Published : 20 Dec 2020 11:51 AM
Last Updated : 20 Dec 2020 11:51 AM

ஞாயிறு சஷ்டி... மனமுருகி வேண்டுவோம் முருகனை! 

முருகப் பெருமானை சஷ்டியில் வணங்கி வழிபடுவோம். சங்கடம் தீர்க்கும் சஷ்டியில் கந்தனை வழிபடுவோம். எல்லா வரமும் தந்தருள்வான் வடிவேலன். இன்று 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சஷ்டி.

ஆறுமுகப் பெருமானை வழிபடுவதற்கு உகந்தநாட்கள் என பல உள்ளன. மாதந்தோறும் வருகிற கார்த்திகை நட்சத்திர நாள் ரொம்பவே விசேஷம். அதேபோல், கிழமையில், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் முருகப்பெருமானை வழிபடுவதும் வணங்குவதும் சிறப்புக்குரியது.


இதேபோல, மாதந்தோறும் வருகிற சஷ்டி திதி என்பது முருகனுக்கு உரிய மகோன்னதமான நன்னாள். இந்தநாளில், கிருத்திகை விரதம் மேற்கொள்வது போலவே, சஷ்டிக்கும் விரதமிருப்பார்கள் பக்தர்கள்.


சஷ்டியில் விரதமிருந்தால், சங்கடங்கள் அனைத்தும் தீரும் என்பது ஐதீகம். விரதம் இருக்க இயலாதவர்கள், சஷ்டி நாளில், முருகப்பெருமானை விளக்கேற்றி வழிபடலாம். கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யலாம். முருகனுக்கு செந்நிற மலர்கள் உகந்தவை. எனவே, அரளி முதலான பூக்களால் அலங்கரிக்கலாம்.


வழக்கில் தடையேதும் இருந்தால், சிக்கல்கள் இருந்தால், குடும்பத்தில் கவலைகளோ கஷ்டங்களோ பிணக்குகளோ வருத்தங்களோ இருந்தால், சிங்காரவேலனை மனதார நினைத்து பிரார்த்தித்தால் போதும்... தடைகள் அனைத்தும் தகர்ந்துவிடும். முருகப்பெருமானுக்கு, எலுமிச்சை சாதம், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள். நான்குபேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள். வீட்டில் நீண்டகாலமாக தடைப்பட்டிருந்த சுபகாரியங்களை நடத்தித்தருவார் வெற்றிவேலன். கடன் பிரச்சினையைத் தீர்த்துவைப்பார் கந்தவேலன்.


சஷ்டியில், காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். அப்பனுக்கே பாடம் சொன்ன ஞானகுரு. எனவே ஞாயிற்றுகிழமையில், ஞானகுருவுக்கு உகந்த சஷ்டி அமைவது இன்னும் சிறப்புக்கு உரியது. இந்தநாளில், மாலையில் வீட்டில் உள்ள மாணவ மாணவிகளை, அதாவது மகனையோ மகளையோ கொண்டு, விளக்கேற்றச் சொல்லுங்கள். முருகப்பெருமானை வழிபடச் சொல்லுங்கள். கல்வியிலும் கலைகளிலும் சிறந்துவிளங்குவார்கள் குழந்தைகள்.

ஞாயிறு சஷ்டியில், முருகப்பெருமானை நினைத்து வேண்டிக் கொண்டு, மஞ்சள் துணியில் பதினோரு ரூபாய் முடிந்து வைத்து மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். வீடு மனை யோகமெல்லாம் தந்தருள்வான் வெற்றிவேலவன்! .

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x