Last Updated : 04 Jan, 2021 12:05 PM

 

Published : 04 Jan 2021 12:05 PM
Last Updated : 04 Jan 2021 12:05 PM

மனக்குழப்பம் தீரும்; பயம் விலகும்; மனோதைரியம் அதிகரிக்கும்! - மங்கல வாழ்வும் மங்காத வாழ்வும் தரும் சந்திர பகவான்! 

மனக்குழப்பத்தில் இருந்தும் மனோபயத்தில் இருந்து நம்மை விடுவித்து, நமக்கு மனோதைரியத்தைத் தந்தருள்வார் மனோகாரகன் சந்திர பகவான்!

திங்கட்கிழமையை சோமவாரம் என்பார்கள். திங்கள் என்பது சந்திரனைக் குறிக்கும். நம் மனம் சிந்திக்கிறது. நம்முடைய மனம் ஆசைப்படுகிறது. மனமானது வருந்துகிறது. மனமானது அமைதியாக இருக்கிறது என்றெல்லாம் சொல்லுகிறோம். ஏதோவொன்று ஆட்டிவைக்க, அதற்குத் தக்கபடி மனமானது செயல்படுகிறது.

அப்படி நம்முடைய மனத்தை ஆட்டிவைப்பவனே சந்திரன். அதனால்தான் சந்திரனை மனோகாரகன் என்கிறார்கள். சந்திர பலம் சரியாக இருந்துவிட்டால் மனமானது சரியாக சிந்திக்கத் தொடங்கிவிடும். எண்ணம் சரியாக அமைந்துவிடும். மனதில் குழப்பமோ கவலையோ இல்லாமல் சந்திர பகவான் பார்த்துக்கொள்வான்.

நவக்கிரகங்களில் சந்திர பகவானும் ஒருவர். 27 நட்சத்திர தேவதைகளையும் மணம் புரிந்தவர் சந்திர பகவான். அதனால்தான் அங்கே 27 நட்சத்திரங்களின் மனங்களுக்குக் காரணகர்த்தாவாக, தொடர்பு கொண்டவராகத் திகழ்கிறார் சந்திர பகவான்.

சந்திரனைப் பிறையெனச் சூடிக்கொண்டிருப்பவர் சிவபெருமான். அதனால்தான் சிவபெருமானுக்கு சோமநாதர், சோமநாதேஸ்வரர், சந்திர சேகரர், சந்திரேஸ்வரர் என்றெல்லாம் திருநாமங்கள் அமைந்திருக்கின்றன.

தஞ்சை, கும்பகோணம் முதலான ஊர்களைச் சுற்றி நவக்கிரகத் திருக்கோயில்கள் அமைந்துள்ளன. நவக்கிரகங்களில் உள்ள செவ்வாய் பகவானுக்கு, தஞ்சையை அடுத்துள்ள திருக்கண்டியூருக்கு அருகில் திங்களூர் எனும் திருத்தலம் அமைந்திருக்கிறது. இந்தத் தலம் நவக்கிரக பரிகார திருத்தலங்களில், சந்திர பகவானுக்கு உரிய திருத்தலம் என்று போற்றப்படுகிறது.

திங்கட்கிழமைகளில் இந்தத் தலத்துக்கு வந்து வேண்டிக்கொள்வதும் தரிசித்துப் பிரார்த்தனை செய்வதும் விசேஷமானவை என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மேலும் சந்திர பகவானின் தியான ஸ்லோகத்தையும் சந்திர பகவானுக்கு உரிய காயத்ரியையும் சொல்லி மனதார பிரார்த்தனை செய்து வேண்டிக்கொண்டால், நம் மனதை செம்மையாக்குவார் சந்திர பகவான். மனதை அமைதிப்படுத்துவார். ஆற்றுப்படுத்துவார். நிம்மதியை நிலைக்கச் செய்வார்.

சந்திர பகவான் தியான ஸ்லோகம் :

ஸ்வேதாம்பரான்வித வபும் வரசுப்ரவர்ணம்

ஸ்வேதாச்வ யுகத ரதகம் ஸுர ஸேவிதாங்க்ரீம்

தோர்ப்யாம் த்ருதாபயகரம் வரதமி ஸுதாம்சும்

ஸ்ரீவத்ஸ மெளக்திக தரம் ப்ரணமாமி சந்த்ரம்

எனும் ஸ்லோகத்தை திங்கட்கிழமைகளில் அவசியம் 21 முறை சொல்லி வாருங்கள். திங்கட்கிழமை என்றில்லாமல், எல்லாக் கிழமைகளிலும் இந்த தியான ஸ்லோகத்தைச் சொல்லி வந்தால், சந்திர பகவானின் பேரருளைப் பெறலாம். சந்திர மங்கல யோகத்தை அடையலாம்.

மனதை செம்மையாக்கி, சீர்படுத்தி, அமைதி நிலைக்குக் கொண்டு வரும் சந்திர பகவானை மனதார வேண்டுவோம். அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று நவக்கிரகத்தில் உள்ள சந்திர பகவானை மனதார பிரார்த்தனை செய்யுங்கள். திங்கட்கிழமைகளில், நவக்கிரகத்தின் சந்திர பகவானை வேண்டுங்கள். எல்லா நலமும் வளமும் தந்தருளுவார் சந்திர பகவான்.

ஓம் பத்மத்வஜாயே வித்மஹே

ஹேம ரூபாய தீமஹி

தந்நோ ஸோம ப்ரசோதயாத்

என்பது சந்திர பகவானின் காயத்ரி மந்திரம்.

இந்த மந்திரத்தையும் சொல்லி வருவது விசேஷம். மனக்குழப்பத்தில் இருந்தும் மனோபயத்தில் இருந்து நம்மை விடுவித்து, நமக்கு மனோதைரியத்தைத் தந்தருள்வார் மனோகாரகன் சந்திர பகவான்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x