

நல்லது நடக்க நரசிம்மர், அல்லவை விலக்க நரசிம்மர் என்பார்கள். மனித உடலும் சிங்க முகமும் கொண்டு உக்கிர மூர்த்தியாக காட்சி தரும் நரசிம்மருக்கு பல க்ஷேத்திரங்கள் உள்ளன. நரசிம்ம மூர்த்தியை தொடர்ந்து புதன் கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் வழிபட்டு வந்தால், நம் வாழ்வின் கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்புகளையும் அழித்தொழிப்பார் நரசிங்கப் பெருமாள் என்பது ஐதீகம்.
மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில், நரசிம்ம அவதாரமும் ஒன்று. அதேபோல் மற்றைய அவதாரங்களுக்கும் நரசிம்ம அவதாரத்துக்கும் உள்ள வித்தியாசம், இருப்பதிலேயே மிகக்குறைந்த பொழுதுகளே ஆன அவதாரம்... நரசிம்ம அவதாரம்.
இரணியனை வதம் செய்வதற்காகவும் பிரகலாதனின் பக்தியை உலகுக்கு உணர்த்தவும் எடுத்த அவதாரமே நரசிம்ம மூர்த்தி அவதாரம். எதிர்ப்புகளையும் இன்னல்களையும் அழித்தொழிப்பவர் நரசிம்மர் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.
உக்கிர மூர்த்தியாகத் திகழும் நரசிம்மரை எவரொருவர் தொடர்ந்து ஆராதனைகள் செய்து வழிபட்டு வருகிறார்களோ அவர்களை தீயசக்திகள் அண்டாமல் காத்தருள்வார் என்பது ஐதீகம். தொடர்ந்து நரசிம்மரை வழிபட்டு பிரார்த்தித்து வந்தால், எதிரிகள் பலமிழப்பார்கள். எதிர்ப்பே இல்லாமல் போகும்.
’எதைச் செஞ்சாலும் தடையாவே இருந்துக்கிட்டு இருக்குதே’ என்று புலம்பி வருந்தாதவர்களே இல்லை. வீடு கட்டி பாதியில் தடை ஏற்பட்டு அப்படியே போட்டது போட்டபடி இருக்கிறதே’ என்று கவலைப்படுவார்கள் சிலர். ‘எந்தத் தொழில் செய்தாலும் ஜாண் ஏறினால் முழம் சறுக்குகிறதே’ என்று தவித்து மருகுவார்கள் சிலர். ‘படிப்புக்கேத்த வேலை இல்லை, வேலைக்கேத்த சம்பளம் இல்லை’ என்று கலங்குவார்கள் சிலர்.
இப்படியாக வாழ்வில் எந்தத் தடை ஏற்பட்டிருந்தாலும் தொடர்ந்து நரசிம்ம மூர்த்தியை தரிசிப்பதும் வழிபாடுகள் செய்வதும் மகத்தான மாற்றங்களைத் தரும், வாழ்வில் ஏற்றங்களைக் கொடுக்கும். நம்மை எதிரிகளின் கண்முன்னே சிறப்புற வாழச் செய்வார் நரசிம்மர் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் மந்திரத்தைப் பாராயணம் செய்து வாருங்கள்.
ஸ்ரீநரசிம்ம மந்திரம் :
யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்துபித்ருத்வம்
அந்யேஷூ அவிசார்ய தூர்ணம்ஸ்தம்பே
அவதார தம் அநந்ய லப்யம் லக்ஷ்மி
ந்ருஸிம்ம சரணம் பிரபத்யே.
புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நரசிம்ம மூர்த்தியின் மந்திரத்தைச் சொல்லி நரசிம்மரை தரிசனம் செய்யுங்கள்.
சென்னை திருவல்லிக்கேணி கோயிலில் நரசிம்மருக்கு தனிச்சந்நிதி அமைந்துள்ளது. சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில், சிங்கபெருமாள் கோவிலில் கோயில் கொண்டிருக்கிறார் நரசிங்கப் பெருமாள்.
விழுப்புரம் அருகே ஒரே நேர்க்கோட்டில் மூன்று நரசிம்ம க்ஷேத்திரங்கள் இருக்கின்றன. மதுரையில் இருந்து மேலூர் செல்லும் வழியில் ஒத்தக்கடையில் ஆனைமலை யோக நரசிம்மர் அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார்.
ஸ்ரீரங்கம் பகுதியில் காட்டழகிய சிங்கர் கோயில் அற்புதமாக அமைந்திருக்கிறது. நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகிலேயே நரசிம்மருக்கும் கோயில் அமைந்துள்ளது.
மேலும் பல க்ஷேத்திரங்களில் குடிகொண்டு நமக்கு அருள் வழங்கிக் கொண்டிருக்கிறார் நரசிம்மர்.
தேனி மாவட்டத்தில் லக்ஷ்மி நரசிம்மர் கோயில் அமைந்திருக்கிறது. லக்ஷ்மி நரசிம்மரை மனதார வழிபட்டால், கடன் தொல்லையில் இருந்து மீளலாம். சகல சம்பத்துகளும் கிடைக்கப் பெறலாம். இல்லத்தில் இதுவரை இருந்த தரித்திர நிலையில் இருந்து நமக்கு ஏற்றமும் மாற்றமும் கொண்டு வாழ்வில் ஒளியேற்றுவார் நரசிம்மர் என்கின்றனர் பக்தர்கள்!
நரசிம்மருக்கு பானக நைவேத்தியம் செய்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். தொடர்ந்து சனிக்கிழமைகளிலும் புதன்கிழமைகளிலும் நரசிம்மரை தரிசித்து, நரசிம்ம மந்திரம் ஜபித்து வேண்டிக்கொள்ளுங்கள். தடைகளும் எதிர்ப்புகளும் காணாமல் போகச் செய்வார் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி!