

‘இல்லாதவர்களுக்கு கொடுங்கள். அதற்கு பதிலாக, பலனாக நூறு மடங்கு உங்களுக்கு வழங்குவேன்’ என்கிறார் பகவான் ஷீர்டி சாயிபாபா.
எல்லா சாஸ்திரங்களும் நூல்களும் தர்மம் செய்வதையே வலியுறுத்துகின்றன. முன்னோர் வழிபாடு, இறை வழிபாடு, விசேஷ பூஜைகள் என எல்லா வழிபாட்டு முறைகளிலும் தர்மமே முன்னிலைப்படுத்துகிறது. தர்மம் செய்தால் புண்ணியம் என்றே சொல்லிவைத்திருக்கிறார்கள் முன்னோர்கள்.
முன்னோர்கள் அப்படிச் சொல்வதற்கு காரணம்... மகான்களும் ஞானநூல்களும். உலகில் இறையருளை மக்களிடம் குருவருளென வழங்கிய மகான்கள், தர்ம சிந்தனைகளையே மக்களிடம் போதித்து வந்தார்கள். இருப்பவர்கள், இல்லாதவர்களுக்கு வழங்குங்கள் என்று போதித்தார்கள். இருப்பவர்கள் என்று சொல்லுவதில் கோடிகோடியான சொத்துகளையெல்லாம் சொல்லிவைக்கவில்லை. உங்கள் சம்பாத்தியத்தில் இருந்து குறிப்பிட்ட ஒரு பகுதியை தானமாக வழங்குங்கள் என்று அறிவுறுத்தினார்கள்.
பகவான் சாயிபாபாவும் அப்படித்தான் தன்னை நாடிவரும் பக்தர்களிடம் தர்மம் செய்வதை வலியுறுத்தினார். ‘உங்களால் முடிந்த உதவிகளை பிறருக்குச் செய்துகொண்டே இருங்கள்’ என்றார் ஷீர்டி மகான் பாபா.
‘’தர்மம் செய்வதற்கு, பிறருக்கு உதவிகள் செய்வதற்கு நீங்கள் கோடீஸ்வரராகவோ லட்சாதிபதியாகவோ இருக்கவேண்டும் என்கிற அவசியமெல்லாம் இல்லை. உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள். உங்களின் சம்பாத்தியத்தில் இருந்து குறிப்பிட்ட ஒருபகுதியை மட்டும் வறியவர்களுக்கு வழங்குங்கள். இறைவன், அப்படி நீங்கள் பிறருக்கு உதவ வேண்டும் என்பதற்காகத்தான் உங்களுக்கு இந்தச் செல்வத்தைக் கொடுத்திருக்கிறான். இந்த சம்பாத்தியத்தை வழங்கியிருக்கிறான்’ என்கிறார் பகவான் ஷீர்டி மகான்.
‘நம்பிக்கையுடன் கொடுங்கள். அந்த நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது. நீங்கள் செய்த தர்மத்தின் பலனானது உங்களை திரும்ப வந்தடையும். கொடுக்கிறோம் என்ற கர்வத்தில் வழங்காதீர்கள். பணிவுடன் வழங்குங்கள். அலட்டலோ கர்வமோ இல்லாமல் வழங்குங்கள். அலட்டலும் கர்வமும் இருந்தால், அந்தத் தர்மத்தால் உங்களுக்கு எந்தப் பலனும் வாய்க்காது போகும்.
பயபக்தியுடன் வழங்குங்கள். பயபக்தியுடன் தர்மத்தைச் செய்யுங்கள். கடவுளுக்கு பயபக்தியுடன் எப்படி வழங்குவீர்களோ அதேபோல், இல்லாதவர்களுக்கு பக்தியுடன் வழங்குங்கள். தூய மனத்துடன் உதவிகளைச் செய்யுங்கள். உங்களால் பலன் பெறுவோர் கூனிக்குறுகும்படி வழங்காதீர்கள். பரோபகாரத்துடன், பரந்துபட்ட சிந்தனையுடன் வழங்குங்கள்.
அதனால்தான்,என்னுடைய பக்தர்களிடம் நான் தட்சிணை பெற்றுக்கொள்கிறேன். அந்த தட்சிணையைக் கொண்டு எல்லோருக்கும் என்னென்ன தேவையோ அவற்றை வழங்கிவருகிறேன். குறிப்பாக, பசியுடன் இருப்பவர்களுக்கு அன்னதானம் செய்து வருகிறேன்’ என்று பகவான் ஷீர்டி சாயிபாபா தெரிவித்ததை, ஸ்ரீசாய் சத்சரித்திரம் விவரிக்கிறது.
‘உங்களுக்கு உறுதியாகச் சொல்லுகிறேன். நீங்கள் மனமுவந்து, ஆத்மார்த்தமாக என்ன கொடுக்கிறீர்களோ அவற்றை உங்களுக்கு நூறு மடங்காக உங்களுக்குத் திரும்பக் கொடுப்பேன்’ என்பதை சொல்லிக்கொள்கிறேன். தர்மத்தை நம்புங்கள். நம்பிக்கையுடன் கொடுங்கள். என் மீது நம்பிக்கையுடன் கொடுங்கள். உங்கள் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது. உங்களால் ஆன உதவிகளைச் செய்யுங்கள்’ என்கிறார் பகவான் சாயிபாபா.