

உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா விழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றம் நடைபெற்றது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த விழாவையொட்டி இன்று( டிச.21) காலை கொடியேற்று விழா நடைபெற்றது.
உற்சவ ஆச்சாரியார் சர்வேஸ்வர தீட்சிதர், கொடிமரத்தில் மேளதாளம் முழங்கிட வேத மந்திரங்கள் ஓதிட, கோயில் கொடி மரத்தில் கொடியேற்றினார். அத்துடன் தீபாராதனையும் காட்டப்பட்டது.
முன்னதாக விநாயகர், முருகன், சிவகாம சுந்தரி, நடராஜப் பெருமான், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதற்கிடையே சிதம்பரம் நடராஜர் கோயிலில் தினமும் காலை, மாலை இரு வேளையும் பஞ்ச மூர்த்தி வீதியுலா நடைபெறும். டிசம்பர் 29 ஆம் தேதி திருத் தேர் உற்சவமும் 30 ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.