

திருநள்ளாற்றில் தங்கக் காக வாகனத்தில் சனி பகவான் எழுந்தருளினார்.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில், சனி பகவானுக்கு தனி சன்னதியுடன் கூடிய புகழ்பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோயிலில், வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி நாளை (டிச. 27) தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. அதிகாலை 5.22 மணிக்கு சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பிரவேசிக்கிறார்.
இதையொட்டி, இக்கோயிலில் அனுக்கிரஹ மூர்த்தியாக உள்ள சனீஸ்வர பகவானுக்கு இன்று (டிச. 26) சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. பின்னர், உற்சவர் சனீஸ்வர பகவான் வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளினார். அங்கு தங்கக் காக வாகனத்தில் வைத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்துகொண்டனர்.