Last Updated : 29 Dec, 2020 03:00 PM

 

Published : 29 Dec 2020 03:00 PM
Last Updated : 29 Dec 2020 03:00 PM

ஜேசுதாஸ், இளையராஜா, எஸ்.பி.பி. வரிசையில் வீரமணி ராஜூவுக்கு விருது; ‘ஐயப்ப பக்தர்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்!’  - பாடகர் வீரமணி ராஜூ நெகிழ்ச்சி

‘’ஜேசுதாஸ், இளையராஜா, எஸ்.பி.பி., கங்கை அமரன் முதலான இசை ஜாம்பவான்களுக்கு வழங்கப்பட்டுள்ள ‘ஹரிவராசனம்’ விருது, எனக்கு வழங்கப்படுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஐயப்ப சுவாமியின் பெயரால் வழங்கப்படும் இந்த விருதினை, உலகெங்கிலும் உள்ள ஐயப்ப பக்தர்களுக்கும் என் ரசிகர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்’’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் பாடகர் வீரமணி ராஜூ.

கேரளாவில் வழங்கப்படுகிற மிக முக்கியமான ஆன்மிக விருதாக எல்லோராலும் பெருமையுடன் சொல்லப்படும் விருது ‘ஹரிவராசனம்’ விருது. கேரள அரசாங்கமும் திருவாங்கூர் தேவசம்போர்டும் ஐயப்ப சுவாமியின் பெயரால் வழங்கப்படுகிற ‘ஹரிவராசனம்’ என்கிற விருது, 2020- 2021ம் ஆண்டில் ஐயப்ப பக்திப் பாடகர் வீரமணி ராஜூவுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வீரமணி ராஜூ தெரிவித்ததாவது:

‘’உண்மையிலேயே மனம் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் உள்ளது. பக்தியின் பெயரால் வழங்கப்படுகிற விருது இது. ஆன்மிகத்திற்காக வழங்கப்படுகிற விருது. ஐயன் ஐயப்ப சுவாமியின் பெயரால் வழங்கப்படுகிற விருது. சதாசர்வ காலமும் ஐயப்பனையே நினைத்து, ஐயப்ப சரண கோஷங்களைச் சொல்லி, ஐயப்பனை மனமுருகிப் பாடிக்கொண்டிருக்கிற எனக்கு, இந்த விருது கிடைத்தது அளப்பரிய ஆனந்தத்தைக் கொடுத்துள்ளது.

’ஹரிவராசனம்’ என்கிற விருது கடந்த 2012ம் ஆண்டில் இருந்து வழங்கப்படுகிறது. 2012ம் ஆண்டில்தான் முதன்முதலாக இந்த விருது வழங்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஐயப்பப் பாடல்கள்... தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் ஐயப்பனைப் பற்றிப் பாடல்களைப் பாடிய எங்கள் ஜேசுதாஸ் அண்ணாவுக்கு, முதல் விருது வழங்கப்பட்டது.

பக்தி, சமத்துவம், சமாதானம் முதலானவற்றை இசையின் மூலமாக பரப்புபவர்களுக்காக வழங்கப்படுகிற விருது இது. 2013ம் ஆண்டு, ஏராளமான பாடல்களையும் பக்திப் பாடல்களையும் வழங்கிய கேரளத் திரையுலகின் இசையமைப்பாளர்கள் ஜெய விஜயன் இரட்டை இசையமைப்பாளர்களில், ஜெயனுக்கு விருது வழங்கப்பட்டது.
அடுத்து, 2014ம் ஆண்டு, மிகப்பெரிய பாடகர், நம் எல்லோருக்குமே பிடித்தமான பாடகர், ஐயப்ப சுவாமி பற்றியும் குருவாயூரப்பனைப் பற்றியும் பல பாடல்களைப் பாடிய பாடகர் ஜெயச்சந்திரனுக்கு ‘ஹரிவராசனம்’ வழங்கப்பட்டது.

2015ம் ஆண்டு, ‘ஹரிவராசனம்’ விருது, கவிஞர், இசையமைப்பாளர், வசனகர்த்தா, பாடகர், இயக்குநர் என பல்துறை வித்தகரான கங்கை அமரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஜேசுதாஸ் அவர்களுக்காக, கங்கை அமரன் வழங்கிய ’வால்யூம் சிக்ஸ்’ சி.டி. மிகப்பெரிய அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது. எனக்குத் தெரிந்து அந்த சி.டி. குறைந்தபட்சம் பத்து லட்சத்துக்கும் அதிகமாக விற்பனை செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியது. அற்புதமான பாடல்களைக் கொண்டவை அவை!

’பாடும் நிலா’ என்று நாம் செல்லமாக அழைக்கக்கூடிய எஸ்.பி.பாலசுப்ரமணியம், இந்தியாவில் உள்ள எண்ணற்ற மொழிகளில் பாடிய பாடகர் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். எல்லா தெய்வங்கள் குறித்தும் தன் இனிய குரலால் பாடியிருக்கிறார். 2016ம் ஆண்டு, ‘ஹரிவராசனம்’ விருது இவருக்கு வழங்கப்பட்டது.

