கார்த்திகை கடைசி வெள்ளி... அம்பாளுக்கு பாயசம்! 

கார்த்திகை கடைசி வெள்ளி... அம்பாளுக்கு பாயசம்! 
Updated on
1 min read

கார்த்திகை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை. இந்த நன்னாளில், அம்பாளை ஆராதிப்போம். அம்பாளுக்கு பாயசம் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்வோம். பாயசத்தைப் போலவே நம் வாழ்க்கையையே இனிக்கச் செய்வாள் தேவி.

அம்பாள் வழிபாடு, நமக்குள் சக்தியைத் தருவது. அம்பாளை சக்தி என்றே போற்றுகிறது புராணம். அந்த சிவத்துக்கே, உலகாளும் ஈசனுக்கே சக்தியெனத் திகழ்பவள் பராசக்தி.

உலகாளும் அகிலாண்ட நாயகிக்கு செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் உகந்த நாட்கள். இந்தநாட்களில் அருகில் உள்ள அம்மன் கோயில்களுக்குச் சென்று வழிபடுவது எண்ணற்ற பலன்களைத் தந்தருளும். அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவதும் அம்மனுக்கு செவ்வரளி மாலை சாற்றி வழிபடுவதும் தோஷங்கள் அனைத்தையும் போக்கி அருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

அதேபோல, சிவாலயங்களில் குடிகொண்டிருக்கும் அம்பாள், நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். கருணையும் கனிவும் குடிகொண்ட சாந்த சொரூபினி. இந்த நாயகியை, அருகில் உள்ள சிவாலயத்தில் அமைந்திருக்கும் அம்பாளை மனமுருக வழிபடுவதும் விசேஷமான பலன்களைத் தந்தருளும்.

வெள்ளிக்கிழமையின் நாயகி அம்பாள். வெள்ளிக்கிழமையில் நாம் வணங்க வேண்டிய அற்புதத் தெய்வம் மகாலக்ஷ்மி. வெள்ளிக்கிழமையில் நாம் வணங்க வேண்டிய மற்றொரு தெய்வம் துர்காதேவி.

இந்த அற்புதமான நன்னாள்... நாளைய தினம் 11ம் தேதி, கார்த்திகை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை. இந்த அருமையான நாளில், அம்பாளை வணங்குவோம். அம்பாள் துதி சொல்லி பாராயணம் செய்வோம். மகாலக்ஷ்மி ஸ்லோகங்கள் சொல்லுவோம்.

கனகதாரா ஸ்தோத்திரம் சொல்வதும் அபிராமி அந்தாதி சொல்வதும் மகோன்னதமான பலன்களைத் தரும். லக்ஷ்மி அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள்.
அம்பாளுக்கு உகந்த செவ்வரளி மலர்களைச் சூட்டுங்கள். அம்பாளுக்கு உச்சி வேளையில், பாயசம் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள். அக்கம்பக்கத்தாருக்கு பிரசாதத்தை விநியோகம் செய்யுங்கள்.

சகல சந்தோஷங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். பக்கத்துணையாக இருந்து இல்லத்திலும் உள்ளத்திலும் ஒளியேற்றி அருளுவார்கள் தேவியர்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in