

கோயில் என்பது வழிபாட்டுக்கு உரியது. பூஜைக்கு உரியது. பிரார்த்தனைகளுக்கு உரியது. அதேசமயம், நம் கலாச்சாரத்தையும் கலையையும் உணர்த்துவது. கலையின் சாளரமாகத் திகழும் எண்ணற்ற ஆலயங்களில் ஒன்றான திருச்செங்கோடு திருத்தலத்தை ரசிக்கலாம், வியக்கலாம். வேண்டிக்கொள்ளலாம்!
திருச்செங்கோடு என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது அந்த அழகு கொஞ்சும் மலை. அடுத்து அந்த மலையின் மீது குடியமர்ந்து கோலோச்சும் அர்த்தநாரீஸ்வரர்.
பிரமாண்ட மலை. எழிலுடன் திகழ்கிறது திருச்செங்கோடு மலை.
வடக்கு வாயிலில் அமைந்துள்ளது, ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரின் பிரதான கோபுரம். கோயிலின் உள்ளே திகழும் சுற்று மண்டபங்கள் அனைத்தும் கலைநயம் மிகுந்த அற்புதப் படைப்புகள்.
குதிரை மீது அமர்ந்திருக்கிற போர் வீரர்களின் சிற்பங்கள் மண்டபத் தூண்களில் கம்பீரத்துடன் திகழ்கின்றன. குதிரைகளின் உடலும் வாளேந்திய வீரர்களின் ஆவேசம் கூடிய மிடுக்கும், இடையிடையே அமைந்த தெய்வத் திருமேனிகளும் விலங்குகளும் பறவைகளுமாக நுட்பத்துடன் வடிக்கப்பட்டிருக்கின்றன!
இந்தத் திருத்தலத்தில், வலது திருக்கரத்தில் வேலாயுதத்தின் தண்டத்தையும், இடது கரத்தில் சேவலையும் தாங்கியபடி செங்கோட்டு வேலவனாகக் காட்சி தருகிறார் முருகப்பெருமான். இப்படியொரு சிலை காண்பதற்கு அரிதான ஒன்று என்கிறார்கள் கல்வெட்டு ஆய்வாளர்கள். இந்தச் சிற்ப அமைப்பும், ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரின் திருவடிவமும் சிற்பக் கலைஞர்களின் திறனுக்கு உதாரணங்கள்!
மேற்கு நோக்கிய நிலையில் சந்நிதி கொண்டிருக்கிற ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரை கண்குளிரத் தரிசிப்பதே பேரானந்தம். நின்ற திருக்கோலத்தில், மேலே உயர்த்திய வலது கரத்தில் தண்டாயுதத்தை ஏந்தியபடி, இடது கையை இடுப்பில் வைத்துக்கொண்டு, உமையொருபாகனாக, சிவபெருமான் காட்சி தரும் நுட்பமும் காணக் கிடைக்காத அதிசயம்.
வலது காதில் மகர குண்டலம். பத்ர குண்டலமான ரத்னத்தால் செய்யப்பட்ட தோடு, இடது காதில் அமைந்து உள்ளது. உடலின் ஒரு பாகம் ஆணுக்கு உரிய ஆடை அலங்காரத்தோடும், இன்னொரு பகுதி பெண்ணுக்கு உரிய நளினத்தோடும் அமைந்துள்ளது. முருகக் கடவுளின் திருவுருவமும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரின் திருவுருவமும் வெள்ளைப் பாஷாணத்தால் செய்யப்பட்ட சிற்ப வடிவங்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
கோயில் மண்டபத் தூண்களில் உள்ள ஒவ்வொரு சிற்பமும் கலைநயத்துடன் வடிக்கப்பட்டு உள்ளன. மலையில் உள்ள ஆலயத்தையும் அர்த்தநாரீஸ்வரரையும் எங்கு திரும்பினாலும் காணக் கிடைக்கிற சிற்பங்களையும் பார்ப்பதற்கும், பார்த்து ரசிப்பதற்கு ஒருநாள் போதாது நமக்கு!
கோயில் என்பது வழிபாட்டுக்கு உரியது. பூஜைக்கு உரியது. பிரார்த்தனைகளுக்கு உரியது. அதேசமயம், நம் கலாச்சாரத்தையும் கலையையும் உணர்த்துவது. கலையின் சாளரமாகத் திகழும் எண்ணற்ற ஆலயங்களில் ஒன்றான திருச்செங்கோடு திருத்தலத்தை ரசிக்கலாம், வியக்கலாம். வேண்டிக்கொள்ளலாம்!