

பூலோக வைகுண்டம் என்று பொற்றப்படும் திருத்தலம் ஸ்ரீரங்கம். 108 வைணவத்தலங்களில் இதுவும் ஒன்று. சொல்லப்போனால், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான தலம் என்று கொண்டாடப்படுகிறது.
வைஷ்ணவத்தில் கோயில் என்று சொன்னாலே, பெரியகோயில் என்று சொன்னாலே அது ஸ்ரீரங்கத்தைத்தையே குறிக்கும் என்பார்கள். சுமார் 156 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரமாண்டமான ஆலயமாகத் திகழ்கிறது ஸ்ரீரங்கம்.
உலகில் எங்கே இருந்தாலும் அங்கே இருந்துகொண்டே, ஸ்ரீரங்கம் இருக்கும் திசையை நோக்கி மனதார வணங்கி பிரார்த்தனை செய்தாலே போதுமாம்... அப்படி வணங்கினாலே, ஸ்ரீரங்கத்துக்கு வந்து சந்திர புஷ்கரணியில் நீராடி, அரங்கனைத் தரிசித்தால் என்ன பலன்கள் கிடைக்குமோ அவை அனைத்தும் கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
வலது திருக்கரம், திருமுடியைத் தாங்கியபடி இருக்க, இடது திருக்கரம் திருப்பாதங்களைச் சுட்டிக்காட்டியபடி இருக்க, தெற்கு முகமாக இலங்கையை பார்த்தபடி அருள்பாலிக்கிறார் ஸ்ரீரங்கநாதர்.
ராமாவதாரம் முடிந்ததும் தோன்றிய பழைமையான கோயில் இது. பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான். முதல் தலமான ஸ்ரீரங்கம்.
இந்தத் தலத்து விமானம் பிரணாவாக்ருதி எனப்படுகிறது. வட இந்தியாவிலிருந்து பெருமளவில் பக்தர்கள் வருகை தரும் சிறப்பு வாய்ந்த வைணவ க்ஷேத்திரம். இந்தியாவில் உள்ள சில பிரம்மாண்டமான கோயில்களில் இதுவும் ஒன்று. சோழர்களால் கட்டப்பட்ட கோயில் என்றாலும் அடுத்தடுத்து மன்னர்கள் பலரும் திருப்பணிகள் செய்திருக்கிறார்கள்.
முக்கியமாக... ட்சம் தரும் திருத்தலம் என்று ஸ்ரீரங்கத்தைக் கொண்டாடுகிறார்கள் பக்தர்கள். இங்கு வந்து பெருமாளை வணங்குவதே நம் பிறவிப்பயன். அதாவது பிறவிப் பயன் இருந்தால்தான் ஸ்ரீரங்கம் க்ஷேத்திரத்துக்கே வரும் பாக்கியம் கிடைக்கும்.
திருமண வரம், குழந்தை பாக்கியம், கல்வி, ஞானம், வியாபார விருத்தி, குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்கவும் விவசாயம் செழிக்கவும் பெருமாளிடம் வேண்டிக் கொள்கின்றனர்.
சுவாமிக்கு வெண்ணெய் சார்த்துதல், குங்குமப்பொடி சாத்துதல், சுவாமிக்கு மார்பிலும் பாதங்களிலும் சந்தனக் குழம்பு அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துவது என பக்தர்களுக்கும் ஸ்ரீரங்கத்துக்கும் ஆத்ம பந்த பிரார்த்தனைகள் உண்டு.
சுவாமிக்கு தூய உலர்ந்த ஆடை சாத்தலாம். ஊதுபத்தி, வெண்ணெய், சிறுவிளக்குகள், துளசி தளங்கள், பூக்கள், பூமாலைகள் முதலியன படைக்கலாம். பிரசாதம் செய்து இறைவனுக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம்.
வைகுண்ட நாயகன் அரங்கனிடம், இதைக் கொடு, அதை வழங்கு என்றெல்லாம் கேட்பதற்கு திட்டமிட்டு சந்நிதிக்குச் செல்வோம். ஆனால் அரங்கனின் அழகில் எதையும் கேட்காமல் பிரமித்து நிற்போம். ஆனால் என்ன... நமக்கு என்ன தேவை என்பதை அரங்கன் அறிவான். தருவான்.
மார்கழி மாதத்தில், அரங்கனை தரிசிப்போம். சொர்க்காவால் திறக்கும் தருணத்தில், பகல் பத்து, ராப்பத்து விழாவில், ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் அரங்கனை ஸேவிப்போம். அரங்கனே அருளிச்செய்வான்!