Published : 15 Dec 2020 09:29 PM
Last Updated : 15 Dec 2020 09:29 PM

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிக்கு சீர்வரிசை: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் வழங்கினார் 

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வர் திருக்கோயிலில் உள்ள அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலிருந்து மார்கழி மாத சீர்வரிசையை இன்று இரவு எடுத்து வந்த இணை ஆணையர் பொன்.ஜெயராமன் மற்றும் ஊழியர்கள்.

திருச்சி 

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வர் திருக்கோயிலில் உள்ள அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலிருந்து மார்கழி மாத சீர்வரிசை இன்று இரவு வழங்கப்பட்டது. கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நின்றுபோன இந்த வழக்கத்துக்குக் கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்குச் சமயபுரம் மாரியம்மன் தங்கை என்ற முறையில் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து சீர்வரிசைகள் சமயபுரம் மாரியம்மனுக்குச் சமர்ப்பிக்கப்படுகின்றன.

அதேபோன்று அகிலாண்டேஸ்வரியும் ரங்கநாதரின் மற்றொரு தங்கையாகக் கருதப்பட்டு, அக்கோயில் மார்கழி மாதம் முதல் நாள் நடைபெறும் திருப்பாவாடைக்குச் சீர்வரிசைப் பொருட்கள் வழங்கியதற்கான சான்றுகள் சில ஆண்டுகளுக்கு முன் கிடைக்கப்பெற்றன. அதன் அடிப்படையில் ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முன் நின்றுபோன இந்த வழக்கத்தைப் புதுப்பித்து நடைமுறைக்குக் கொண்டுவர இரு கோயில் நிர்வாகங்களும் முடிவு செய்தன.

இதைத் தொடர்ந்து நாளை மார்கழி மாதப் பிறப்பு என்பதால் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலிருந்து புதிய வஸ்திரங்கள், அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள், மாலைகள், தாம்பூலம், மங்கலப் பொருட்கள் உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்கள் ஆகியவை மங்கள வாத்தியங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் ஊர்வலமாக ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் ஊழியர்கள் கொண்டு வந்தனர்.

சீர்வரிசைப் பொருட்களை அகிலாண்டேஸ்வரி அம்மன் சன்னதி கொடிமரம் முன்வைத்து, திருவானைக்காவல் கோயில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் கோயில் அர்ச்சகர்கள் பெற்றுக் கொண்டனர்.

இதில் உள்ள உணவுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் நிவேதனத்துடன் நாளை (மார்கழி முதல் நாள்) காலை பூஜைகள் நடைபெறவுள்ளன. அப்போது சுவாமி மற்றும் அம்மனுக்கு ரங்கநாதர் கோயில் வஸ்திரங்கள் சாற்றப்பட்டு 16 வகை உபசாரங்களுடன் மகா தீபாராதனை நடைபெறும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x