

திருவெண்காடு திருத்தலத்தின் அகோர மூர்த்தி ரொம்பவே விசேஷமான மூர்த்தம். இவரை ஆத்மார்த்தமாக வணங்கி வழிபட்டு வந்தால், துஷ்ட குணங்களும் எண்ணங்களும் ஏற்படாது. நல்ல தர்ம சிந்தனைகள் பெருகும். முன் ஜென்ம வினைகள் அனைத்தும் விலகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சோழ தேசத்தில் நவக்கிரகங்களுக்கும் கோயில்கள் இருக்கின்றன. நவக்கிரகங்களில் புதன் பகவானும் ஒருவர். புதன் பகவான் குடிகொண்டிருக்கும் நவக்கிரக பரிகார தலமாக போற்றப்படுகிறது திருவெண்காடு.
சீர்காழிக்கு அருகில் உள்ள திருத்தலம். பூம்புகாருக்கு அருகில் உள்ள திருத்தலம். வைத்தீஸ்வரன் கோவிலுக்கு அருகில் உள்ள திருத்தலம். இந்தத் தலத்தில், சிவபெருமானின் திருநாமம் ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வரர்.
மிகபிரமாண்டமான திருத்தலம். சிவனாரும் இங்கே விசேஷம். இந்தத் தலத்தில், அகோரமூர்த்தியின் சந்நிதி அமைந்துள்ளது. அகோரமூர்த்தியின் சந்நிதி, தமிழகக் கோயில்களில் அரிதாக இருப்பதாகச் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
திருவெண்காட்டில் மூன்று தீர்த்தங்கள் உள்ளன. இந்த மூன்று தீர்த்தங்களிலும் நீராடி, அருகில் உள்ள பிள்ளை இடுக்கியம்மனை வணங்கி வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம். அதேபோல் சிவனாருக்கும் அம்பாளுக்கும் புதன் பகவானுக்கும் முறையே பூஜைகள் செய்து வேண்டிக்கொண்டாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறலாம்.
திங்கள், புதன், ஞாயிறு முதலான கிழமைகளில் இங்கே வந்து புதன் பகவானை மனதார வேண்டிக்கொண்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம். குபேர யோகத்தைப் பெறலாம். திருமண பாக்கியம் கைகூடும். சகல ஐஸ்வர்யங்களும் பெற்றும் செல்வமும் செழிப்புமாக வாழலாம். கலைத்துறைகளில் மேன்மை பெறலாம் என்கிறது ஸ்தல புராணம்.
அகோரமூர்த்தியின் சந்நிதியில் உங்கள் குறைகளை அவரிடம் சொல்லி மனதார வழிபட்டால், பித்ருக்கள் முதலான தோஷங்கள் விலகும். முன்னோர்களின் ஆசீர்வாதம் பரிபூரணமாகக் கிடைக்கப் பெறலாம். எதிரிகள் பலமிழப்பார்கள். எதிர்ப்புகள் அனைத்தும் விலகும். மனக்கசப்புகளும் மனக்கிலேசமும் நீங்கும்.
இங்கே உள்ள நடராஜர் சந்நிதியும் வெகு அற்புதமாக அமைந்துள்ளது. சிதம்பரம் தலத்து நடராஜர் சந்நிதி போலவே இங்கேயும் அமைந்திருக்கிறது.
புதன் பரிகாரத் தலம். நவக்கிரக திருத்தலங்களில் இதுவும் ஒன்று. பலரும் நேராக கோயிலுக்குள் நுழைந்து புதன் சந்நிதிக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது தவறு என்கிறார்கள் ஆச்சார்யர்கள். முதல் சிவனாரை வழிபடவேண்டும். பின்னர் அம்பாளை வணங்க வேண்டும். அதன் பின்னரே புதன் பகவானை வணங்கி வழிபட வேண்டும் என்பதே மரபு, ஐதீகம்.
திருவெண்காடு திருத்தலத்தின் அகோர மூர்த்தி ரொம்பவே விசேஷமான மூர்த்தம். இவரை ஆத்மார்த்தமாக வணங்கி வழிபட்டு வந்தால், துஷ்ட குணங்களும் எண்ணங்களும் ஏற்படாது. நல்ல தர்ம சிந்தனைகள் பெருகும். முன் ஜென்ம வினைகள் அனைத்தும் விலகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.