Published : 25 Dec 2020 10:12 AM
Last Updated : 25 Dec 2020 10:12 AM

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020: மகர ராசி வாசகர்களே (27.12.2020 முதல் 19.12.2023 வரை) 

மகர ராசி வாசகர்களே

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் சமமாக மதிக்கும் நீங்கள், மற்றவர்கள் மனம்நோகாமல் பேசக்கூடியவர்கள். தடைக்கற்களை படிக்கட்டுகளாக்கி முன்னேறும் நீங்கள் ஆரவாரமில்லாமல் சாதிப்பவர்கள். கொடைக்குணம் கொண்ட நீங்கள் குறுகிய வட்டத்தில் வாழாமல் பரந்து விரிந்த சிந்தனை படைத்தவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்து அடுக்கடுக்காக செலவுகளையும், அலைச்சல்களையும் தந்த சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலகட்டங்களில் ராசிக்குள்ளேயே ஜென்மச் சனியாக அமர்கிறார். ஜென்மச் சனி என்ன செய்யப் போகிறதோ! என்றெல்லாம் அஞ்சாதீர்கள். சனிபகவான் உங்கள் ராசிக்குள்ளேயே ஆட்சிப் பெற்று அமர்வதால் நல்லதையே செய்வார்.

பணவரவையும் அதிகரிப்பார். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டீர்களே! ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களைக் கூட பல முறை அலைந்து முடித்தீர்களே! இழப்பு களும், அவமானங்களும் உங்களை துரத்தியதே! இனி நிம்மதி பிறக்கும். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த பணமெல்லாம் வந்து சேரும். அதிக வட்டிக்கு வாங்கி யிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ஜென்மச் சனி என்பதால் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். நேரம் தவறிச் சாப்பிடுவதால் வயிற்றுப்புண் வரலாம்.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். தோலில் நமைச்சல், எரிச்சல் வந்து நீங்கும். உறவினர்கள், நண்பர்கள் சிலர் உதவி கேட்டுத் தொந்தரவு தருவார்கள். திடீர்ப் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். மகனின் கூடாநட்பு விலகும். புது வீடு, மனை வாங்குவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். சனிபகவான் 29.03.2023 முதல் 24.08.2023 வரை உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பாதச்சனியாக அமர்வதால் இக்காலக்கட்டத்தில் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருங்கள். யாருக்கும் உத்திரவாதக் கையெழுத்திட வேண்டாம்.

சனிபகவான் உங்களின் மூன்றாம் வீட்டைப் பார்ப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். இளைய சகோதரர் வகையில் செலவுகள் இருக்கும். சனிபகவான் ஏழாம் வீட்டைப் பார்ப்ப தால் மனைவிக்கு கால் வலி, கழுத்து வலி வந்து நீங்கும். வீண் சந்தேகத்தைக் குறையுங்கள். சனிபகவான் உங்களின் பத்தாம் வீட்டைப் பார்ப்பதால் உத்தியோகத்தில் மரியாதைக் கூடும். சிலர் சுயதொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும்.

சனிபகவானின் நட்சத்திர பலன்கள்

உத்திராடம் நட்சத்திரத்தில் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் அதிர்ஷ்டவசமான வாய்ப்புகள் தேடி வரும். முடங்கிக் கிடந்த சில பணிகள் இனி முழுமை யடையும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு சாதகமாக முடியும். இதற்கிடையில் 11.05.2021 முதல் 26.09.2021 வரை சனிபகவான் வக்கிரத்துக்குச் செல்வதால் அக்காலகட்டத்தில் வாகனத்தைக் கவனமாக இயக்குங்கள். சின்னச் சின்ன விபத்துகள், மனஉளைச்சல், வீண்பழி வந்து நீங்கும்.

திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.01.2023 வரை சனிபகவான் செல்வதால் மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். மனைவி, பிள்ளைகளுக்கு தங்க ஆபரணம், ஆடைகளை வாங்கித் தருவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். இதற்கிடையில் 25.05.2022 முதல் 09.10.2022 வரை சனிபகவான் வக்கிரத்துக்குச் செல்வதால் வாழ்க்கைத்துணை வழியில் செலவினங்களும், உடல் நலக் குறைகளும் வந்து போகும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் 27.01.2023 முதல் 19.12.2023 வரை சனிபகவான் செல்வ தால் கௌரவப் பதவிகள் தேடி வரும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்குக் குடிபுகுவீர்கள். இதற்கிடையில் 27.06.2023 முதல் 23.10.2023 வரை சனிபகவான் வக்கிர மடைவதால் ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்குவீர்கள். மனைவியின் உடல்நலம் பாதிக்கும்.
வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். முதல் போடாமல் சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படுங்கள். இனி கணிசமாக லாபம் உயரும். பழைய பாக்கிகளைக் கனிவாகப் பேசி வசூலியுங்கள்.

ஹோட்டல், கணினி உதிரி பாகங்கள், துணி வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் வளைந்துக் கொடுத்துப் போங்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் பணிகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். தடைப்பட்ட சம்பள உயர்வு, பதவி உயர்வு எல்லாம் இனி தாமதம் இல்லாமல் கிடைக்கும். மற்றவர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம். அலுவலக ரகசியங்களைப் பாதுகாப்பது நல்லது. பழைய அதிகாரிகள் மாற்றப்பட்டு புதிய அதிகாரியால் உற்சாகம் அடைவீர்கள். இந்தச் சனி மாற்றம் ஓய்வு இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த உங்களுக்கு பணப்புழக்கத்தையும், மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்

திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் பாதையிலுள்ள திருக்கொள்ளிக்காடு எனும் ஊரில் அருள்பாலிக்கும் பொங்கு சனீஸ்வரரை திருவோணம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். முயற்சிகள் வெற்றியடையும்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x