புத்தரின் மொழி: பொம்மைகள் தேவை

புத்தரின் மொழி: பொம்மைகள் தேவை
Updated on
1 min read

ஒரு ஊரில் பெரும் செல்வந்தன் வாழ்ந்துவந்தான். அவனுக்கு முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள். அவனது வீடு மிகப் பெரியது. ஒருநாள் அந்த வீட்டில் தீப்பிடித்தது. ஒவ்வொரு அறையாகத் தீ வேகமாகப் பரவத் தொடங்கியது. அந்த வீட்டின் பின்கட்டு அறையில் அவனது குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தன. அங்கே தீ பரவச் சிறிது நேரமே இருந்தது. ஆனால் குழந்தைகளுக்கோ தீ பரவியதே தெரியவில்லை.

வீட்டில் இருந்த செல்வந்தன், ஓடிப் போய் தனது குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த அறையைப் பார்த்தான். அந்தக் குழந்தைகளிடம் வீட்டில் தீப்பிடித்து விட்டதென்று சொன்னான். குழந்தைகளோ அதுவரை தீயைப் பற்றி அறிந்ததேயில்லை. அவர்கள் விளையாட்டில் தீவிரமாக இருந்தனர். அவர்கள் சீக்கிரம் வீட்டிலிருந்து ஓடி வெளியேறாவிட்டால், கருகிப் போய்விடுவார்கள் என்று அச்சுறுத்தினான். அப்போதும் குழந்தைகளுக்குத் தந்தை எதையோ தீவிரமாகச் சொல்கிறார் என்று மட்டுமே புரிந்தது. தீயின் கொடூரம் பற்றி அவர்களுக்கு விளங்கவேயில்லை.

வேறு வழியின்றி செல்வந்தன் குழந்தைகளிடம் பொய் சொன்னான். “புழக்கடை தோட்டத்தில் புதிய பொம்மைகள் வந்து இறங்கியுள்ளன. சின்னஞ்சிறிய அழகிய வண்டிகளும் உண்டு. அதில் நீங்கள் சவாரி செய்யலாம். அவற்றையெல்லாம் நீங்கள் இதுவரை பார்த்திருக்கவே மாட்டீர்கள் உடனடியாகச் செல்லுங்கள்” என்றான்.

குழந்தைகள் உடனடியாகத் தோட்டத்திற்குத் துள்ளிச் சென்றனர். பொம்மை களைப் பார்க்கும் ஆர்வத்தில் ஓடியதால் அவர்கள் உயிரும் பாதுகாக்கப்பட்டது.

இந்தக் கதையில் அந்த செல்வந்தர் தந்தை, குருவின் இடத்தில் இருக்கிறார். குழந்தைகளோ, சாதாரண மனிதர்களின் இடத்தில் இருக்கின்றனர். அவர்களை ஞானத்தின் வழிக்கு அழைத்துச் செல்ல பொம்மைகள் தேவை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in