அந்த ஆண்டில், எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு விருது வழங்கும் விழா சபரிமலையில் நடைபெறும் தருணத்தில், நானும் சபரிமலையில் இருந்தேன். விழாவுக்குச் சென்றிருந்தேன். அப்போது, நாங்கள் எல்லோரும் ஒன்றாகத்தான் சுவாமி தரிசனம் செய்தோம். அந்த சமயத்தில் எஸ்.பி.பி. அவர்கள், அங்கே இருந்தவர்களிடம்... ‘வீரமணி ராஜூ போன்றவர்கள்தான் மக்களிடம் ஐயப்பன் மீதான பக்தி வளருவதற்குக் காரணமாக இருக்கிறார்கள். அதனால் இவரைப்போன்றவர்களுக்குத்தான் விருது கொடுக்கவேண்டும். அதுதான் பெருமைப்படுத்தும் விதமாகவும் இருக்கும். பொருத்தமாகவும் இருக்கும்’ என்று பெருந்தன்மையுடன் தெரிவித்ததை, இப்போது விருதுக்கு என்னைத் தேர்வு செய்து வெளியிட்ட தருணத்தில் நெகிழ்வுடன் நினைத்துப் பார்க்கிறேன். பாடும் நிலா பாலு அவர்கள், பரந்துபட்ட மனம் கொண்டவர். குழந்தையைப் போல் குணம் கொண்டவர். எஸ்.பி.பி. அவர்கள் என்னையும் விழாவுக்கு வரச்சொன்னார். அவருக்கு விருது வழங்கும் வரை நானும் இருந்துவிட்டுத்தான் மலையை விட்டு வந்தேன்.

அதேபோல், கங்கை அமரன் அவர்களும் ‘ராஜூ... உனக்கு ‘ஹரிவராசனம்’ விருது நிச்சயம் கிடைக்கும்’ என்று ஆசீர்வாதமாகவும் அன்புடனும் தெரிவித்தார்.

2017ம் ஆண்டு, மலையாளத்தில் ஏராளமான ஐயப்ப பாடல்களைப் பாடியிருக்கிற, தமிழிலும் பல பாடல்கள் பாடியிருக்கிற எம்.ஜி.ஸ்ரீகுமார் அவர்களுக்கு ‘ஹரிவராசனம்’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

2018ம் ஆண்டு, பிரபல பின்னணிப் பாடகி கே.எஸ்.சித்ராவுக்கு விருது வழங்கப்பட்டது. 2019ம் ஆண்டு, ’கானக்குயில்’, ‘கான சரஸ்வதி’ என்றெல்லாம் நாம் போற்றிக் கொண்டாடிக்கொண்டிருக்கிற பி.சுசீலாம்மாவுக்கு ‘ஹரிவராசனம்’ விருது வழங்கப்பட்டது. இவர் செய்த சாதனைகளெல்லாம் இன்னும் எவராலும் முறியடிக்கப்படாமல் இருக்கிறது என்பதுதான் சத்தியமான உண்மை.

கடந்த ஆண்டு, 2020ம் ஆண்டு, நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கிற, உலக மக்கள் அனைவரின் இதயங்களிலும் தனியிடம் பிடித்து தன் இசையால் அனைவரையும் ஈர்த்திருக்கிற, அற்புதமான இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு ‘ஹரிவராசனம்’ விருது வழங்கப்பட்டது.

இவர்களின் வரிசையிலே என்னையும் சேர்க்கும் விதமாக 2021ம் ஆண்டுக்கான ‘ஹரிவராசனம்’ விருது எனக்கு வழங்கப்படுகிறது என கேரள அரசாங்கம் அறிவித்திருக்கிறது. மானசீகமாக நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

எத்தனையோ விருதுகள் எனக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. பல விருதுகள் பெற்றவன் தான் என்றாலும் இந்த விருது எனக்கு மிகப்பெரிய கெளரவமான, மனதுக்கு நெருக்கமான, ஆத்மார்த்தமாக உணரக்கூடிய விருதாக நினைக்கிறேன். ஐயப்ப சுவாமியின் திருநாமத்தால் வழங்கப்படுகிற விருது என்பதால் கூடுதலாகவே மனம் நெகிழ்கிறது. ஐயப்ப சுவாமியின் அருளும் ஆசியும் கிடைத்து விட்டதாகவே பூரித்துப் போகிறேன்.

கேரள அரசுக்கும் திருவாங்கூர் தேவ சம்போர்டுக்கும் கேரளத்திலும் தமிழகத்திலும் உலகெங்கிலும் உள்ள என்னுடைய ரசிகர்களுக்கும் நன்றி’’ என்று தெரிவித்தார் வீரமணி ராஜு.

2021ம் ஆண்டுக்கான ‘ஹரிவராசனம்’ விருது வழங்கும் விழாவானது, வருகிற ஜனவரி மாதம் 14ம் தேதி, தை மாதப் பிறப்பான சங்கராந்தி நாளில், சபரிமலையில் நடைபெறுகிறது. அப்போது வீரமணி ராஜூவின் கச்சேரியும் நடைபெறுகிறது.‘ஹரிவராசனம்’ விருது, பதக்கம் முதலானவற்றுடன் ஒரு லட்ச ரூபாயும் வழங்கப்படுகிறது.
‘ஐயப்பனின் பேரருள் கொண்ட ’ஹரிவராசனம்’ விருதை உலகம் முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன். சுவாமியே சரணம் ஐயப்பா’ என்று நெக்குருகித் தெரிவித்தார் வீரமணி ராஜு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x