Published : 25 Dec 2020 11:23 AM
Last Updated : 25 Dec 2020 11:23 AM

கரோனா தடுப்பு நடவடிக்கை; பக்தர்கள் இல்லாமல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் பரமபதவாசல் வழியாக வெளியே வரும் நம்பெருமாள். படம்: ஜி. ஞானவேல் முருகன்.

திருச்சி

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை 4.45 மணிக்கு நடைபெற்றது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் கோயில் வரலாற்றில் முதன்முறையாக பக்தர்கள் இல்லாமல் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

108 வைணவ திவ்ய தேசத் தலங்களில் முதன்மையான தலம் என்றும் பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் நடுவே தீவு போன்ற பகுதியில் அமைந்துள்ள இத்திருக்கோயில் மிகவும் பழமையானது.

இத்திருக்கோயிலில் வீற்றுள்ள ரங்கநாதருக்கு ஆண்டு முழுவதும் உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. இவை அனைத்துமே சிறப்பு வாய்ந்தது என்றாலும், இதில் முக்கிய திருவிழாவான மார்கழி மாதத்தில் நடைபெரும் திருஅத்யயன உற்சவம் என்று அழைக்கப்படும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா மிகவும் பிரசித்திப் பெற்றது.

பகல் பத்து திருமொழி திருநாள், ராப்பத்து திருவாய்மொழி திருநாள் என 21 நாட்கள் நடைபெறும் இந்த விழா, டிச.14-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல் பத்து திருநாள் டிச.15-ம் தேதி தொடங்கி டிச.24-ம் தேதி வரையில் நடைபெற்றது. பகல் பத்து திருநாட்களில் உற்சவரான நம்பெருமாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வந்தார்.

மோகினி அலங்காரம்

பகல் பத்து திருநாளின் 10-ம் திருநாளான நேற்று (டிச. 24) நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் (நாச்சியார் திருக்கோலம்) காட்சியளித்தார்.

சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் பகல்பத்து திருநாள் முடிவுற்று ராப்பத்து திருநாள் இன்று (டிச. 25) தொடங்கியது. வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய உற்சவமான சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலை 2.30 மணி முதல் மூலவரான ரங்கநாதர், உற்சவரான நம்பெருமாள் ஆகியோருக்கு மூலஸ்தானத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, அதிகாலை 3.30 மணியளவில் ரத்தினஅங்கி, கிளி மாலை, பாண்டியன் கொண்டை ஆகிய சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, சந்தனு மண்டபம், ராஜமகேந்திரன் திருச்சுற்று, நாழிக்கோட்டான் வாயில், தங்கக் கொடிமரம் வழியாக, பிரதட்சணமாக இரண்டாம் பிரகாரமான குலசேகரன் திருச்சுற்று வழியாக விரஜா நதி மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்களை ஓதினர்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்புக்குப் பின் பாண்டியன் கொண்டை, கிளி மாலை, ரத்தின அங்கி அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தில் சேவை சாதித்த நம்பெருமாள்.
படம்:ஜி.ஞானவேல்முருகன்.

இதைத் தொடர்ந்து, அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக நம்பெருமாள் வெளியே வந்தார்.

சொர்க்கவாசலைக் கடந்து வந்த நம்பெருமாள் சந்திர புஷ்கரணி, ராமர் சன்னதி, நடைப்பந்தல் வழியாக 5-ம் பிரகாரம் எனப்படும் திருக்கொட்டகை பகுதிக்கு வந்தார். அங்கு நம்பெருமாளுக்கு சாதரா மரியாதை செய்யப்பட்டது. பின்னர், ஆயிரங்கால் மண்டபத்துக்கு வந்த நம்பெருமாளுக்கு அலங்காரம், அமுது செய்யப்பட்டு, காலை 8 மணி முதல் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

தொடர்ந்து, மாலையில் அரையர் சேவை, இரவு திருப்பாவாடை கோஷ்டி, வெள்ளிச்சம்பா அமுது செய்தல் உள்ளிட்டவை நடைபெற்று, ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து வீணை வாத்தியத்துடன் புறப்பட்டு இரவு 10 மணிக்கு மூலஸ்தானத்தை சென்றடைவார்.

பக்தர்களுக்கு அனுமதியில்லை

சொர்க்கவாசல் திறப்பின்போது இலவச தரிசனம் மற்றும் சிறப்பு கட்டண தரிசனத்தில் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலேயே கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் சொர்க்கவாசல் திறப்பின்போது பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

கோயிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்ட கோயில் வளாகம்.
படம்: ஜி.ஞானவேல்முருகன்

காலை 8 மணியிலிருந்து ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு பின் தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள் சுவாமி தரிசனத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
படம்: ஜி.ஞானவேல்முருகன்

தொடர்ந்து, ராப்பத்து திருநாளிலும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் குழுத் தலைவர் வேணு சீனிவாசன், இணை ஆணையர் பொன். ஜெயராமன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

விழாவையொட்டி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x