

தில்லை என்றும் தில்லையம்பதி என்றும் போற்றப்படுகிறது சிதம்பரம் திருத்தலம். ஆடல்வல்லான் நடராஜப் பெருமான் குடிகொண்டிருக்கும் மிக முக்கியமான ஆலயம். கோயில் என்றாலே சைவத்தில் சிதம்பரத்தையும் வைஷ்ணவத்தில் ஸ்ரீரங்கத்தையும் சொல்லுகின்றன ஞானநூல்கள்.
மார்கழி மாதம் வந்துவிட்டால், வைணவத்தில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா நடைபெறும். அதேபோல் சைவத்தில் சிவாலயங்களில் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவும் விமரிசையாக நடைபெறும். ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடைபெறுவது போலவே சிதம்பரம் திருத்தலத்தில் ஆருத்ரா தரிசனமும் கோலாகலமாக நடைபெறும்.
சிதம்பரத்தில் ஆருத்ரா விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற 29ம் தேதி சிதம்பரம் கோயிலின் தேரோட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து, சிதம்பரம் கோயிலின் வெங்கடேச தீட்சிதர் தெரிவித்ததாவது:
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தேர் திருவிழா இம்மாதம் 29ம் தேதி நடைபெற உள்ளது கரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக பக்தர்கள் எவரும் கலந்து கொள்ளாமல் நடராஜர் மற்றும் சிவகாமி சுந்தரி அம்மன் தேர்களை டிராக்டர் புல்டோசர் கொண்டு இழுத்துச் செல்ல கடலூர் மாவட்ட நிர்வாகம் ஆலோசனை கூறியது. இதை கோவில் பொது தீட்சிதர்கள் தங்கள் பொது தீட்சிதர்கள் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செல்வதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின் பேரில் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப பொறியாளர்கள் மூன்று பேர்கள் கொண்ட குழு மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் கிருஷ்ணமோகன் சிதம்பரம்,டிஎஸ்பி லா மேக்,இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் நடராஜர் சிவகாமசுந்தரி அம்மன் தேர்களை டிராக்டர் புல்டோசர் ஆகியவற்றைக் கொண்டு தேரை இழுக்க முடியுமா நடராஜர் சிவகாமசுந்தரி அம்மன் தேர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த தொழில்நுட்ப பொறியாளர்களின் அறிக்கைப்படி தேர்கள் ஓடுவது முடிவு செய்யப்படும் என தெரிகிறது.
இந்த நிலையில், பக்தர்கள் வடம்பிடித்து தேரைச் செலுத்துவது நடக்குமா என்பதுதான் தீட்சிதர்களின் கேள்வியாகவும் மக்களின் ஏக்கமாகவும் இருக்கிறது.
தேரோட்டம் பற்றியும் தேர் வடம்பிடித்து இழுப்பதால் ஏற்படும் பலன்கள் குறித்தும் காஞ்சி மகா பெரியவா சொன்னது நினைவுக்கு வருகிறது.
’நிலக்கிழார் ஒருவர் சொத்து தகராறினால் மன அமைதி இழந்து தவித்த நேரத்தில் காஞ்சி மஹாபெரியவரை தரிசித்தார். அவருடைய அகவேதனைகளை உணர்ந்த பெரியவர் அவரிடம் “ தேர் இழுத்திருக்கிறீர்களா? “ என்று கேட்டார். அதற்கு ‘இல்லை’ என்று பதில் சொன்னார் அந்தப் பணக்காரர்.
’ஒரு முறை தேர்வடம் இழுத்துவிட்டு பிறகு உங்கள் பணியைத் தொடருங்கள். எல்லாம் நன்றாக முடியும்’ என ஆசீர்வதித்தார் மஹா பெரியவர்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு புன்னகையுடன் பெரியவரை சந்தித்து நமஸ்கரித்த நிலக்கிழார், ‘ தீர்ப்பு எனக்கு சாதகமாக வந்தது. தர்மம் தோற்பதில்லை என்ற நம்பிக்கை வந்துவிட்டது’ என்றார். “ தேர் இழுத்தாயோ ….” என காஞ்சி மகான் கேட்டார். ‘ஆமாம் சுவாமி. அதன் பிறகுதான் எல்லாமே நல்லவிதமா நடந்துச்சு’ என்றார் வந்தார்.
