

இந்த உலகில் எண்ணற்ற மகான்கள் அவதரித்திருக்கிறார்கள். அந்த மகான்கள், மக்களுக்கு நெருக்கமாகவும் மக்களின் மனங்களில் குடியிருப்பவர்களாகவும் திகழ்ந்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு தருணத்திலும் ஏதோவொரு சக்தி வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். அந்த சக்தியானது உலகம் முழுவதும் வியாபித்துக் கொண்டிருக்கும்.
இங்கே உள்ள ஆலயங்களும் அப்படித்தான். அங்கே குடிகொண்டிருக்கும் தெய்வங்களும் ஒரு சூழலில், ஒரு நிலையில், ஒருகட்டத்தில் தன் சாந்நித்தியத்தை நமக்கு உணர்த்தும். அப்படியான தெய்வங்களை தரிசிப்பதும் அந்த ஆலயங்களுக்குச் செல்வதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். மகா புண்ணியத்தைக் கொடுக்கும் என்று விவரிக்கிறார்கள்.
கலியுகத்துக்கு கண்கண்ட தெய்வங்களும் மகான்களும் ஏராளம். நடந்துகொண்டிருக்கிற இந்தக் கலியுகத்தில், நமக்கு கண்கண்ட தெய்வமாகவும் மகானாகவும் திகழ்பவர் பகவான் சாயிபாபா.
‘நான் இதைச் செய்கிறேன், அதைக் கொடு’ என்றெல்லாம் தெய்வத்திடமும் மகான்களிடம் நடக்காது. செய்துக்கொண்டே இருப்பதுதான் நம் வேலை. பக்தி செலுத்திக் கொண்டே இருப்பதுதான் நம்முடைய பணி. அந்த வேலையை, பக்தியை நாம் கடவுளிடமும் மகான்களிடமும் செலுத்திக் கொண்டே இருப்பதற்குதான் இந்தப் பிறப்பே நிகழ்ந்திருக்கிறது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
ஒவ்வொரு தெய்வத்தையும் எப்படி ஆராதித்து வழிபடுகிறோமோ அப்படி, பகவான் சாயிபாபாவையும் மனதார வழிபடுவதே அவரருளைப் பெறுவதற்கான முதல் வழி. நிதானமும் பொறுமையும் மிக மிக அவசியம் என்பதை தொடர்ந்து தன் பக்தர்களுக்கு வலியுறுத்தி வந்தார் சாயிபாபா. உண்மையான பக்தியிலும் அன்பிலும்தான் நான் உங்களை நெருங்குகிறேன் என அருளினார்.
‘எனக்கு கூடைகூடையாக பூக்கள் தரவேண்டாம். லிட்டர் லிட்டராக பாலபிஷேகம் செய்யவேண்டாம். எனக்கு நீங்கள் ஒரேயொரு பூவைக் கொடுத்தாலே போதும். மீதமுள்ள பூக்களுக்கு பதிலாக, உங்களைச் சுற்றி பசியுடன் இருப்பவர்களுக்கு ஏதேனும் உணவு வழங்குங்கள். அந்த உணவின் ருசியை நானறிந்து உங்களுக்கு அருளுவேன்’ என்கிறார் பகவான் சாயிபாபா.
ஷீர்டி பாபாவை நினைத்து, முடியும்போதெல்லாம் எவருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள். அப்படி வழங்குகிற போது, நம்முடைய செயலை பாபா பார்த்துக்கொண்டே இருக்கிறார். பாபாவின் அருளை நாம் அடைந்தவர்களாகிறோம் என்கிறார்கள் பக்தர்கள்.
சாயிராம் சொல்லி யாருக்கேனும் உணவு வழங்குங்கள். சாயிநாமமே சாயிநாதம். அன்னதானமே சாயிபாபாவின் இருப்பிடம்!