Last Updated : 11 Dec, 2020 08:39 PM

 

Published : 11 Dec 2020 08:39 PM
Last Updated : 11 Dec 2020 08:39 PM

சனி பிரதோஷம்... சனி மகா பிரதோஷம்... கார்த்திகை பிரதோஷம்! 

சனி பிரதோஷம், சர்வ பாவ விமோசனம் என்பார்கள். நம் பாவங்களையெல்லாம் போக்கி அருளும் சனி பிரதோஷ நாளில், சிவாலயம் செல்லுங்கள். சிவ தரிசனம் செய்யுங்கள். நந்திதேவருக்கு நடைபெறும் அபிஷேகத்தை கண்ணார தரிசியுங்கள். நம் பாவமெல்லாம் பறந்தோடும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். நாளைய தினம் 12ம் தேதி சனிக்கிழமை, பிரதோஷம். கார்த்திகை மாதத்தின் பிரதோஷம் இன்னும் விசேஷம்!

பிரதோஷம் என்பதும் பிரதோஷத்தின் போது சிவ வழிபாடு செய்வதும் மகத்தான பலன்களைத் தந்தருளும். ஒவ்வொரு கிழமையில் வருகிற பிரதோஷத்துக்கு பலன்கள் இருக்கின்றன. திங்கட்கிழமை வருகிற பிரதோஷம் ரொம்பவே மகத்துவம் வாய்ந்தது. திங்கட்கிழமையை சோம வாரம் என்பார்கள். சோமன் என்றால் சந்திரன். சோம என்றால் திங்கள். சந்திரனுக்கு இன்னொரு பெயர் திங்கள். சந்திரனைப் பிறையெனச் சூடிக்கொண்டிருக்கும் ஈசனை, திங்கட்கிழமையன்று வரும் பிரதோஷத்தில் பூஜை செய்து வணங்கினால், மோட்ச கதி அடையலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். முக்தி நிச்சயம் என்கிறார்கள்.

குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷமும் முக்கியத்துவம் வாய்ந்தது. சிவபெருமான், தட்சிணமூர்த்தி அம்சமாக கல்லால மரத்தடியில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு போதித்தார் என்கிறது புராணம்.
எனவே, குருவாரம் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷத்தில், சிவ பூஜை செய்வதும் விரதமிருந்து, ருத்ர பாராயணம் செய்வதும் ஞானத்தையும் யோகத்தையும் தந்தருளும் என்கிறார்கள் பக்தர்கள்.

மூன்றாவதாக, அதேசமயம் ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்லப்படுவது சனிப் பிரதோஷம். சனி பிரதோஷம் சர்வ பாப விமோசனம் என்பார்கள். சனிக்கிழமை வரக்கூடிய பிரதோஷ நாளில், சிவ தரிசனம் செய்வது அனைத்துப் பாவங்களையும் போக்கக்கூடியது. சனிக்கிழமை அன்று வருகிற பிரதோஷத்தை மகா பிரதோஷம் என்று சிலாகிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

இந்தநாளில், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் விசேஷமான பூஜைகள் நடைபெறும். அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அப்போது 16 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பால், தயிர், சந்தனம், தேன், திரவியப்பொடி முதலான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள்.
பிரதோஷ அபிஷேகத்துக்கு, பொருட்கள் வழங்கினால், 108 பிரதோஷம் தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நாளைய தினம் 12ம் தேதி, சனிக்கிழமை, பிரதோஷம். சனி பிரதோஷம் சகல பாவங்களையும் நிவர்த்தி செய்யக் கூடிய பிரதோஷம் என்பது நாம் அறிந்ததே. அற்புதமான இந்தநாளில், மாலை வேளையில், பிரதோஷ நேரமான மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தில், வீட்டில் விளக்கேற்றி சிவ வழிபாடு செய்யுங்கள். நமசிவாயம் சொல்லி சிவனாரை வணங்குங்கள். ருத்ரம் ஜபித்து, சிவனாருக்கு வில்வம் வழங்குங்கள். நந்திதேவருக்கு வில்வமும் அருகம்புல்லும் வழங்குங்கள்.
சனிப் பிரதோஷம், நம் வாழ்க்கையில் ஏற்றத்தையும் மாற்றத்தையும் தரும்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x