

காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் இன்று அதிகாலை நடைபெற்ற பரமபதவாசல் திறப்பு வைபவத்தில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கத்துக்கு இணையாகக் கருதப்படும் பிரசித்திப் பெற்ற காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில், இன்று (டிச. 25) காலை 5.30 மணியளவில், நித்யகல்யாணப் பெருமாள் ரத்தின அங்கியில் பரமபதவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது, கோயிலின் உள்ளேயும், வெளியேயும் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பெருமாளை வழிபாடு செய்தனர். வஜ்ராங்கி அணிவித்து அலங்கரிக்கப்பட்டிருந்த மூலவர் ரங்கநாதப் பெருமாளை திரளானோர் நீண்ட வரிசையில் சென்று தரிசனம் செய்தனர்.
காரைக்கால் கோதண்டராமர் பெருமாள் கோயிலில் காலை 7 மணியளவில், கோதண்டராமர் கண்ணாடி சேவையில் காட்சியளித்தார். திருமலைராயன்பட்டினம் வீழி வரதராஜப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் பரமபத வாசல் வழியே பெருமாள் காட்சியளித்தார். திருநள்ளாறு நளநாராயணப் பெருமாள், நிரவி கரியமாணிக்கப் பெருமாள் கோயில், வரிச்சிக்குடி வரதராஜப் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசி வழிபாடு விமரிசையான முறையில் நடத்தப்பட்டு, சுவாமிகள் வீதியுலா நடைபெற்றது.