Last Updated : 31 Dec, 2020 05:20 PM

 

Published : 31 Dec 2020 05:20 PM
Last Updated : 31 Dec 2020 05:20 PM

லட்சுமி கடாட்சம் பெற எளிய வழிகள்! 

கடாட்சம் என்பது பேரருள். கருணைப் பார்வை. அருட்பார்வை. தெய்வாம்சத்தின் வெளிப்பாடு. சொல்லப்போனால், தெய்வாம்சமே இதுதான் என்கிறது ஞானநூல்.
புத்தகங்களை, நூல்களை, எழுதுகோல் உள்ளிட்ட உபகரணங்களை சரஸ்வதி தேவியின் அம்சமாகவே பார்க்கிறோம். அதேபோல், காசு, பணம், நகை, ஆபரணம், பத்திரம் முதலானவற்றையெல்லாம் மகாலக்ஷ்மியின் அம்சமாகவே பார்க்கிறோம். அதனால்தான் இவற்றையெல்லாம் கண்களில் ஒற்றிக் கொள்கிறோம். நல்லநா, மிக முக்கியமான நாள் என்றெல்லாம் பார்த்து வாங்குகிறோம்.

தூய்மை எங்கிருக்கிறதோ அங்கே கடவுள் சக்தியும் குடியிருக்கும் என்பது ஐதீகம். இல்லத்தில் தூய்மை இருந்தால், உண்மையான பக்தி இருந்தால், அங்கே கடவுளின் சாந்நித்தியம் பீடமிட்டு அமர்ந்துகொள்ளும். அதேபோல் நம் உள்ளத்தில் உண்மையும் தூய்மையும் இருந்தால், மனத்தில் தெய்வம் நிறைந்திருக்கும். இன்னும் இன்னுமாக வழிநடத்தும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

குடும்பம் சீரும் சிறப்புமாக திகழ்வதற்கு மகாலக்ஷ்மியின் கடைக்கண் பார்வை வேண்டும், அவளின் கடாக்ஷம் இருந்தால்தான் சகல ஐஸ்வரியங்களும் இல்லத்தில் நிறைந்திருக்கும் என்கின்றன சாஸ்திர நூல்கள். அதனால்தான், செவ்வாய், வெள்ளிக்கிழமை முதலான நாட்களில் வீட்டை சுத்தம் செய்கிறோம். நன்றாகத் துடைத்து கோலமிடுகிறோம். முதல்நாளே பூஜையறையில் உள்ள பொருட்களையும் விளக்குகளையும் நன்றாகத் தேய்த்து சுத்தமாக்கிக் கொள்கிறோம். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் பூஜைகளை ஆத்மார்த்தமாகச் செய்கிறோம்.

அம்பிகைக்கு உரிய ஸ்லோகங்களை ஒலிக்க விடுகிறோம். பாராயணம் செய்கிறோம். இவையெல்லாம் நல்ல அதிர்வுகளை உண்டு பண்ணும். மகாலக்ஷ்மியை தூப ஆராதனைகள் செய்ய, அவளும் மனம் குளிர்ந்துவருவாள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

மகாலக்ஷ்மியின் கடாட்சம் பெறுவதற்கு, என்னென்ன செய்யவேண்டும் என ஞானநூல்கள் விவரித்துள்ளன.

நம் உள்ளங்கையில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்கிறது சாஸ்திரம். எனவே காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண் விழிப்பது, மகாலக்ஷ்மி முகத்தில் கண் விழிப்பதற்கு நிகரானது. ஆகவே தினமும் காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையைப் பார்த்து கண் திறப்போம்.

அதேபோல், பசுவைப் பார்ப்பது மகாலக்ஷ்மியை தரிசித்த பலன் கிடைக்கும். காலையில் எழுந்ததும் பசுவை தரிசனம் செய்வதும் விசேஷமானது. பசுவில் மகாலக்ஷ்மி குடிகொண்டிருக்கிறாள் என்கிறது தர்ம சாஸ்திரம்.

அதிகாலை 5 மணி என்பது பிரம்ம முகூர்த்தம். இந்த வேளையில் எழுந்திருப்பது வீட்டின் தரித்திரத்தைப் போக்கும். சுபிட்சத்தைக் கொடுக்கும். காலையில் எழுந்த உடனே, வீட்டு முன்வாசலைத் திறக்கக் கூடாது. கொல்லைப் புற வாசலைத்தான் முதலில் திறக்கவேண்டும். அதன் பிறகே முன் வாசலைத் திறக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஐந்துமுகம் கொண்ட விளக்குகளை ஏற்றி வைத்து வழிபடவேண்டும். ஐந்து முக விளக்கின் தீபத்தில் அகம் குளிர்ந்து மகாலக்ஷ்மி நம் இல்லத்தில் நிரந்தர வாசம் செய்வாள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

நம் வீட்டுக்கு வரும் சுமங்கலிகளுக்கு, குங்குமம், பூ, மஞ்சள் கிழங்கு, குடிப்பதற்கு தண்ணீர், ஜாக்கெட் பிட், புடவை என வழங்குவது முந்தைய ஜென்மங்களில் நாம் செய்த பாவங்களெல்லாம் விலகும். இல்லத்தில் உள்ள பெண்களுக்கு மாங்கல்ய பலம் பெருகும். மாங்கல்ய வரம் கிடைக்கப் பெறுவோம்.

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட விளக்கு ஏற்றுவது போலவே வெள்ளி விளக்கு வீட்டில் இருந்தால் அவற்றையும் ஏற்றி வைப்பது விசேஷம். சுக்கிர யோகம் முழுவதுமாக கிடைக்கப் பெறலாம், லக்ஷ்மி கடாட்சத்துடன் நம் இல்லம் சுபிட்சமாக இருக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x