Published : 20 Dec 2020 13:27 pm

Updated : 20 Dec 2020 13:27 pm

 

Published : 20 Dec 2020 01:27 PM
Last Updated : 20 Dec 2020 01:27 PM

உங்கள் வீட்டில் வலம்புரிச் சங்கு; வாசம் செய்கிறாள்  மகாலக்ஷ்மி! குபேர யோகம் தரும் வலம்புரிச்சங்கு! 

valampuri-sangu

கார்த்திகை மாதம் என்பது விசேஷமான மாதம். இந்த மாதத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவபெருமானுக்கு, சிவலிங்கத் திருமேனிக்கு சங்காபிஷேகம் செய்வது வழக்கம்.

சங்கு குறித்தும் கார்த்திகை சோமவாரம் (திங்கட்கிழமை) சிவபெருமானுக்கு செய்யப்படும் சங்காபிஷேகம் பற்றியெல்லாம் சாஸ்திரங்களும் ஞானநூல்களும் விளக்கியுள்ளன.


ஆன்மிகத்திலும் வழிபாடுகளிலும் பூஜைகளிலும் சங்கு என்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆச்சார்யர்கள் விளக்கியுள்ளனர்.

எந்த வலம்புரிச்சங்கு பூஜையறையிலோ இல்லத்தை அலங்கரிக்கவோ வைக்கப்பட்டிருக்கிறதோ... அந்த வீட்டில் குபேர கடாட்சம் நிறைந்திருக்கும், மகாலக்ஷ்மியின் பேரருள் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

கடலில் உள்ள ஒரு வகை நத்தையின் கழிவு ஒரு ஓடு போல் உருவாகி வருவதே சங்கு எனப்படுகிறது. குபேரனின் அருளையும் குபேர யோகத்தையும் ஒருசேரப் பெற்றுத்தரும் புனிதத்தன்மை சங்குக்கு உண்டு என்கின்றன ஞானநூல்கள்.

வலம்புரிச் சங்கில் கொஞ்சம் தீர்த்தமும் துளசியும் இட்டு பூஜை சங்கு பூஜை செய்து வந்தால், முன்னோர் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும். பிரம்மஹத்தி தோஷம் முதலானவற்றில் இருந்து விடுபடலாம். இதையே ``சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோ ஸ்ரீ! அங்க லக்ஷணம் மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாயுதம் தாகத்'' என்று தர்ம சாஸ்திரம் விளக்குகிறது.

அதேபோல, சுவாமிக்கு சங்கு கொண்டு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கிவிடும். இல்லத்தில் உள்ள திருஷ்டி அனைத்தும் நீங்கிவிடும். இதுவரை வீட்டில் இருந்த கஷ்டங்கள், கடன் தொல்லைகள் யாவும் நீங்கிவிடும். தனம் தானியம் பெருகும். வலம்புரிச்சங்கு உருவில் குபேரன் இருந்து அருளுகிறார் என விளக்குகிறார் திருப்பட்டூர் பிரம்மா கோயிலின் பாஸ்கர குருக்கள்.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சங்கு நாதத்தால் ஆழ்வார்கள் பக்திப் பரவசம் அடைவதை, பேதாண்டப் பெதுவி என்ற வார்த்தையால் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாஸ்து தோஷம் உள்ள வீட்டில், குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் இல்லாத வீடுகளில், தம்பதி இடையே பிணக்குகள் இருக்கிற குடும்பங்களில் துளசியையும் தீர்த்தத்தையும் சங்கில் வைத்து அந்தத் தீர்த்தத்தை, வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளையில் வீடு முழுக்க தெளித்து வருவதும் வாஸ்து பகவானுக்கு உரிய வாஸ்து நாளில் தெளித்து வருவதும் தோஷங்கள் அனைத்தையும் நீக்கியருளும். துன்பங்கள் அனைத்தும் பறந்தோடும் என விவரிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளி தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும். சங்கில்... வலம்புரிச்சங்கில், மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அங்காரக வழிபாடு மிக மிக வலிமையானது. சக்தி வாய்ந்தது. செவ்வாய் தோஷம் போக்கக்கூடியது. செவ்வாய்க்கிழமைகளில், முருகப்பெருமானின் விக்கிரகத்துக்கு அங்காரகனுக்கு வலம்புரிச்சங்கு கொண்டு பாலபிஷேகம் செய்து வந்தால், செவ்வாய் தோஷம் நீங்கும். விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம்.
செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி திருமணம் நடந்து விடும்.

சங்கு கொண்டு இறைத் திருமேனிக்கு அபிஷேகிப்பது மகா உன்னதமான பலன்களை வழங்கும். அதேவேளையில், சங்குக்கு அபிஷேகம் செய்வதும் பூக்களிட்டு வணங்குவதும் எண்ணற்ற பலன்களை வழங்கும். கடன் சுமையால் தத்தளித்துக் கலங்குபவர்கள், பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்குமத்தால் அர்ச்சித்து பூஜை செய்யலாம். பாலாபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்துகொள்ளலாம். இதனால் கடன் தொல்லைகளும் பிரச்சினைகளும் முற்றிலும் விலகும். பொருட்சேர்க்கை நிகழும். சகல ஐஸ்வரியங்கலும் இல்லத்தில் குடிகொள்ளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

வலம்புரிச்சங்கு மட்டுமின்றி வலம்புரிசங்குக் கோலமும் கூட விசேஷம்தான். மகத்துவம் நிறைந்ததுதான். வாசலில் பதினாறு வலம்புரிச்சங்குக் கோலமிட்டு வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால், குழந்தைகளின் எதிர்காலம் வளமுள்ளதாகும்.

வலம்புரிச்சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள் ஏவல்கள், தீயவினைகள் நெருங்காது. துர்தேவதைகள் விலகி ஓடுவார்கள்.

பொதுவாக ஒரு தெய்வத்துக்கு அபிஷேகம் செய்தால் கிடைக்கும் புண்ணிய நற்பலன்களை விட சங்கு கொண்டு அபிஷேகம் செய்து பூஜித்து வந்தால், பத்து மடங்கு அபிஷேகப் பலன்கள் கிடைக்கப் பெறும் என விளக்குகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

இல்லத்துப் பூஜையறையில், சிறிய தட்டில் அரிசியிட்டு, அதில் சங்கு வைத்து, அந்த சங்கிற்கு பூ அலங்கரித்து சந்தன குங்குமமிட்டு பூஜித்து வந்தால், இல்லத்தில் தானியப் பஞ்சமே இருக்காது. உணவுப் பற்றாக்குறையே இருக்காது. மேலும் தம்பதி இடையே ஒற்றுமை மேலோங்கும் என்பது ஐதீகம்!

தவறவிடாதீர்!


உங்கள் வீட்டில் வலம்புரிச் சங்கு; வாசம் செய்கிறாள்  மகாலக்ஷ்மி! குபேர யோகம் தரும் வலம்புரிச்சங்கு!சங்குவலம்புரிச்சங்குவலம்புரிச்சங்கு பூஜைசங்கு பூஜைசங்காபிஷேகம்சங்கு துளசிசங்கு தீர்த்தம்குபேரயோகம்மகாலக்ஷ்மிவலம்புரிச்சங்கில் மகாலக்ஷ்மிவலம்புரிச்சங்கில் குபேரன்Valampuri changuSanghuMahalakshmiKuberanKubera yogam

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x