

மீன ராசி வாசகர்களே
அடிப்படை உரிமைகளை எப்போதும் விட்டுக்கொடுக்காத நீங்கள் அடுத்தவர்களின் சுதந்திரத்தில் அநாவசியமாகத் தலையிட மாட்டீர்கள். சமயோஜிதப் புத்தியால் எதையும் செய்து முடிக்கும் நீங்கள், எப்பொழுதும் பரபரப்பாக இருப்பீர்கள். இதுவரை உங்கள் ராசிக்குப் பத்தாம் வீட்டில் அமர்ந்து உத்தியோகத்தில் பிரச்சினைகளையும், புதிய முயற்சிகளில் தடைகளையும் தந்த சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை வரை உள்ள காலகட்டங்களில் லாப வீட்டில் அமர்வதால் இனி எதிலும் உங்கள் கை ஓங்கும்.
இதுவரை எந்த வேலையை எடுத்தாலும் முழு மன நிறைவுடன் முடிக்க விடாமல் தடுத்தாரே! உழைப்பு உங்களிடத்தில் இருந்து, உயர்வு மற்றொருவருக்குப் போனதே! பணம், காசு வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி அடுத்தடுத்து செலவுகளும் துரத்தியதே! வேலைப்பளுவால் எல்லோரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசிக் கெட்ட பெயர் எடுத்தீர்களே! நிரந்தரமாக எதிலும் வருமானம் கிடைக்காமல் தவித்தீர்களே! இப்படிப்பட்ட தொல்லைகளெல்லாம் இனி நீங்கும்.
உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் புதிய தொழில் தொடங்குவீர்கள். சனிபகவான் 29.03.2023 முதல் 24.08.2023 வரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்வதால் இக்காலக்கட்டத்தில் கடன் பிரச்சினை, திடீர் பயணங்கள், வீண் செலவுகள், கவலைகள் வந்து செல்லும். வாகனத்தில் செல்லும் போதும் சாலையைக் கடக்கும்போதும் கவனம் தேவை.
சனிபகவான், உங்கள் ராசியைப் பார்ப்பதால் படபடப்பு, கோபம், ஒவ்வாமை வந்து நீங்கும். தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். செரிமானக் கோளாறு, நரம்புப் பிரச்சனைகள் வந்து நீங்கும். சனிபகவான் உங்களின் ஐந்தாம் வீட்டைப் பார்ப்பதால் பிள்ளைகளின் போக்கில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
படிப்பு, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய வேண்டி வரும். சில நாட்களில் தூக்கமில்லாமல் போகும். பூர்விகச் சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சனிபகவான் உங்களின் எட்டாம் வீட்டைப் பார்ப்பதால் அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். வாகனத்தை இயக்கும்போது அலைபேசியில் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. சாலையை கடக்கும்போது கவனம் தேவை.
சனிபகவானின் நட்சத்திர பலன்கள்
உத்திராடம் நட்சத்திரத்தில் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் காரியத்தடை, வீண் பகை, அலைச்சல், பணப்பற்றாக்குறை, நெஞ்சுவலி வந்து போகும். இதற்கிடையில் 11.05.2021 முதல் 26.09.2021 வரை சனிபகவான் வக்கிரத்துக்குச் செல்வதால் அக்காலகட்டத்தில் சொத்து வழக்கில் வெற்றி கிட்டும். வெளிநாட்டுப் பயணங்கள் தேடி வரும். சித்தர்களைச் சந்தித்து ஆசி பெறுவீர்கள்.
திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.01.2023 வரை சனிபகவான் செல்வதால் நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். குழந்தை பாக்கியம் கிட்டும். பணவரவு உண்டு. சொத்து வாங்குவீர்கள். பிள்ளைகளுக்கு நல்ல வருங்காலத்தை அமைத்துத் தருவீர்கள். இதற்கிடையில் 25.05.2022 முதல் 09.10.2022 வரை சனிபகவான் வக்கிரத்துக்குச் செல்வதால் வீண் அலைச்சல், தர்ம சங்கடம், சிறுசிறு நஷ்டங்கள் வந்து செல்லும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் 27.01.2023 முதல் 19.12.2023 வரை சனிபகவான் செல்வதால் குடும்பத்தில் சந்தோஷம், பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். இதற்கிடையில் 27.06.2023 முதல் 23.10.2023 வரை சனிபகவான் வக்ரமடைவதால் சிறுசிறு விபத்து, முன்கோபம், வீண் படபடப்பு, மனஉளைச்சல், ஒற்றைத் தலை வலி, உடல் உஷ்ணத்தால் அடிவயிற்றில் வலி வந்துச் செல்லும்.
வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளைச் சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். புது வாடிக்கையாளர்களும் அறிமுகமாவார்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தங்கள் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். இடவசதியின்றி தவித்துக் கொண்டிருந்த நீங்கள் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமெண்ட் வகைகளால் லாபம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள்.
உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமைக் கூடும். புதிய வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். உங்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்த சக ஊழி யர்கள் இனி மதிப்பார்கள். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். சம்பளம் உயரும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
இந்தச் சனி மாற்றம் வாழ்க்கையில் வசந்தத்தை ஏற்படுத்துவதுடன் புதிய அத்தியாயத்தையும் தொடங்கி வைக்கும்.
பரிகாரம்
திருநெல்வேலிக்கு அருகிலுள்ள திருவைகுண்டத்தில் அருள்பாலிக்கும் கைலாய நாதர் சன்னதியில் வீற்றிருக்கும் சனீஸ்வர பகவானை அஸ்தம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும்.