

ஞானஸ்கந்தனை, சுவாமிமலை நாதனை, சுவாமிநாத பெருமானை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். வாழ்வில் நமக்கு உண்டான எதிர்ப்புகளையெல்லாம் போக்கி அருளுவான் சுவாமிநாத சுவாமி.
முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் திருத்தலங்கள் ஏராளம். ஆறுபடை வீடுகளைத் தாண்டியும் முருகப்பெருமான் அருளாட்சி செய்யும் திருத்தலங்கள் ஏராளம். சிவாலயங்களில் உள்ள முருகப்பெருமான் சந்நிதியே, சாந்நித்தியம் மிக்கதாகத் திகழ்கிறது என்பதை நாம் தரிசித்துச் சிலிர்த்திருப்போம்.
அழகன் முருகனை எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம். என்றாலும் செவ்வாய்க்கிழமை என்பது முருகக் கடவுளுக்கு உகந்த நாளாகப் போற்றப்படுகிறது. கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை திருத்தலத்து நாயகன் முருகப் பெருமானை எப்போது வேண்டுமானாலும் வணங்கலாம். வழிபடலாம். அருளும் பொருளும் அள்ளித் தரும் அழகன் இவன்!
மலையே இல்லாத சோழ தேசத்தில், சிறியதொரு மலையின் மீது அருளாட்சி செய்கிற கந்தப் பெருமான் திருகோலம் அளவிட முடியாதது. இந்தத் தலத்து நாயகன், சுவாமிநாதன் என்றும், பரமகுரு என்றும், தகப்பன் சுவாமி என்றும் போற்றப்படுகிறார். அதனால்தான் இந்தத் தலமும் சுவாமிமலை என்று கொண்டாடப்படுகிறது.
கருவறையில், சுமார் நான்கரை அடி உயரத்தில் கம்பீரமும் கருணையும் ததும்ப கனிவு முகம் காட்சி நம்மைச் சிலிர்க்க வைக்கிறார் சுவாமிநாத சுவாமி.
வலது திருக்கரத்தில் தண்டாயுதம் வைத்திருக்கிறார். இடுப்பில் ஒய்யாரமாக இடது திருக்கரத்தை வைத்திருக்கிறார். திருமார்பில் ருத்திராட்சத்துடன் அற்புதமாக காட்சி தரும் சுவாமி நாத சுவாமி, ஞானமும் சாந்தமும் கொண்டு காட்சி தருகிறார். இவரை வணங்கினால் ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் பக்தர்கள்.
கிழக்கு நோக்கிய முருகப் பெருமான். இவரை தரிசித்தால் நம் வாழ்வில் விடியல் நிச்சயம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சுவாமிநாத சுவாமி குடிகொண்டிருக்கும் திருத்தலத்தின் இன்னொரு சிறப்பு வாய்ந்ததொரு விசேஷமானது.. தங்கத்தேர். அழகன் முருகனைப் போலவே தங்கத்தேரும் கொள்ளை அழகுடன் திகழ்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வீடு வாங்கும் யோகம் இல்லையே என்று வருந்துபவர்கள், தங்கத்தேர் வடம் பிடித்து இழுத்து வலம் வந்து பிரார்த்தனை செய்தால், கல்யாண வரம் கைகூடும். பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறலாம். வீடு மனை வாங்கும் யோகம் கிடைப்பது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
ஞானஸ்கந்தனை, சுவாமிமலை நாதனை, சுவாமிநாத பெருமானை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். வாழ்வில் நமக்கு உண்டான எதிர்ப்புகளையெல்லாம் போக்கி அருளுவான் சுவாமிநாத சுவாமி.