

தோஷங்கள் இல்லாமல் இருந்தால்தான் சந்தோஷம் என்பார்கள். தோஷங்களில் இருந்து விடுபடுவதே பிரார்த்தனையின் வலிமை. உண்மையான பிரார்த்தனையுடன், வேண்டுதலுடன், உரிய முறையில் உரிய தெய்வங்களை வழிபட்டு வந்தாலே தோஷங்கள் நிவர்த்தியாகிவிடும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
ஒருவரின் ஜாதகத்தில் தோஷங்கள் இருந்தால், எதிலும் தடை, எப்போதும் வருத்தம் என்றிருக்கும். வம்சத்தை விருத்தி அடையச் செய்யும் திருமணம் முதலான விஷயங்கள், அதனால்தான் தடைப்படுகின்றன.
களத்திர தோஷம் என்று இதனைச் சொல்லுவார்கள். களத்திர தோஷம் நீங்கினால்தான் கல்யாண யோகம் கைகூடிவரும் என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். களத்திர தோஷத்தை நீக்குவதற்கு, குரு பகவானின் பலமும் அருளும் வேண்டும் என்பது ஐதீகம்.
பூர்வ ஜென்ம வினைகளே களத்திர தோஷத்துக்குக் காரணம் என்பார்கள். அவ்வாறு ஏற்படும், கிரக தோஷங்களை நிவர்த்தி செய்வதற்கு எளிய பரிகாரங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. நம்பிக்கையுடனும் ஆத்மார்த்தமாவும் பூஜைகளை மேற்கொண்டால், தோஷங்களில் இருந்து நீங்கலாம். சந்தோஷத்தைப் பெறலாம். திருமண யோகம் கைகூடி வரும்.
திருச்சி அருகில் உள்ள திருப்பைஞ்ஞீலி எனும் திருத்தலம் சிறந்த பரிகாரத் திருத்தலம். இங்கே உள்ள இறைவனின் திருநாமம் ஞீலிவன நாதர். கோபுரமின்றி காட்சி தரும் தலம். பிரமாண்டமான திருத்தலம்.
ஞீலிவனம் என்றால் வாழை வனம் என்று அர்த்தம். வாழைத் தோப்பு என்று பொருள். வாழைத்தோப்பும் வனமுமாக இருந்த இடத்தில் சிவனார் கோயில் கொண்டார். அதனால்தான் சிவபெருமானுக்கு ஞீலிவனநாதர் எனும் திருநாமம் அமைந்தது.
அதுமட்டுமா? இங்கே வாழைக்குத் தாலி கட்டும் சடங்கு பிரசித்தம். இந்தப் பரிகாரத்தைச் செய்து இறைவனை பிரார்த்தனை செய்தால், களத்திர தோஷம் அனைத்தும் நீங்கும். கல்யாண யோகம் கைகூடி வரும் என்கிறார் சங்கர குருக்கள். கல் வாழை என்பார்கள். கல்வாழை மகத்துவம் அளப்பரியது என்று சிலிர்க்கிறார்கள்.
புராண - புராதனப் பெருமைகள் கொண்ட திருப்பைஞ்ஞீலி எனும் திருத்தலத்துக்கு வாருங்கள். ஞீலிவனநாதரின் பேரருளைப் பெறுங்கள். களத்திர தோஷத்தில் இருந்து விடுவித்து அருளும் அற்புதத் தலம் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பைஞ்ஞீலி திருத்தலத்துக்கு பேருந்துகள் இருக்கின்றன. திருச்சியில் இருந்து மண்ணச்சநல்லூர் வழியாக திருப்பைஞ்ஞீலி திருத்தலத்தை அடையலாம். திருச்சியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பைஞ்ஞீலி திருத்தலம்.