Last Updated : 29 Dec, 2020 05:25 PM

 

Published : 29 Dec 2020 05:25 PM
Last Updated : 29 Dec 2020 05:25 PM

மார்கழி திருவாதிரையில் மாங்கல்ய விரதம்!  தீர்க்கசுமங்கலியாக வாழ வைக்கும் நோன்பு! 

திருவாதிரை என்றதும் நம் நினைவுக்கு வருவது சிதம்பரம் திருத்தலம்தான். சிதம்பரம் என்றதும் நம் நினைவுக்கு வருபவர் நடராஜ பெருமான். மார்கழி மாதத்தின் திருவாதிரை, சிறப்பானதொரு நாளாக போற்றப்படுகிறது. இந்தநாளில், வீடுகளில் பெண்கள் செய்கிற முக்கியமான வழிபாடு... மாங்கல்ய விரதம்.
மாங்கல்ய வழிபாடு, மாங்கல்ய நோன்பு, மாங்கல்ய விரதம் என்றெல்லாம் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

மார்கழி திருவாதிரை நாளில், தாலிச்சரடு மாற்றிக்கொள்வது மிகுந்த பலனைத் தந்தருளும் என்பது ஐதீகம். நாளைய தினம் 30ம் தேதி புதன்கிழமை ஆருத்ரா தரிசன வைபவம். இந்தநாளில்தான் மாங்கல்ய நோன்பு இருக்கவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

மற்ற நாட்களில் குளித்துவிட்டு பூஜையறையில் விளக்கேற்றுவோம். ஆனால் மாங்கல்ய நோன்பு இருக்கும் நன்னாளில், பல் தேய்த்து, முகம் கழுவி, பொட்டிட்டுக்கொண்டு பூஜையறையில் விளக்கேற்றி வைத்துக் கொள்ளவேண்டும். சிகைக்காய், எண்ணெய், மஞ்சள் தூள் முதலானவற்றை வைத்து, சுவாமியிடம் வேண்டிக்கொள்ளவேண்டும்.

பின்னர், தலைக்கு எண்ணெயும் சிகைக்காயும்கொண்டு குளிக்க வேண்டும். முகத்துக்கு மஞ்சள் பூசிக்கொண்டு குளிக்க வேண்டும். குளித்துவிட்டு வந்து, பூஜையறையில் அமர்ந்து சிவ பாராயணம் செய்தும் தேவியின் ஸ்லோகங்களையும் சொல்லி வழிபடவேண்டும்.

முன்னதாக, மஞ்சள் கொண்டு பிள்ளையார் பிடித்து வைத்து வழிபட வேண்டும். ‘இந்த நாள் மங்கலகரமான நாளாக அமையட்டும். எங்கள் குடும்பத்தில் வாழ்நாள் முழுவதும் சுபிட்சம் நிலவட்டும். கணவரின் ஆயுள் நீடித்திருக்கட்டும். மாங்கல்யம் பலம் பெறட்டும்’ என்று பிரார்த்தனை செய்துகொள்ளவேண்டும்.

பொதுவாகவே, சூரிய உதயத்துக்கு முன்னதாகவே இவற்றையெல்லாம் செய்து வழிபட்டுவிட்டு, புதுமஞ்சள் சரடில் தாலி கோர்த்து அணிந்துகொள்ளலாம். சூரிய உதயத்துக்குப் பிறகுதான் இந்த வழிபாடு செய்வதாக இருந்தாலும் தோஷமில்லை. ராகுகாலம், எமகண்டம், குளிகை முதலான நேரங்களைத் தவிர்த்து தாலிச்சரடு கட்டிக்கொள்ளலாம்.

காலையிலேயே களியமுது உள்ளிட்டவை நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்துகொள்ளலாம். வீட்டில், பூஜையின் போது கணவர் வீட்டில் இருந்தால், அவரைக்கொண்டே மஞ்சள்சரடை கட்டிக்கொள்ளலாம். அல்லது அத்தை, அம்மா, நாத்தனார் முதலான பெரியவர்கள் இருந்தால் அவர்களைக் கொண்டும் மஞ்சள் சரடு (தாலிச்சரடு) கட்டிக்கொண்டு நமஸ்கரிக்கலாம்.

சுமங்கலிகள் அவசியம் மேற்கொள்ள வேண்டிய பூஜையை ஆண்களும் வழிபடலாம். மனைவியின் ஆயுளுக்காகவும் ஆரோக்கியத்துக்காகவும் வேண்டிக்கொள்ளலாம். திருமணம் ஆகவேண்டும் என்பதற்காக, ஆண்களும் கன்னியரும் கூட இந்த பூஜையை மேற்கொள்ளலாம்.

அம்பாளின் திருநாமங்களில் கல்யாணி என்பதும் ஒன்று. கல்யாணி என்பவள் நித்திய கல்யாணி. அதாவது நித்திய சுமங்கலி. எனவே அம்பாளின் திருநாமங்களையும் ஸ்லோகங்களையும் பாராயணம் செய்வதும் ஒலிக்க விட்டுக் கேட்பதும் எண்ணற்ற பலன்களை வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

அருகில் உள்ள பெண்களை அழைத்து, மங்கலப் பொருட்களை வழங்கி நமஸ்கரிக்கலாம். ஏழு விதமான காய்கறிகளைக் கொண்டு அல்லது 21 வகையான காய்கறிகளைக் கொண்டு கூட்டு, சாம்பார், பொரியல் என சமைத்து, படையலிட்டு வழிபட வேண்டும்.

காலையில் நடராஜர் ஆராதனை அதாவது ஆருத்ரா தரிசனம் பார்த்துவிட்டு விரதம் மேற்கொள்பவர்களும் உண்டு. அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று நடராஜர் பெருமானை வணங்கிவிட்டு விரதம் இருப்பவர்களும் உண்டு.

விரதத்தை காலையில் இருந்து தொடங்கி மாலையில் விளக்கேற்றி ஏழு அல்லது 21 விதமான காய்கறிகளைக் கொண்டும் அதிரசம் முதலான பட்சணங்களைக் கொண்டும் வழிபட்டுவிட்டு, நைவேத்தியம் செய்துவிட்டு, விரதத்தை நிறைவு செய்வார்கள் பெண்கள்.

உண்ணா நோன்பு இருக்க இயலாதவர்கள், ஏதேனும் திரவ உணவு, பழச்சாறு முதலான உணவை உட்கொள்ளலாம் தவறில்லை.

மார்கழி திருவாதிரையில், ஆருத்ரா தரிசன நன்னாளில், மாங்கல்ய நோன்பு இருங்கள். புதுச்சரடு மாற்றிக்கொள்ளுங்கள். வீட்டுப் பெரியவர்களையும் கணவரையும் நமஸ்கரித்து ஆசி பெறுங்கள். தீர்க்கசுமங்கலியாக வாழ்வீர்கள்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x