Last Updated : 07 Dec, 2020 02:02 PM

 

Published : 07 Dec 2020 02:02 PM
Last Updated : 07 Dec 2020 02:02 PM

கலியுகத்தில் பைரவர்; பைரவாஷ்டமி நாளில் பைரவ தரிசனம்! 

கலியுகத்துக்கு காலபைரவர் என்பார்கள். இந்தக் கலியுகத்தில், பைரவர் வழிபாடு செய்யச் செய்ய மிகுந்த பலன்களைத் தந்தருள்வார் பைரவர் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

பைரவர் நீலநிற மேனியராகத் திகழ்கிறார். சிலம்பொலிக்கிற திருவடிகளை உடையவராகத் திகழ்கிறார். பாம்புகள் பொருந்திய திருஅரையும் (அரைஞாண்), தலை மாலைகள் புரளும் திருமார்பும், சூலம், மழு, பாசம், உடுக்கை முதலானவற்றை தன்னுடைய திருக்கரங்களில் ஏந்தியபடியும் காட்சி தருகிறார்.

சிவபெருமானிடம் இருந்து வெளிப்பட்ட பைரவர், சிவபெருமானைப் போன்றே மூன்று கண்களைக் கொண்டவர் என்கிறது புராணம். நம்முடைய பயத்தையெல்லாம் போக்குபவர் என்பதால் பைரவர் என்றே திருநாமம் அமைந்ததாகச் சொல்கின்றன ஞானநூல்கள்.

இரண்டு கோரைப்பற்களை உடையவராகவும் செஞ்சடை உடையவராகவும் கோபமும் அதேசமயம் புன்னகையும் கொண்டவராகக் காட்சி தருகிறார் காலபைரவர்.
உக்கிர வடிவம் கொண்ட தெய்வங்களில் பைரவரும் ஒருவர். அதேசமயம் தன்னை வேண்டுவோர்க்கு கனிவும் கருணையுமாக அருளுபவர். எதிரிகளுக்கும் தீய சக்திகளுக்கும் உக்கிரத்துடன் இருந்து துரத்தியடிப்பவர். பக்தர்களுக்கு அன்பையும் அருளையும் பொழிபவர் பைரவர்.

உடற்பற்றோ பாரபட்சமோ இல்லாதவர் என்பது திகம்பரராக காட்சி தருகிறார் பைரவர். அதேபோல், பைரவர் காவல் தெய்வமாகத் திகழ்கிறார் என்கிறது புராணம். சிவாலயங்களின் காவலனாகவும் நல்லனவற்றுக்கெல்லாம் காவலாகவும் காத்தருளும் தெய்வம், காக்கும் கடவுள் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள். அதனால்தான் காவலின் குறியீடான நாயை வாகனமாகக் கொண்டிருக்கிறார் என விவரிக்கிறது புராணம். அஷ்ட பைரவ வடிவங்களில் இந்த நாய் வாகனம் வேறு வாகனங்களாகவ்ம் இருப்பதைத் தரிசிக்கலாம்.

ஸ்ரீபைரவர் - பைரவரின் சக்தி - வாகனம்

ஸ்ரீஅசிதாங்க பைரவர் - பிராம்மி - அன்னம்

ஸ்ரீருரு பைரவர் - மகேஸ்வரி - ரிஷபம்

ஸ்ரீசண்ட பைரவர் - கௌமாரி - மயில்

ஸ்ரீகுரோதன பைரவர் - வைஷ்ணவி - கருடன்

ஸ்ரீஉன்மத்த பைரவர் - வராகி - குதிரை

ஸ்ரீகபால பைரவர் - இந்திராணி - யானை

ஸ்ரீபீஷண பைரவர் - சாமுண்டி - சிம்மம்

ஸ்ரீசம்ஹார பைரவர் - சண்டிகை (இலக்குமியுடன் சேர்த்து சப்த மாதர்கள்)

இப்படியாக, விதவிதமான வாகனங்களில் காணப்படும் பைரவர் ஒரு சில ஆலயங்களில் எவ்வித வாகனமும் இன்றி தனியராய் காட்சியளிக்கிறார். குறிப்பாக திருவான்மியூர், பேரூர், வேதாரண்யம், திருவிற்கோலம் ஆகிய தலங்களில் உள்ள பைரவரை தரிசிக்கலாம். அதாவது நாய் வாகனம் இல்லாத பைரவரைத் தரிசிக்கலாம்.
எண்ணிலாக் கரங்களும், எண்ணிலாத் தலைகளும், எண்ணிலா கால்களும் கொண்ட காட்சிக்கு மிக மிக அரிதான வஜ்ர பைரவரின் திருவடிவம் ஒன்று புதுச்சேரி பிரஞ்சிந்திய பண்பாட்டுக் கழகத்தில் காணப்படுகிறது.

மூன்று கால்களைக் கொண்ட அபூர்வ பைரவர் சிருங்கேரியில் தரிசனம் தருகிறார். சூரக்குடியில் பைரவர் கதாயுதத்துடனும், திருவாரூரில் பைரவர் கையில் கட்டுவாங்கத்தையும் ஏந்தி அபூர்வ பைரவராகக் காட்சியளிக்கிறார்.

பைரவ மூர்த்தத்தை விவரிக்கும்போது அறுபத்து நான்கு பைரவர்களை சிற்ப நூல்களும் சிவாகமங்களும் தெரிவிக்கின்றன. ஆனால் எட்டு பைரவர்களே முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக, அஷ்டபைரவர்களாக போற்றப்படுகிறார்கள்.

சிறப்பான எட்டு வடிவங்கள் அஷ்ட பைரவர் என்று அழைக்கப்படுகின்றன.

சிவன் கோயில்களில் கோஷ்டத்தைச் சுற்றி வரும் போது, பைரவரைத் தரிசிக்கலாம். ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி என்பது பைரவருக்கு விசேஷம். பைரவருக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்யலாம். அதேபோல் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சார்த்துவது போல பைரவருக்கு வடை மாலை சார்த்தி வழிபடலாம்.

முக்கியமாக, கார்த்திகை மாதத்து தேய்பிறை அஷ்டமியை மகாதேவாஷ்டமி என்றும் பைரவாஷ்டமி என்றும் போற்றுகிறார்கள். இன்று 7ம் தேதி திங்கட்கிழமை மகாதேவாஷ்டமி. பைரவாஷ்டமி. பைரவரை தரிசித்து, அவருக்கு செந்நிற மலர்கள் சூட்டி மனதார வேண்டிக்கொள்ளுங்கள். எதிர்ப்புகள் விலகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். காரியத் தடைகள் அனைத்தையும் நீக்கியருளுவார் பைரவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x