

ஏகாதசி விரதம் இருந்தால் நம் வாழ்க்கையை வளப்படுத்தி அருளுவார் பெருமாள் என்பார்கள். அதுமட்டுமல்ல... நம்முடைய முன்னோர்களின் ஆசீர்வாதமும் அருளும் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
மார்கழி மாதம் என்பது வழிபாட்டுக்கு உரிய மாதம். மார்கழி மாதம் கலை, கல்வி முதலானவற்றைக் கற்றறியும் மாதம். மார்கழி மாதத்தில் ஜபதபங்களும் மந்திரங்களும் செய்வது மிகுந்த பலன்களைத் தந்தருளும் என்பார்கள்.
மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வரும். பொதுவாகவே ஏகாதசியில் விரதம் மேற்கொள்வதும் சகல புண்ணியங்களையும் தரும் என்பது ஐதீகம்.
அதேபோல், மார்கழி வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருந்தாலோ சொர்க்கவாசல் தரிசனம் மேற்கொண்டாலோ பெருமாளை ஸேவித்தாலோ... வைகுண்டவாசனின் அருளைப்பெறலாம். அதேசமயம், ந\ம்முடைய சொர்க்க வாசல் தரிசனத்தால், நம் முன்னோர்கள் குளிர்ந்து போவார்கள், அருளுவார்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
இதுகுறித்து சொல்லப்படுகிற சரிதம் சிலிர்க்க வைக்கிறது.
வைகானசன் எனும் அரசன், கம்பம் எனும் நகரை சிறப்புற ஆட்சி செய்து வந்தான். ஒருநாள் அவனுக்கு ஒருகனவு... அவனுடைய பெற்றோர், நரகத்தில் தவித்து வருவதாகச் சொல்லி புலம்பினார்கள். இதிலிருந்து எங்களை விடுவிக்க ஏதேனும் செய் மகனே என்று கதறினார்கள்.
இந்தக் கனவைக் கண்டதும் திடுக்கிட்டு எழுந்தான். கவலைப்பட்டான். தாய் தந்தையர் படும் வேதனையை உணர்ந்து கண்ணீர்விட்டான். ஆனால் என்ன செய்வது, ஏது செய்வது என்று தெரியாமல் கைபிசைந்து தவித்தான். முனிபுங்கர் எனும் சித்தபுருஷரை தரிசித்தான். அவரிடம் தான் கண்ட கனவை விவரித்தான்.
உடனே முனிவர், ‘நீயும் உன் மனைவியும் தம்பதி சமேதராகவும் குழந்தைகளுடன் சேர்ந்து குடும்ப சகிதமாகவும் ஏகாதசி விரதத்தை மேற்கொள். ஏகாதசி விரதத்தால் கிடைக்கும் பலன்கள் மொத்தத்தையும் உன் முன்னோர்களுக்கு அர்ப்பணம் செய். அவர்கள் சொர்க்கத்துக்குச் செல்வார்கள். உனக்கு இன்னும் தெய்வ அனுக்கிரகமும் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும் என அருளினார்.
வைகானஸ மன்னன், தன் குடும்பத்தினருடன் வைகுண்ட ஏகாதசியன்று விரதம் மேற்கொண்டான். மகாவிஷ்ணுவை மனதார வழிபட்டான். இயலாதவர்களுக்கு பொன்னும் பொருளும் ஆடைகளும் ஆபரணங்களும் வழங்கி உதவினான்.
அதனால்தான், தாய் தந்தையை இழந்தவர்கள், முன்னோர்கள் பித்ரு லோகத்தில் அவதிப்படாமல், நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, வைகுண்ட ஏகாதசி விரதத்தை மேற்கொள்கின்றனர். அந்த நன்னாளில், அருகில் உள்ள கோயில்களில் பரமபத வாசல் தரிசனம் மேற்கொள்கின்றனர்.
வைகுண்ட ஏகாதசியில், நம் முன்னோர்களுக்காகவேனும் வைகுண்ட ஏகாதசி விரதம் மேற்கொள்ளுங்கள். பெருமாள் கோயிலுக்குச் செல்லுங்கள். இயலாதவர்களுக்கு ஆடை, போர்வை என ஏதேனும் தானம் வழங்குங்கள்.
இதனால் பெருமாளின் அருள் கிடைக்கப்பெற்று, முன்னோர்களின் ஆசியும் கிடைத்து சகல சம்பத்துகளுடன் சகல ஐஸ்வரியத்துடன் வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.