

திருப்பதி ஏழுமலையான் கடனில் இருக்கிறார். அவருக்கு நாம் தரும் உண்டியல் பணம், அவருக்கு வட்டிப்பணம் செலுத்தப் பயன்படுகிறது. கடன் சுமையை உணர்ந்த ஏழுமலையான், நம் கடன் பிரச்சினைகளையெல்லாம் புரிந்து அருள்புரிகிறார் என்கின்றனர் பக்தர்கள். திருப்பதி சென்றால் நம் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். கடன் முதலான பணக்கஷ்டங்கள் அனைத்தும் தீரும் என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்.
திருமலை வேங்கடவன், பத்மாவதி தாயாரை திருமணம் செய்துகொள்வது என முடிவு செய்தார். திருமணத்துக்கு செலவாகும். அந்தச் செலவுக்கு பணம் வேண்டும். அதற்காக குபேரனிடம் கடனாக பணம் வாங்கினார்; திருமணம் செய்துகொண்டார் என்கிறது ஸ்தல புராணம்.
குபேரனிடம் வாங்கிய பணத்துக்கு வட்டி செலுத்த வேண்டும் அல்லவா. நாம் உண்டியலில் செலுத்துகிற பணத்தையெல்லாம் வட்டியாகக் கட்டிக்கொண்டிருக்கிறார் திருமால் என்பதாக ஐதீகம்.
‘திருப்பதி சென்றால் திருப்பம் நிச்சயம்’ என்பது பக்தர்கள் சொல்லும் சொற்றொடர். வேலைக்குச் சென்று சம்பாதிப்பவர்கள், தொழில் செய்பவர்கள், மிகப்பெரிய அளவில் வியாபாரம் செய்பவர்கள் என எண்ணற்ற பக்தர்கள், அதனால்தான் தங்கள் சம்பாத்தியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை ஏழுமலையானைத் தரிசித்து, உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். தொடர்ந்து திருப்பதிக்குச் செல்லும்போதெல்லாம் உண்டியலில் லாபத்தின் குறிப்பிட்ட தொகையை செலுத்துகின்றனர்.
கடன் என்பது எவ்வளவு பெரிய வலி மிகுந்தது, அவமானம் நிறைந்தது என்பவை குபேரனிடம் கட வாங்கி வட்டி கட்டிக்கொண்டிருக்கும் வேங்கடவன் நன்றாகவே அறிந்திருக்கிறார் என்றும் அதனால்தான் தன்னுடைய பக்தர்கள், கடன் பிரச்சினையில் சிக்கித் தவித்தால், கடன் தொல்லையில் கலங்கிக் கண்ணீர் விட்டால், அவற்றை ஏழுமலையான் பொறுத்துக் கொண்டு சும்மா இருக்கமாட்டாராம்.
நல்ல வேலை இல்லாதவர்களுக்கு நல்ல உத்தியோகத்தை வழங்கி அருளுகிறார். தொழிலில் ஏற்றத்தைத் தருகிறார். வியாபாரத்தைச் செழிக்கச் செய்கிறார். திருமண பாக்கியத்தைக் கொடுத்து அருளுகிறார். அதனால்தான், திருப்பதிக்குச் செல்லும் பக்தர்கள், தங்களால் முடிந்த தொகையை ஏற்கெனவே மஞ்சள் துணியில் முடிந்து வைத்த தொகையை உண்டியலில் செலுத்தி வேண்டிக்கொள்கின்றனர் பக்தர்கள்.
கடன் பிரச்சினையில் தத்தளிக்கிறேன், வட்டி கட்டுவதிலேயே வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது என்றெல்லாம் வருந்தி வேண்டிக்கொள்கிறார்கள் பக்தர்கள். கடன் சுமையை நன்கு அறிந்தவர் ஏழுமலையான் என்பதால், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வாழ்வில் நல்ல திருப்பத்தை ஏற்படுத்தி அருளுகிறார் வேங்கடவன்.
திருப்பதி சென்றால் நம் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். கடன் முதலான பணக்கஷ்டங்கள் அனைத்தும் தீரும் என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்.
திருப்பதி ஏழுமலையானை மனதார வேண்டிக்கொண்டு தரிசியுங்கள். வாழ்வில் நல்ல நல்ல திருப்பங்களையெல்லாம் தந்து அருளுவார் வேங்கடாசலபதி!