

வருகிற 3ம் தேதி பஞ்சமி. பஞ்சமியில் வாராஹியை ஆத்மார்த்தமாக வழிபடுங்கள். மனதைப் பக்க்குவப்படுத்தித் தருவாள். பகை அனைத்தையும் விரட்டியடிப்பாள். கடன் முதலான பிரச்சினைகளில் இருந்து நம்மை மீட்டெடுப்பாள்.
வாராஹி தேவி, கலக்கத்தையும் நடுக்கத்தையும் துடைப்பவள். சப்தமாதர்களில் தலையாயவள். சேனைப்படைகளின் தலைவியாகத் திகழ்பவள்.
வாழ்வில் நாம் படுகிற துயரத்தையெல்லாம் அவளிடம் சொல்லி முறையிட்டால் போதும்... என்ன பேசுவது என நடுக்கம் வந்தால், குழப்பம் வந்தால், தயக்கம் ஏற்பட்டால் மனதில் வாராஹியை மனதார நினைத்துக் கொண்டால் போதும், நடுக்கம் காணாமல் போகும்; குழப்பம் தெளிவாகும்; தயக்கம் உடைபடும். வார்த்தைகள் மளமளவென வரும்.
வாராஹி காவல் தெய்வம். நல்லவைக்கும் நல்லவர்களுக்கும் காவல் தெய்வமாகத் திகழ்பவள். தீயவற்றை அழித்து நல்லதைக் காக்கும் காவல் தெய்வம் வாராஹி என்று புகழ்கிறார்கள் சாக்த வழிபாட்டு பக்தர்கள்.
நரசிம்ம உபாஸனை என்பது உக்கிரமானது. பயங்கரமானது. அதேபோல், வாராஹி உபாசனையும் பயங்கரமானது என்றொரு எண்ணம் உள்ளது. ஸ்ரீவித்யா பூஜா முறைகளின்படி வாராஹியின் பூஜை அளப்பரியது. உயர்ந்தது. ஆனால் அவள் பயங்கர தேவதை அல்ல. பயங்கரமானவர்களை பயந்து தெறித்து ஓடச் செய்பவள். கருணையே உருவானவள் வாராஹி. கனிவுடன் தன் பக்தர்களை அணுகுபவள். தன்னுடைய கணவரான மகாவிஷ்ணுவைப் போலவே, தன் திருக்கரங்களில் சங்கு சக்கரம் வைத்துக்கொண்டு, சகல குணங்களுடனும் அற்புத மனைவியாகத் திகழ்கிறாள்.
வலது கரத்தில் அபய முத்திரையை தன் பக்தர்களுக்குக் காட்டி, ‘நானிருக்கிறேன்’ என்று நம்முடைய பயத்தையெல்லாம் போக்குகிறாள் வாராஹிதேவி. அபயக்கரம் காட்டுகிற அதேவேளையில் கலப்பையும் ஏந்தியிருக்கிறாள். இந்தக் கலப்பை நான்குவித குணங்களைக் கொண்டவை.
கடினமான பூமியைப் பிளக்கிறது. ஆழமாக உழுகிற பணியைச் செய்கிறது. மூன்றாவதாக மண்ணை மிருதுவாக்குகிறது. கடைசியில் அதில் பயிர்கள் செழித்து வளரச் செய்கிறது. அதனால் நமக்கு உணவு கிடைக்கும்படி செய்கிறது. அதுபோல, நாம் உண்ட உணவு செரிக்காமல் இருந்தாலும் அதையும் உழுது உணவைப் பக்குவப்படுத்தி மிருதுவாக்கி திசுக்கள் வளர உதவி செய்கிறது. நம் ஐம்புலன்களாலும் நுகரும் இறுகிய மனதையும் தெளிவில்லாத புத்தியையும் மிருதுவாக்கி, மென்மையான நெஞ்சத்தில் அன்பு வளரவும் தெளிவடையும், புத்தியில் இறையுணர்வு வளரவும் வழி வகுக்கிறது. வழிபாட்டைத் தொடர்ந்து ஈடுபட்டால், வாராஹி அப்படியொரு தெளிவைக் கொடுப்பாள்!
இந்த தேவி வராஹ முகம் கொண்டாள். அதாவது பன்றியின் முகம். ‘மானமில்லாப் பன்றிபோல் உபமானமுமில்லை’ என்றோரு வாக்கு உண்டு. தேவர்களுக்கு அதிபதியான அதிரூப சௌந்தர்யம் கொண்ட திருமால் கடலில் புதைந்த உலகை மேலே கொண்டு வர மானமில்லாப் பன்றி வடிவெடுத்தார். பன்றி மானமில்லாததாகக் கருதப்படுவதாயினும் அதன் உயர்ந்த ஆன்ம குணம் இழிவு அசிங்கம் என்பதெல்லாம் இல்லை, மான அவமானங்கள் ஏதுமில்லை என்பதை உணர்த்துகிறது என்கிறார் வராஹி வழிபாடு செய்யும் அன்பர்கள்!
சாக்த வழிபாட்டில், வராஹி வழிபாடு முக்கியமானது. வாராஹியை தொடர்ந்து வழிபட்டு வந்தால், கர்வமில்லாத பக்குவத்தைத் தந்தருள்வாள். புகழ்ச்சிக்கு அடிமையாகாத பக்குவத்தைக் கொடுப்பாள் என்கிறார்கள்.
மாதந்தோறும் பஞ்சமி திதி வரும். வளர்பிறை பஞ்சமி திதி வாராஹி வழிபாட்டுக்கு உரிய நாள். தேய்பிறை பஞ்சமியிலும் வாராஹி தேவியை வழிபட்டால், வளம் அனைத்தும் தந்தருள்வாள்.
வருகிற 3ம் தேதி பஞ்சமி. பஞ்சமியில் வாராஹியை ஆத்மார்த்தமாக வழிபடுங்கள். மனதைப் பக்க்குவப்படுத்தித் தருவாள். பகை அனைத்தையும் விரட்டியடிப்பாள். கடன் முதலான பிரச்சினைகளில் இருந்து நம்மை மீட்டெடுப்பாள்.