Last Updated : 01 Jan, 2021 09:54 PM

 

Published : 01 Jan 2021 09:54 PM
Last Updated : 01 Jan 2021 09:54 PM

வழக்கில் வெற்றி... காரியத்தில் வீரியம்; சக்தி மிக்க வாராஹி வழிபாடு! 

வாராஹி அன்னையை வழிபடுங்கள். வழக்கு முதலான சிக்கல்களில் இருந்து மீட்டெடுப்பாள். காரியத்தடைகளையெல்லாம் அகற்றி அருளுவாள்.

வழிபாடுகளில் சாக்த வழிபாடு என்கிற சக்தி வழிபாடு மிக மிக முக்கியமானதாகப் போற்றப்படுகிறது. சக்தி வழிபாட்டில், இன்னும் வலிமையானதாக சக்தி வழிபாட்டாளர்களால் சொல்லப்படுவது வாராஹி வழிபாடு.

சப்தமாதர்களில் ஒருவர் வாராஹி. சப்தமாதர்களின் தலையாய தெய்வமாகப் போற்றப்படுகிறாள் வாராஹி தேவி.

வாராஹி வழிபாடு செய்வது என்பது கடுமையானதும் அல்ல... அதேசமயம் எளிமையானதும் அல்ல. வாராஹியை முழுமனத்துடன் ஆத்மார்த்தமாக ஈடுபட்டால், அவளின் மூல மந்திரத்தை உச்சாடனம் செய்து வழிபட்டு வந்தால், நம் மனதின் கசடுகளையெல்லாம் நீக்கி, நம்மை தூய்மைப்படுத்திவிடுவாள்; தெளிவுறச் செய்துவிடுவாள். காரியத்தில் வீரியமேற்றிவிடுவாள் என்கிறார்கள் பக்தர்கள்.

இவள் ஆரோகணித்து வரும் ரதம், கிரி சக்ர ரதம் என்றும் இவளின் யந்திரம் கிரியந்த்ரம் என்றும் போற்றப்படுகிறது. (கிரி-பன்றி என்றும் பொருள் உண்டு). காட்டுப் பன்றிகளால் இழுக்கப்படுவதால் அந்த ரதத்திற்கு இந்தப் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.

பராபட்டாரிகையான லலிதையின் மனக் குறிப்பறிந்து ரதத்தைச் செலுத்துவதால் ‘ஸங்கேதா’ என்று கொண்டாடப்படுகிறாள் வாராஹி தேவி.

சண்ட முண்டாசுரர்களை காளி வதம் செய்தபின் சாமுண்டி எனப் பெயர் கொண்டாள். சும்ப நிசும்பர்களுடனும் ரக்த பீஜனுடன் அவள் போரிடும்போதும் வாராஹி துணைக்கு வந்தாள் என்பதை தேவி மகாத்மியம் கூறுகிறது. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவள் வாராஹி என்று கொண்டாடுகிறார்கள் பக்தர்கள்.

வாராஹி மந்திரம் :

ஓம் ஸ்யாமளாயை வித்மஹே

ஹல ஹஸ்தாய தீமஹி

தந்நோ வாராஹி ப்ரசோதயாத்

எனும் மந்திரத்தை ஜபித்துக் கொண்டே இருங்கள். தினமும் சொல்லிக்கொண்டே இருங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக் கொண்டே இருங்கள். ஓடிவந்து அருள் செய்வாள் வாராஹி தேவி.

மாதந்தோறும் வளர்பிறை பஞ்சமி திதி வாராஹி வழிபாட்டுக்கு உகந்தநாள். இந்தநாளில், வாராஹியை வழிபடுங்கள். அருகில் வாராஹி கோயிலோ வாராஹிக்கு சந்நிதி கொண்ட கோயிலோ இருந்தால், வாராஹியை தரிசியுங்கள். செந்நிற மலர்கள் சூட்டி வழிபடுங்கள்.

பஞ்சமி திதியில், வாராஹி அன்னையை வழிபடுங்கள். வழக்கு முதலான சிக்கல்களில் இருந்து மீட்டெடுப்பாள். காரியத்தடைகளையெல்லாம் அகற்றி அருளுவாள்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x