

உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்தனர்.
சைவத் திருத்தலங்களில் முதன்மையான சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா 10 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் பஞ்சமூர்த்தி வீதியுலா நடைபெற்று வருகிறது.
ஸ்ரீநடராஜ பெருமானுக்கும், ஸ்ரீ சிவகாமி சுந்தரி அம்மாளுக்கும் தினசரி சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெறுகின்றன.
கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக உள்ளூர் பக்தர்கள் மட்டும் திருவிழாக்களில் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது. இந்த நிலையில் வெளியூர் பக்தர்களும் தரிசன விழாவில் கலந்து கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடந்து கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உட்பட்டு தேரோட்டம் மற்றும் தரிசன விழாக்கள் நடத்திட மாவட்ட நிர்வாகத்திடம் இ-பாஸ் பெற வேண்டும் என்று நேற்று (டிச.28) மதியம் அறிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் கீழ வீதியில் நள்ளிரவு 12 மணி வரை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோயில் தீட்சிதர்களும் இ-பாஸ் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன், எஸ்.பி. ஸ்ரீஅபிநவ், மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்தியா, எம்எல்ஏ பாண்டியன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் மற்றும் தீட்சிதர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், போராட்டம் முடிவுக்கு வரவில்லை. பின்னர் உள்ளூர் பக்தர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்று அதிகாரிகள் கூறினர். இதனைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இருந்த போதிலும் முற்றிலுமாக இ-பாஸ் இல்லை என்று அறிவிக்க வேண்டும் என்று கூறிய தீட்சிதர்கள், தேர் கோயிலுக்குள்ளேயே சுற்றி வரும் என்று கூறிவிட்டுச் சென்று விட்டனர்.
இந்த நிலையில் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான தேரோட்டம் இன்று (டிச. 30) நடைபெற்றது. இன்று காலை கோயிலில் இருந்து மிகவும் தாமதமாக ஸ்ரீநடராஜ பெருமானும், ஸ்ரீசிவகாம சுந்தரி அம்பாள், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீசண்டிகேஷ்வரர் ஆகிய சுவமிகள் தேரில் எழுந்தருளினர்.
பின்னர், கீழவீதி நிலையில் இருந்து சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன், எம்எல்ஏ பாண்டியன் மற்றும் பக்தர்கள் வடம் பிடிக்க 5 தேர்களும் புறப்பட்டு தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதிகள் வழியாகச் சென்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நாளை (டிச.30) தரிசன விழா நடைபெறுகிறது.
கடலூர் எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் தலைமையில் சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.