Last Updated : 30 Dec, 2020 09:48 PM

 

Published : 30 Dec 2020 09:48 PM
Last Updated : 30 Dec 2020 09:48 PM

சயன கோலத்தில் ஸ்ரீராமர்! 


ராமபிரான் எப்போதுமே, கோயில்களில் நின்ற திருக்கோலத்தில்தான் காட்சி தருவார். ஆனால் கடலூருக்கு அருகில் உள்ள கோயிலில் சயன திருக்கோலத்தில் காட்சி தருகிறார் ஸ்ரீராமபிரான்.

கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அற்புதமான வைணவத் தலங்களில் வெங்கட்டாம்பேட்டை திருத்தலமும் ஒன்று. கடலூர் மாவட்டத்தில் உள்ளது குறிஞ்சிப்பாடி. இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

நின்ற நிலை, அமர்ந்த நிலை மற்றும் கிடந்த நிலை என மூன்று திருக்கோலங்களில் பெருமாள் காட்சி தரும் ஆலயங்களில், வெங்கட்டாம்பேட்டை ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலும் ஒன்று! இதில் சயன திருக்கோலத்தில் ஸ்ரீராமபிரான் சந்நிதி கொண்டிருக்கிறார்.

வெங்கட்டாம்பேட்டை எனும் சிறிய ஊரின் கிழக்குப் பகுதியில், மிகப்பிரமாண்டமான மதிலுடன் சுமார் 30 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ளது வேணுகோபால சுவாமி கோயில். ஏழு நிலை ராஜகோபுரத்துடன் திருக்கோயில் அமைந்துள்ளது.

கோயில் நுழைவாயிலுக்கு முன்னே கருட மண்டபம் காணப்படுகிறது. ராஜகோபுரத்தின் கீழ்ப்பகுதியில் கி.பி. 1884-ம் ஆண்டின் விஜயநகர மன்னர் காலத்தின் கல்வெட்டுகளும் உள்ளன.

ஆலய கோபுர நுழைவாயிலைக் கடந்ததும், பலிபீடம். அருகே அபூர்வ திருக்கோலத்தில் கருடாழ்வார் சந்நிதி அமைந்துள்ளது. நின்று கை கட்டி வணங்கி நிற்கும் கோலத்திற்கு பதிலாக, இரண்டு கால்களையும் மடித்து பத்மாசன கோலத்தில் கருடன் வீற்றிருக்கிறார். கைகள் இரண்டும் வணங்கி நிற்க, இடக்கையில் நாகம் சுற்றி தொடைமீது படமெடுத்து உள்ளது காணக் கிடைக்காதது என விவரிக்கிறார்கள் கல்வெட்டு ஆய்வாளர்கள். காதுகளில் பத்ர குண்டலங்களோடு கருடாழ்வார் காட்சி தருகிறார்.

மகாமண்டபத்திற்குள் தெற்குநோக்கி இருக்கும் சந்நிதியில், அமர்ந்த நிலையில் ஸ்ரீவைகுண்டவாச பெருமாள் சந்நிதி அமைந்திருக்கிறது. இவருக்கு மேலே ஆதிசேஷன் ஐந்து தலைகளுடன் குடை விரித்து நிற்கிறார். இது அமர்ந்த திருக்கோலம்!

அடுத்து, சடமர்ஷன மகரிஷியின் விருப்பத்திற்கு ஏற்ப இறைவன் காட்சி கொடுத்த ஸ்ரீவேணுகோபால சுவாமி சந்நிதி அமைந்திருக்கிறது. சுமார் 6 அடி உயரத்தில் சங்கு, சக்கரங்களை இரு கரங்களில் ஏந்தியபடி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். மற்ற இரு கரங்களும் புல்லாங்குழலை வாசிக்கும் நிலையில் அமைந்துள்ளன. வேணுகோபாலரின் இருபுறமும் ஸ்ரீருக்மிணி, ஸ்ரீசத்யபாமா இருவரும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.

அடுத்து, ஸ்ரீசெங்கமலவல்லி தாயார் சந்நிதி காணப்படுகிறது. பத்மாசன கோலத்தில் இரு கரங்களில் தாமரை மலர்களை ஏந்தியும், மற்ற இரு கரங்களில் அபய முத்திரையுடனும் தாயார் காட்சி தருகிறார்.

அருகே, சுமார் 18 அடி நீளம் கொண்ட பாம்பணையில் ராமபிரான் துயில் கொள்ளும் சயன திருக்கோலக் காட்சி அற்புதம். திருமாலின் மார்பில் திருமகளும், திருவடியில் சீதாபிராட்டியும், வீர ஆஞ்ச நேயரும் வீற்றிருக்கின்றனர். தர்ப்பைப் புல்லில் துயில் கொள்ளும் ஸ்ரீராமபிரானின் அபூர்வ திருக்கோலம் திருப்புல்லாணி தலத்திலும், திருவெள்ளியங்குடி கோலவல்லி ராமர் கோயிலிலும் அமைந்துள்ளது.

ஸ்ரீராமர் சயனத் திருக்கோலத்தில், காட்சி தரும் வெங்கட்டாம்பேட்டை திருத்தலத்துக்கு வாருங்கள். சயன ராமரை கண்குளிர தரிசித்து பிரார்த்தனை செய்யுங்கள். இழந்ததையெல்லாம் மீட்டுத் தருவார் ராமபிரான்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x