

பிரதோஷமும் அடுத்தநாள் சிவராத்திரியும் அதையடுத்து திங்கட்கிழமை அமாவாசையும் அமைந்துள்ளது. இந்த மூன்று நாட்களும் சிவ வழிபாடு செய்வதும் சிவபுராணம் பாராயணம் செய்வதும் சக்தியையும் முக்தியையும் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப்பெருமக்கள்.
மாதந்தோறும் அமாவாசைக்கு முந்தைய மூன்றாவது நாள் பிரதோஷம். பெளர்ணமிக்கு முந்தைய மூன்றாம் நாள் பிரதோஷம். சிவ வழிபாடுகளில் மிக மிக முக்கியமானது பிரதோஷ பூஜை. பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை.
திங்கட்கிழமை வரும் பிரதோஷம் சோம வாரப் பிரதோஷம் என்பது மிக முக்கியமானது என்பது போல, சனிக்கிழமை வரும் பிரதோஷமும் அற்புதமானது. சாந்நித்தியமானது. வலிமை மிக்கது. வலிமையை தரக்கூடியது. அதனால்தான் சனி மகா பிரதோஷம் என்கிறார்கள்.
நாளைய தினம் சனிக்கிழமை 12ம் தேதி சனி மகா பிரதோஷம். சிவ தரிசனம் செய்வது சிறப்பு. விரதம் இருப்பது விசேஷம். சிவனாரை தரிசனம் செய்வது மகத்தான பலன்களைத் தரும் என்பது ஐதீகம்.
அடுத்து 13ம் தேதி மாத சிவராத்திரி. சிவபெருமானுக்கு உரிய நாள். சிவராத்திரி விரதம் இருப்பதும் ருத்ரம் பாராயணம் செய்வதும் சிவாலயம் சென்று நமசிவாயம் சொல்லி, சிவலிங்கத் திருமேனியை தரிசிப்பதும், சகல துன்பங்களையும் போக்கக்கூடியது.
13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மாத சிவராத்திரி. இந்த நாளில் சிவனாரை வழிபடுங்கள்.
இதன் பின்னர், 14ம் தேதி திங்கட்கிழமை, அமாவாசை. சோமவார அமாவாசை. அமாவாசை திதி மிக மிக உன்னதமான நாள். உயிர்ப்பான நாள். முன்னோரை வழிபடுவதற்கான நாள். சிவ வழிபாட்டுக்கு உகந்த நாள்.
திங்கட்கிழமை அன்று அமாவாசை நன்னாளில், மறக்காமல் முன்னோர் ஆராதனை செய்யுங்கள். பித்ருக் கடன் செலுத்துங்கள். சிவ வழிபாடு செய்யுங்கள். காகத்துக்கு உணவிடுங்கள். நான்குபேருக்கேனும் உணவிடுங்கள்.
இந்த மூன்று நாட்களும் பூஜைகள், வழிபாடுகளைச் செய்யுங்கள். நம் வாழ்வை மட்டுமின்றி, நம் சந்ததிகளையும் உன்னதமாக வாழச் செய்யும் அற்புத வழிபாடுகளை மறக்காமல் செய்யுங்கள்.