

எத்தனை தோஷங்கள் இருந்தாலும் கந்தன் இருக்க கவலையே இல்லை. முருகப்பெருமானை வணங்கினால் செவ்வாய் தோஷம் அனைத்தும் நீங்கி விடும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
ஒரு ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் என்பது பூர்வ ஜென்ம பாவ புண்ணியங்களைக் குறிக்கும். அதேபோல் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் என்பதும் நம்முடைய பலத்தையும் நம்முடைய சத் விஷயங்களையும் தடைபண்ணக் கூடியவைதான் என்கிறார்கள்.
ஒருவரின் ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம் என விவரிக்கிறது ஜோதிட சாஸ்திர நூல்.
செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும். அவ்வாறு தோஷ நிவர்த்தி இருந்தால், செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானை தரிசிப்பதாலும் வணங்குவதாலும் பிரார்த்தனை செய்வதாலும் செவ்வாய் தோஷம் நீங்கப் பெறலாம்.
முருகக் கடவுளை செவ்வாய்க்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் வணங்கி வாருங்கள். வீட்டில் விளக்கேற்றி, கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வந்தால் செவ்வாய் தோஷ தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.
அதேபோல், நவக்கிரக தலங்களில் செவ்வாய்க் கிரகத்துக்கான திருத்தலம் என்று போற்றப்படுகிறது வைத்தீஸ்வரன் கோவில். சீர்காழி மற்றும் சிதம்பரத்துக்கு அருகில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் அங்காரகன் சந்நிதியே அமைந்திருக்கிறது.
இந்தத் தலத்துக்கு வந்தாலே, வைத்தீஸ்வர பெருமானை வேண்டிக்கொண்டாலே, தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம். அதேபோல், அங்காரக வழிபாடு செய்து வேண்டிக் கொண்டாலும் செவ்வாய் தோஷம் விலகும். தோஷ தாக்கத்தில் இருந்து விடுபடலாம். திருமண யோகம் தேடி வரும். நல்ல வாழ்க்கைத் துணை அமையும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், செவ்வாய்க்கிழமைகளில் விரதம் மேற்கொள்ளுங்கள். முருகப்பெருமானை நினைத்து விளக்கேற்றுங்கள். சர்க்கரைப் பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள்.
முடியும் போதெல்லாம் முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் ஆலயத்துக்குச் சென்று வழிபடுவதும் முக்கியமாக முருகக் கடவுளின் ஆறுபடை வீடுகளுக்குச் சென்று தரிசித்து வருவதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும்.
கந்தனை வணங்கினால் செவ்வாய் தோஷக் கவலைகள் இல்லை. சகல தோஷங்களில் இருந்தும் விடுபடலாம். மாங்கல்ய வரம் கிடைக்கப் பெறுவீர்கள். செவ்வாய் பலம் பெற்று, சீரும் சிறப்புமாக நல்ல வாழ்க்கைத்துணையுடன் இனிதே வாழலாம். வீடு மனை வாங்கும் யோகமும் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.