புதன் பகவானுக்கு 17 தீபமேற்றுங்கள்!
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் புதன் திசை என்பது 17 ஆண்டுகள் நீடிக்கும். திருவெண்காடு புதன் பரிகாரத் திருத்தலத்தில் அதனால்தான் இங்கே வந்து 17 தீபங்கள் ஏற்றி வழிபடச் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள். மேலும் 17 முறை வலம் வந்து பிரார்த்தனை செய்வதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் பக்தர்கள்.
திருவெண்காடு திருத்தலம், சீர்காழிக்கு அருகில் உள்ளது. சீர்காழியில் இருந்தும் செல்லலாம். வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்தும் செல்லலாம். திருவெண்காடு என்பது புதன் திருத்தலம். நவக்கிரகங்களில், புதன் பரிகாரத் திருத்தலம் இது.
திருவெண்காடு தலத்தின் இறைவன் சிவபெருமானின் திருநாமம் ஸ்வேதாரண்யேஸ்வரர். மிகப் பிரமாண்டமான திருத்தலமான திருவெண்காடு கோயிலுக்கு வந்து புதன் பகவானை தரிசித்துப் பிரார்த்தனை செய்துகொண்டால், புதன் பகவானைப் பேரருளைப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
திருவெண்காடு மிகப்பெரிய திருக்கோயில் கொண்டதுதான் என்றாலும் திருவெண்காட்டில் தங்குவதற்கு வசதிகள் இல்லை. அருகில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் தங்குவதற்கு வசதிகள் உண்டு. அதேபோல் சீர்காழியிலும் தங்குவதற்கும் வசதிகள் உள்ளன.
மிகப்பிரமாண்டமாகத் திகழும் திருவெண்காடு திருத்தலத்தில் பல மன்னர்கள், திருப்பணிகள் மேற்கொண்டுள்ளனர்.
முதலாம் ராஜராஜ சோழ மன்னன் காலத்தில், இந்தக் கோயில் கற்றளிக் கோயிலாக இருந்திருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதற்கும் முன்னதாக செங்கல் கட்டுமானக் கோயிலாக இருந்திருக்கும் என்றும் தெரிவிக்கிறார்கள்.
சிவனார் குடிகொண்டிருக்கும் கருவறையும் சுற்றுப் பிராகாரக் கோயில்களும் கருங்கல் கோயில் கட்டுமானமாக அமைக்கப்பட்டிருக்கின்றன.
காசியம்பதியில் விஷ்ணு பாதம் உள்ளது. இதை தரிசித்தால் ஏழு தலைமுறை பாவங்களும் விலகும் என்பார்கள். திருவெண்காடு திருத்தலத்தில், ருத்ரபாதம் அமைந்திருக்கிறது. இதை வழிபட்டால், நாம் 21 தலைமுறையில் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் என விவரிக்கிறது ஸ்தல புராணம். திருவெண்காட்டில் உள்ள ருத்ர பாத தரிசனம் மேற்கொண்டால், காசியை விட மூன்று மடங்கு பலன்கள் கிடைக்கும். 21 தலைமுறை பாவங்கள் தொலையும் என்பது ஐதீகம்!
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் புதன் திசை என்பது 17 ஆண்டுகள் நீடிக்கும். திருவெண்காடு புதன் பரிகாரத் திருத்தலத்தில் அதனால்தான் இங்கே வந்து 17 தீபங்கள் ஏற்றி வழிபடச் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள். மேலும் 17 முறை வலம் வந்து பிரார்த்தனை செய்வதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் பக்தர்கள்.
திருவெண்காடு என்றில்லாமல், அருகில் உள்ள ஆலயங்களில் உள்ள நவக்கிரகத்துக்கு, புதன் பகவானை பிரார்த்தித்து, வேண்டிக்கொண்டாலும், புதன் பகவானின் பேரருளைப் பெறலாம்.
