Last Updated : 05 Jan, 2021 05:48 PM

 

Published : 05 Jan 2021 05:48 PM
Last Updated : 05 Jan 2021 05:48 PM

ஒப்பில்லா அப்பன்... ஒப்பிலியப்பன்! 

ஒப்பிலியப்பன் மிகுந்த வரப்பிரசாதி. ஒருமுறையேனும் ஒப்பிலியப்பன் திருத்தலத்துக்கு வந்து, துளசி மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், சகல சம்பத்துகளும் தந்தருள்வார் எம்பெருமாள். ஒப்பில்லா அப்பனான ஒப்பிலியப்பனை வணங்குங்கள். ஒளிமயமான எதிர்காலத்தைத் தந்திடுவார்!

விண்ணகரம் என்றால் விஷ்ணுவின் இருப்பிடம் என்று அர்த்தம். அதனால்தான் திருவிண்ணகரம் என்று போற்றப்படுகிறது. 108 திவ்விய தேசங்களில், விண்ணகரம் என்று அழைக்கப்படும் ஆலயங்கள் ஆறு. அப்படிப்பட்ட ஆறு ஆலயங்களில், ஸ்ரீஒப்பிலியப்பன் திருக்கோயிலும் ஒன்று.

கோயில் நகரம் கும்பகோணத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஒப்பிலியப்பன் கோவில். திருவிண்ணகரம் என்று போற்றப்படும் ஒப்பற்ற திருத்தலம். வடகலை சம்பிரதாயத்தில் திகழும் ஆலயம். மற்ற விண்ணகரங்கள்... சீராம விண்ணகரம், அரிமேய விண்ணகரம், வைகுந்த விண்ணகரம், பரமேஸ்வர விண்ணகரம் என்றும் உண்டு.

வைகுண்ட நகரம், ஆகாச நகரம், ஒப்பிலியப்பன் சந்நிதி, உப்பிலியப்பன் சந்நிதி என்றெல்லாம் அழைக்கப்படுகிறது இந்தத் திருத்தலம்.

திருநாகேஸ்வரம் திருக்கோயிலும் ஒப்பிலியப்பன் கோயிலும் உள்ளதால்,இந்த ஊர், திருவிண்ணகர் திருநாகேச்சரம் என்று கல்வெட்டுகள் குறிக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயம் ஒப்பிலியப்பன் கோயில். 11 பாசுரங்களாக நம்மாழ்வார் பாடியிருக்கிறார். திருமங்கையாழ்வார் 34 பாசுரங்கள் பாடியிருக்கிறார். பொய்கையாழ்வார் ஒரு பாசுரமும் பேயாழ்வார் இரண்டு பாசுரமும் பாடியிருக்கிறார்கள்.

அற்புதமான திருத்தலம் ஒப்பிலியப்பன் கோயில். இந்தத் தலத்து பெருமாள் விசேஷமானவர். ஒப்பிலியப்பனுக்கு துளசி மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், துளசியால் அர்ச்சித்து பிரார்த்தித்துக் கொண்டால் அஸ்வமேத யாகம் செய்த பலன்களைக் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

ஒரு பசுவின் குளம்படி அளவுக்கான நிலத்தை ஒப்பிலியப்பன் கோயிலுக்கு வழங்கினால், மோட்சம் நிச்சயம் என்கிறது ஸ்தல புராணம்.

கருடாழ்வார், காவிரி, மார்க்கண்டேயர், தர்மதேவதை முதலானோர் இங்கு வந்து தவமிருந்து வழிபட்டார்கள். இதனால் அவர்களுக்கு எம்பெருமாள் திருக்காட்சி தந்தருளினார் என்கிறது ஸ்தல புராணம். இவர்கள் மட்டுமின்றி, சூரியன், சந்திரன், துளசியும் பெருமாளை வழிபட்ட திருத்தலம் இது எனும் பெருமையும் உண்டு.
சுமார் எட்டடி உயரத்தில், சாளக்கிராமமும் செண்பக மாலையும் அணிந்தபடி, நான்கு திருக்கரங்களுடன் திருக்காட்சி தருகிறார் ஒப்பிலியப்பன். மேலிரு கரங்களில் சங்கு - சக்கரம் ஏந்திக்கொண்டிருக்கிறார். கீழிரு கரங்களில், இடது கரத்தை ஊரு அஸ்தமாக தொடையில் வைத்தபடி காட்சி தருகிறார். கீழ் வலக்கரத்தில் தன் திருவடியைக் காட்டியபடி காட்சி தருகிறார். ‘மாம் ஏகம் சரணம் வ்ரஜ’ எனும் கீதையின் ஸ்லோகம் வைரத்தால் பொறிக்கப்பட்டிருக்கின்றன. ‘மாம் ஏகம் சரணம் வ்ரஜ’ என்றால் ‘என்னைச் சரணடையுங்கள். உன்னைக் காக்கிறேன்’ என்று அர்த்தம்.

ஒப்பிலியப்பன் மிகுந்த வரப்பிரசாதி. ஒருமுறையேனும் ஒப்பிலியப்பன் திருத்தலத்துக்கு வந்து, துளசி மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், சகல சம்பத்துகளும் தந்தருள்வார் எம்பெருமாள். ஒப்பில்லா அப்பனான ஒப்பிலியப்பனை வணங்குங்கள். ஒளிமயமான எதிர்காலத்தைத் தந்திடுவார்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x