திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி; சிரமத்தை தவிர்க்க பக்தர்களுக்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் சனிபகவான் சன்னதி
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் சனிபகவான் சன்னதி
Updated on
1 min read

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி நாளில் சிரமத்தை தவிர்க்க பக்தர்களுக்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில், சனி பகவானுக்கு தனி சன்னதியுடன் கூடிய தர்பாரண்யேஸ்வரர் கோயிலில், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி வரும் டிச. 27-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. அதிகாலை 5.22 மணிக்கு சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். சனிப்பெயர்ச்சி விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரக்கூடிய ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியரும், கோயில் தனி அதிகாரியுமான அர்ஜூன் சர்மா இன்று (டிச. 15) வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பது:

"டிச. 27-ம் தேதி அதிகாலை 5.22 மணிக்கு, சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும் சனிப்பெயர்ச்சி நிகழ்வு, திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிபகவான் சன்னதியில் நடைபெறவுள்ளது.

சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசித்தப் பிறகு, பக்தர்கள் சனிப்பெயர்ச்சி நாளில் மட்டுமல்லாமல், ஒரு மண்டல காலத்துக்கு அதாவது 48 நாட்களுக்கு, தர்பாரண்யேஸ்வரர் கோயிலில், நவக்கிரஹ அதிபதி சனீஸ்வர பகவானை வழிபடலாம். இந்து சமயத்தில் மண்டல பூஜை பற்றி பல குறிப்புகள் உள்ளன. இது பழங்காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வருகிறது.

டிச.27, 28 ஆகிய தேதிகளில் கோயில் வளாகத்துக்குள் தனிமனித இடைவெளி பின்பற்றப்படுவதை அமல்படுத்தும் போது, பக்தர்கள் சிலர் சிரமத்துக்கு ஆளாக நேரிடும். அதனை தவிர்க்க பக்தர்கள் சனிப்பெயர்ச்சி நாளில் மட்டுமல்லாமல், ஒரு மண்டல காலத்துக்கு இக்கோயிலுக்கு வந்து சனீஸ்வர பகவானுக்கு வழிபாடு மற்றும் பூஜை செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வார இறுதி நாட்களில் (சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்) வரக்கூடிய பக்தர்கள் தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தான இணையதளத்தில் முன் பதிவு செய்திருப்பது கட்டாயம். இலவச தரிசனம், சிறப்பு தரிசனம் உட்பட அனைத்து பக்தர்களும் தனித்தனியாக https://thirunallarutemple.org/sanipayarchi என்ற தேவஸ்தான இணையதளத்தில் முன் பதிவு செய்ய வேண்டும்.

இந்த சனிப் பெயர்ச்சி விழாவின்போது வருகை தரும் பக்தர்கள், பொதுமக்கள் பாதுகாப்பாக மற்றும் மகிழ்ச்சியாக தரிசனம் செய்ய, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தும் அனைத்து ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் நிலையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி ஒத்துழைப்பு தரவேண்டும்" என அந்த அறிவிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in