரம் ஒன்றையும் அளித்தான். அந்த நகரம் கண்ணனூர் என அழைக்கப்பட்டது. கால ஓட்டத்துக்குப் பிறகு, பாண்டிய மன்னர்கள் படையெடுத்தார்கள். அப்போது கோட்டையையும் அழித்தார்கள்; நகரத்தையும் அழித்தார்கள். நகரம் அழிந்து பொட்டல் காடாயிற்று. பிறகு பொட்டல் வெளியில் வேப்பமரங்கள் வளர்ந்தன. அது, வேம்புக்காடாயிற்று.
இந்தக் காலகட்டத்தில், ஸ்ரீரங்கத்தில் வைஷ்ணவி எனும் பெயரில் கோயில் கொண்டிருந்தாள் தேவி. கோரைப்பற்களும் செக்கச்சிவந்த கண்களுமாக திகழ்ந்தாள் என்பதால், அப்போதைய ஜீயர் சுவாமிகள், வைஷ்ணவி அம்மனை வேறொரு இடத்தில் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்தார்.
அதன்படி வைஷ்ணவி திருச்சிலையை சுமந்துகொண்டு வடக்கு நோக்கி பயணித்தனர். வழியில் ஓரிடத்தில் இளைப்பாறினார்கள். பின்னர் கண்ணனூர் அரண்மனை இருந்த மேட்டுப் பகுதியை அடைந்தனர். அங்கே ஓலைக்கொட்டகையில் அம்மனை வைத்துச் சென்றனர். வைஷ்ணவியை அன்று முதல் கண்ணனூர் அம்மன் என்றே அழைத்து வணங்கி வந்தார்கள்.
வைஷ்ணவி என்றெல்லாம் அழைக்கப்பட்டவள், கண்ணனூர் அம்மன், கண்ணனூர் மாரியம்மன் என்றெல்லாம் அழைக்கப்பட்டவள் பின்னர் சமயபுரத்தாள் என்றும் சமயபுரம் மாரியம்மன் என்றும் அழைக்கப்படலானாள்.
கண்ணனூரில் அம்மனாக இருந்த சமயத்தில், தென்னகத்தின் மீது விஜயநகர மன்னர் படையெடுத்தார். தன் படை பரிவாரங்களுடன் கண்ணனூர் வேப்பங்காட்டில் தங்கினார். அங்கே இருந்த அம்மனைக் கண்டனர். அம்மனிடம் வேண்டிக்கொண்டனர். யுத்தத்தில் வெற்றி பெற்றால், உனக்கு கோயிலே கட்டுகிறேன் என வேண்டிக்கொண்டார் மன்னர். அதன்படியே கோயிலும் எழுப்பினார். அம்மனை பிரதிஷ்டை செய்ததுடன் பரிவார தெய்வங்களாக விநாயகப் பெருமானையும் கருப்பண்ணரையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
இன்றைக்கு இருக்கிற சமயபுரம் திருக்கோயில், கி.பி.1804ல் விஜயரங்க சொக்கநாத மன்னரால் கட்டப்பட்டது. அதேசமயம், சோழப் பேரரசு காலத்திலேயே இந்தக் கோயில் இருந்திருக்க வேண்டும் என்றும் விஜய நகர மன்னர்களாலும் நாயக்க மன்னர்களாலும் இன்னும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என கல்வெட்டு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அன்று தொடங்கி இன்றளவும் தன் சக்தியையும் சாந்நித்தியத்தையும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறாள் சமயபுரம் மாரியம்மன்.
திருச்சியின் எல்லை தெய்வமாகத் திகழும் சமயபுரத்தாள், உலகுக்கே காவல்தெய்வமாகத் திகழ்கிறாள். சக்தி பீடங்களுக்கெல்லாம் தலைவியாக காஞ்சி காமாட்சி அம்பாள் திகழ்வது போல், உலகத்து மாரியம்மன்களின் தலைவியாகக் கோலோச்சுகிறாள் சமயபுரம் மாரியம்மன்.
நமக்கு என்ன குறைகள் இருந்தாலும் வருத்தங்கள் இருந்தாலும் கவலையோ கஷ்டமோ இருந்தாலும் சமயபுரத்தாளிடம் சொல்லி அவளின் சந்நிதியில் நின்று ஒரு துளி கண்ணீரைக் கூட பொறுத்திருக்கமாட்டாள்... நம் கண்ணீரையும் கவலைகளையும் துடைத்துக் காப்பாள் சமயபுரத்தாள்!