

குறிஞ்சி மலர்வதும் குடந்தை மகாமகமும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்பவை. வரும் 2016 பிப்ரவரி 22 (மாசி 10, பவுர்ணமி; மாசி மகம்) அன்று, குரு பகவான் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கும்போது, அந்தப் புண்ணியத் தீர்த்தத்தில் நீராடல் நடைபெறும். இன்னும் நாலரை மாதங்களே உள்ள நிலையில், அந்த மாபெரும் விழாவிற்காக குடந்தை நகரம் வெகுவேகமாக தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறது.
கோவில் நகரம் என்று போற்றப்படும் குடந்தையிலுள்ள முக்கியக் கோவில்கள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு, அடுத்துடுத்து கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது. விழாவின் மையமான மகாமகம் குளமும் செப்பணிடப்பட்டுள்ளது.
ஐம்பது லட்சம் பக்தர்கள்
கோவில்களும் குளமும் பொலிவு பெற்றால் போதுமா? நகரில் வந்து குவியவுள்ள 50 லட்சம் பக்தர்களுக்கான வசதிகளும் செய்யப்பட வேண்டுமல்லவா? கடந்த மகாமகத்துக்கு (மார்ச் 6, 2004) 35 லட்சம் பக்தர்கள் குழுமியதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே இம்முறை இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட அரைக்கோடியைத் தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!
மகாமகக் குளம் 20 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ளது. அதன் படித்துறையில் 16 மண்டபங்கள் அமைந்துள்ளன. கிழக்கில் ‘நவகன்னிகை’ கோவில் உள்ளது. தஞ்சையை ஆண்ட அச்சுதப்ப, ரகுநாத நாயக் மன்னர்களிடம் பணியாற்றிய மந்திரி கோவிந்த தீட்சிதரால் கல் படித்துறையும் இந்த 16 மண்டபங்களும் சீரமைக்கப்பட்டன. இந்த 16 மண்டபங்களில் 16 திருநாமம் கொண்ட சிவலிங்கங்கள் எழுந்தருளியுள்ளன.
இருபது தீர்த்தங்கள்
குளத்தினுள் 20 தீர்த்தக்கிணறுகள் அமைந்துள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாவத்தைப் போக்கி ஒவ்வொரு பலனைத் தருபவை. பாரதத்தில் தவழும் ஒன்பது முக்கிய நதிகள், எட்டு திசைகளுக்கான அஷ்ட (எட்டு) தீர்த்தங்கள், பிரம்ம தீர்த்தம் என பதினெட்டு ஆகும். பத்தொன்பதாவதாக, குளத்தின் மையத்தில் அமைந்துள்ள தேவ / நாக தீர்த்தம் நமது பாவங்கள் அனைத்தையும் போக்கி தேவேந்திரப் பதவியைத் தரும், கால சர்ப்ப தோஷத்தையும் போக்கும் என்று கருதப்படுகிறது.
இருபதாவது தீர்த்தமான 66 கோடி தீர்த்தத்தில், மகாமகப் புண்ணிய தினத்தன்று உலகில் உள்ள இதர 66 கோடி தீர்த்தங்களும் வந்து கலப்பதாக நம்பிக்கை. காலம் முழுவதும் மனிதர்கள் அவற்றில் மூழ்கி எழுந்து கரைத்த பாவம் மொத்தத்தையும், மகாமகக் குளத்தில் அன்றைய தினம் அவை ஐக்கியம் ஆகி, இந்த ஒட்டுமொத்தப் பாவத்தையும் கரைப்பதாக ஐதீகம்.
அன்றைய தினம், மகாமகக் குளத்தில் மூழ்கி எழுந்த பின், அருகிலுள்ள பொற்றாமரைக் குளத்திலும், பின்னர் நகரைத் தழுவி ஓடும் காவிரியிலும் மூழ்கி எழுந்தால்தான் முழுப் பலனும் கிட்டும் என்பது நம்பிக்கை.