

துலாம் ராசி வாசகர்களே
எந்த ஊர் சென்றாலும் சொந்த ஊரை மறவாத நீங்கள் அவ்வப்போது கடந்தகால நினைவுகளில் மூழ்குவீர்கள். வாழ்க்கையில் உச்சகட்டத்தை எட்டிய பிறகும்கூட விழுந்துக் கிடந்ததை மறக்காதவர்களே! தோல்வி என்பது வெற்றிக்கான ஏணிப்படி தான் என்பதை உணர்ந்த நீங்கள், கடின உழைப்பாளிகள். இதுவரை ராசிக்கு மூன்றாம் வீட்டில் அமர்ந்து உங்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்ற சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரையிலான காலகட்டங்களில் சுக வீடான நான்காம் வீட்டில் அமர்வதால் கொஞ்சம் அலைச்சல் இருக்கத்தான் செய்யும். அர்த்தாஷ்டமச் சனியாக அமர்வதால் சின்னச் சின்ன வேலைகளைக் கூட அலைந்து முடிக்க வேண்டி வரும்.
தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். தாயாய் பிள்ளையாக இருந்தாலும் வாயும், வயிறும் வேறு என்பதைப் போல எந்த விஷயமாக இருந்தாலும் நீங்களே நேரடியாக தலையிட்டு முடிப்பது நல்லது. குடும்பத்தில் தம்பதி களுக்குள் சந்தேகத்தால் அவ்வப்போது சண்டை வெடிக்கும். பெரிதுபடுத்திக் கொள்ளாதீர்கள். தாயாருக்குச் சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிவரும். அரசின் அனுமதிப் பெறாமல் கூடுதல் தளங்கள் அமைத்து வீடு கட்ட வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். சனிபகவான் 29.03.2023 முதல் 24.08.2023 வரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அமர்வதால் இக்காலக்கட்டத்தில் பிள்ளைகளால் செலவு, உறவினர்களின் அன்புத் தொல்லை, பூர்விகச் சொத்தில் சிக்கல்கள் வந்து நீங்கும். கர்ப்பிணிப் பெண்கள் எடை மிகுந்தப் பொருட்களைக் கையாள வேண்டாம்.
சனிபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் அவ்வப்போது சோர்வு, களைப்பு வந்து நீங்கும். கண்ணுக்குக் கீழ் மற்றும் கழுத்துப் பகுதியில் கருவளையம் வரக்கூடும். வெளியிடங்களில் சுத்திகரிக்கப்படாத தண்ணீரை குடிக்க வேண்டாம். சனிபகவான் உங்களின் ஆறாம் வீட்டைப் பார்ப்பதால் பணவரவு அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். மறைமுக எதிரிகளை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சனிபகவான் பத்தாம் வீட்டைப் பார்ப்பதால் உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். வேலை மாறுவீர்கள். புதிய பொறுப்புகளும் உங்களை நம்பித் தரப்படும்.
சனிபகவானின் நட்சத்திர பலன்கள்
உத்திராடம் நட்சத்திரத்தில் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சனிபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் தந்தையாருக்கு மருத்துவச் செலவுகள், அவருடன் கருத்துமோதல்கள் வரும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். அரசுக் காரியங்களில் அலட்சியம் வேண்டாம். வாகனம் ஓட்டும்போது நிதானம் தேவை. சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும்.
இதற்கிடையில் 11.05.2021 முதல் 26.09.2021 வரை சனிபகவான் வக்கிரத்துக்குச் செல்வதால் கெடுபலன்கள் குறைந்து நன்மை பிறக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.01.2023 வரை சனிபகவான் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பெரிய பதவிகள் தேடிவரும். தடைபட்ட திருமணம் கூடிவரும். இதற்கிடையில் 25.05.2022 முதல் 09.10.2022 வரை சனிபகவான் வக்கிரத்துக்குச் செல்வதால் அலுவலகத்தில் சின்னச் சின்னப் பிரச்சினைகள், வீண்பழி, அதனால் உறவிழப்புகள் வரக்கூடும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் 27.01.2023 முதல் 19.12.2023 வரை சனிபகவான் செல்வதால் மனைவி வழியில் ஆதாயம் உண்டு. சொத்துச் சேர்க்கையுண்டு. கருத்து வேறுபாடு கொண்ட சகோதரர் இனி வலிய வந்துப் பேசுவார். இதற்கிடையில் 27.06.2023 முதல் 23.10.2023 வரை சனிபகவான் வக்கிரத்துக்குச் செல்வதால் மனைவியுடன் மனஸ்தாபங்கள், மோதல்கள் அதிகரிக்கும். செலவினங்கள், சிறுசிறு நெருப்புக் காயங்கள், வாகனப் பழுதுகள் வந்து நீங்கும். எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், மூலிகை வகைகளால் அதிக ஆதாயம் அடைவீர்கள்.
உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். அதிகாரிகள் குறைகூறினாலும் அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள். சக ஊழியர்களுடன் போட்டிகள் வந்து நீங்கும். சம்பள பாக்கியைப் போராடிப் பெறுவீர்கள். ஏமாற்றங்களும், மறைமுக அவமானங்களும் வந்து செல்லும். உங்களை வழக்கில் சிக்க வைக்கச் சிலர் முயல்வார்கள். கடின உழைப்பால் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவீர்கள். இந்தச் சனி மாற்றம் இடையிடையே அலைச்சலையும், செலவுகளையும் தந்தாலும் முடிவில் இலக்கை எட்டிப்பிடிக்க வைக்கும்.
பரிகாரம்
கஞ்சனூர் அருகிருலுள்ள திருக்கோடி காவலூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபால சனீஸ்வரரை அஸ்வினி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் பிள்ளைகளுக்கு உதவுங்கள். தடைகள் நீங்கும்.