தேர் என்பது நடமாடும் கோயில். முதியவர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் முதலானோர் ஆலயத்துக்குச் சென்று இறைவனை தரிசிக்க முடியாதவர்கள் தேர்த்திருவிழா அன்று இறைவனைக் கண்ணாரக் காணமுடியும். அகம் குளிர பிரார்த்தனை செய்யமுடியும்.
கோயிலில் தெய்வசக்தி எப்போதும் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. தெய்வ சாந்நித்தியம் வியாபித்துக்கொண்டிருக்கிறது. தேர்த்திருவிழா அன்றோ தெய்வ சக்தியானது, ஊர் முழுவதும் வெளிப்படும். ஊருக்குள் இருக்கும் தீய சக்திகள் அனைத்தும் அப்போது பறந்தோடி விடும். தேர் இழுப்பவர்களில் பேதங்கள் கிடையாது. எல்லாவற்றிலும் பேதங்கள் பார்க்காத மனிதர்களாலேயே தம் பக்கம் இழுக்க முடியும் என்பதே தேரோட்டம் உணர்த்தும் உண்மை.
தேர் திருவிழாவில் கலந்து கொள்வதற்கும் தேர் இழுப்பதற்கும் தேரோட்ட திருவிழாவுக்கு உதவி செய்வதற்கும் பூர்வ ஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும். பூர்வ ஜென்ம புண்யம் இருந்தால்தான் தேர்த்திருவிழாவில் கலந்து கொள்ள முடியும். தேரோட்டத்தைக் காண முடியும். தேர் வடம் பிடிக்க முடியும்.
தேர்வடத்தை பிடித்தபடி ஆயிரக்கணக்கான பேர் நிற்கும்போது அங்கே அபரிமிதமான மனித சக்தி பொங்கத் தொடங்குகிறது. அத்தனை மனிதர்களும் கடவுளின் அருளை வேண்டி கூடியிருக்கும்போது அங்கே பிரார்த்தனையின் சக்தி மகத்தானதாக மாறுகின்றது. அளப்பரியதாக மாறுகிறது.
தெய்வத்தின் வாகனம் தேர். அந்த தேரினை இழுக்கும் சக்தி நமக்குக் கிடைக்க வேண்டும் என வேண்டுவதும் மனமுருகி வேண்டிக்கொண்டு தேரிழுப்பதும் பக்தியின் வெளிப்பாடு. அப்படி ஒருமித்த மனதுடனும் பக்தியுடனும் இருக்கிற மக்களுக்கு தெய்வமே சூட்சுமமாக வந்து சக்தியை வழங்குகிறது என்பதும் ஐதீகம்.
நிலக்கிழாரின் கர்மவினை அவரைத் தேர்த்திருவிழாவில் பங்கெடுக்க முடியாமல் செய்திருந்தது. ஆனால் ஒரு மஹானை தரிசித்த மாத்திரத்தில் அவரது பாப வினைகள் நீங்கியதுடன் தேர்த்திருவிழாவிலும் கலந்துகொள்ளச் செய்தது. அதனால் கடவுளின் அருள் பலம் சேர வழக்கும் அவருக்கு சாதகமானது.
தேர்த்திருவிழாவில் கலந்து கொள்வதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? கடவுளின் அருள் பலம் கிடைக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். இதுவரை பீடித்திருந்த நோய்கள் தீரும். பாபவினைகள் தீரும். வழக்கு சம்பந்தமான பிரச்சினைகளும் சிக்கல்களும் அகலும்.
மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். நிம்மதி கிடைக்கும். சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
இத்தனை நன்மைகளைத் தரக்கூடிய தேர்த்திருவிழாவில் கலந்து கொள்வதும் உற்ஸவ விழாவிற்கும் பக்தர்களுக்கும் உதவிகள் புரிவதும் தேர் பார்ப்பதும் தேர் வடம் பிடித்து இழுப்பதும் மிகப்பெரிய புண்ணியத்தைத் தந்தருளும்.
சிதம்பரம் தேரோட்டம் நல்லவிதமாக பக்தர்களின் மனம் குளிர நடக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய கோரிக்கையும் பிரார்த்தனையும்!
இவ்வாறு வெங்கடேச தீட்சிதர் தெரிவித்தார்.